Tuesday, August 16, 2016

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவு ..../ ராணுவ ஆக்கிரமிப்பு மூன்றாம் பாகம் ....

Abdul