பாத்திமா மைந்தன்
இஸ்லாம் கூறும் விருந்தோம்பல் கருத்துகள், எல்லோராலும் விரும்பக் கூடியவை என்பது மட்டுமல்ல; விழுமிய கருத்துகளாகும்.
'அல்லாஹ் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தினரை நன்றாக உபசரித்துக் கொள்ளட்டும்' என்பது நபிமொழியாகும்.
விருந்தினரை உபசரித்தல் என்பது பல பரந்த அர்த்தங்களைக் கொண்டது. விருந்தினர்களுக்கு உணவளிப்பது மட்டுமல்ல; அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதும் உபசரிப்பில் அடங்கும்.
உங்கள் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் முதலில் அவருக்கு 'ஸலாம்' கூறி வரவேற்று அவருக்காக இறைவனிடம் பிரார்த்தித்து, நலம் விசாரித்துக் கொள்ளுங்கள்.
இதை திருக்குர்ஆனும் இவ்வாறுதான் அறிவுறுத்து கிறது:
'(நபியே!) இப்ராகீமிடம் வந்த கண்ணியத்திற்குரிய விருந்தாளிகளின் செய்தி உமக்குக் கிடைத்ததா? அவர்கள் அவரிடம் வந்தபோது, 'உம்மீது சாந்தி நிலவட்டும்' என்று அவர்கள் கூறினார்கள். அவர் கூறினார்: 'உங்கள் மீதும் சாந்தி நிலவுக' (51:24).
விருந்தினர்கள் நம் வீட்டுக்கு வரும்போது, மகிழ்ச்சியுடனும், முகமலர்ச்சியுடனும் வரவேற்க வேண்டும்.
விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தவுடன் நபி இப்ராகீம், அவர்களுக்குத் தேவையான உணவுக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு காளைக் கன்றைப் பொரித்து விருந்தினர்களுக்கு வைத்தார்கள்.
இது குறித்து திருமறை கூறுகிறது: '... அறிமுகம் இல்லாத ஆட்களாக இருக்கிறார்களே (என்று எண்ணினார்) பின்னர், அவர் சந்தடியில்லாமல் தம் வீட்டாரிடம் சென்றார்; (பொரிக்கப்பட்ட) கொழுத்த காளைக்கன்றைக் கொண்டு வந்து அதை விருந்தினர் முன் வைத்தார்'. (51:25)
விருந்தினர்களுக்குத் தெரியாமல் தன் இல்லத்தாரிடம் விருந்து உபசரிப்பை மறைமுகமாக இப்ராகீம் நபி மேற்கொள்ளச் சொன்னார் என்பது இந்த வசனத்தின் வரிகள் மூலம் விளங்குகிறது. நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை அறிந்தால், விருந்தினர்கள் மறுத்து விடக்கூடும் என்பதால் இந்த ரகசிய ஏற்பாடு.
விருந்தினர்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளை தயாரித்துக் கொடுப்பதில் இருந்து தங்குவதற்கு ஏற்பாடு செய்வது வரை தனிக் கவனம் செலுத்த வேண்டும். விருந்தினர்களின் வருகையை அறிந்து அவர்களுக்குத் தேவையான உணவு வகைகளை முன்கூட்டியே தயார் செய்து விட வேண்டும். சமையல் வேலைகள் அனைத்தும் முடிந்தால்தான் விருந்தினர்களுடன் அதிக நேரம் உரையாடி மகிழ முடியும்.
விருந்தினர்களுக்கு உணவை நாமே எடுத்து வைக்க வேண்டும்; வேலையாட்களைக் கொண்டு பரிமாறக் கூடாது.
யாராவது விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தால், அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நேரில் உபசரிப்பது வழக்கமாகும். விருந்தினர்கள் உணவருந்தும்போது தாமும் அவர்களோடு அமர்ந்து கொண்டு, 'இன்னும் கொஞ்சம் உண்ணுங்கள்; இன்னும் கொஞ்சம் உண்ணுங்கள்' என்று நபிகளார் கூறிக்கொண்டே இருப்பார்கள்.
விருந்தினர்கள் திருப்தியாக சாப்பிட்டு முடித்து விட்டு எப்போது 'போதும்' என்று மறுக்கிறார்களோ அப்போது நபிகளாரும் வற்புறுத்துவதை விட்டு விடுவார்கள்.
விருந்தினர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவைப் பரிமாற வேண்டும். அவர்கள் அருகே இருந்து உணவருந்தும் நாம் அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்து விடக் கூடாது. அப்படி நாம் விரைவாகச் சாப்பிட்டு முடித்தால் விருந்தினர்கள் அரைகுறையாக சாப்பிட்டு எழும் நிலை ஏற்படும். இதனால் நாம் மெதுவாகச் சாப்பிட வேண்டும். அல்லது அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும். அவர்கள் கை அலம்பிய பிறகே நாம் கை அலம்ப வேண்டும்.
வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் கண்ணியப் படுத்த வேண்டும். நீங்கள் அவர்களைக் கண்ணியப்படுத்துவது உண்மையில் நீங்கள் உங்களைக் கண்ணியப் படுத்திக் கொள்வதாகும். அவர்களுக்கு ஏதாவது கண்ணியக் குறைவு ஏற்பட்டால் அதைக் களைய துணிவுடன் களம் இறங்க வேண்டும்.
இறைத்தூதர் லூத் (அலை) அவர்களிடம் விருந்தினர்கள் வந்தபோது அவர்களுடைய சமூகத்தார் அவர்களை இழிவுபடுத்த முயன்றனர். அப்போது லூத் சிறிதளவும் விட்டுக் கொடுக்கவில்லை. விருந்தினர்களை இழிவு படுத்துவது தன்னை இழிவுபடுத்துவதாகும் என்று கருதினார்கள்.
லூத் கூறினார்: '(சகோதரர்களே!) இவர்கள் என்னுடைய விருந்தாளிகள். என்னை அவமானப்படுத்தி விடாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள்'. (திருக்குர்ஆன்-15:68)
விருந்தினர்களை வீட்டிற்கு வெளியே வந்து வரவேற்று அழைத்துச் செல்வதும், அவர்கள் திரும்பிச் செல்லும்போது வாசல் வரை சென்று வழியனுப்பி வைப்பதும் சிறந்தது.
உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால், அவர்கள் இறைவன் விதித்த விதிப்படி உங்கள் வீட்டுப்படியை மிதிக்கிறார்கள் என்று பொருள். ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உணவு அன்றைய தினம் எங்கே இருக்கிறது என்பதை இறைவன் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருக்கின்றான்.
'ஒவ்வொரு அரிசியிலும் உனது பெயர் எழுதப்பட்டிருக்கும்' என்பது அழகிய பழமொழி. இதில் அறிவார்ந்த கருத்துகள் அடங்கியுள்ளன. இன்று நாம் சென்னையில் இருக்கலாம்; நாளை சொந்தங்களைப் பார்ப்பதற்காகச் சொந்த ஊருக்குச் செல்லலாம். அதற்கு அடுத்த நாள் வெளிநாட்டுக்குப் போகலாம்.
நாம் எங்கு செல்கிறோமோ அங்கே நமது பெயர் எழுதப்பட்ட அரிசியோ அல்லது உணவு தானியமோ நமக்காகக் காத்திருக்கும். அந்தத் தானியங்களில் பெயர் எழுதப்படவில்லை என்றால், அந்த மனிதரின் இந்த உலக வாழ்வு நிறைவு பெற்றதாக அர்த்தம். இத்தகைய அர்த்தங்களை உள்ளடக்கிய பொன்மொழி அது.
உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவனே உணவளிக்கின்றான். 'எந்த உயிரினமும் அதற்கான உணவு அல்லாஹ்வின் மீது (பொறுப்பாக) இருந்ததே தவிர பூமியில் (வாழ்வது) இல்லை. இன்னும் அவை தங்கும் இடத்தையும், அவை அடங்கும் இடத்தையும் அவன் அறிவான்' (11:6).
'
வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்; நாமே உங்களுக்கும் உணவு அளிக்கிறோம். அவர்களுக்கும் அளிப்போம்' (6:151).
மேற்கண்டவை திருமறையின் இறை வசனங்கள்.
from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>
No comments:
Post a Comment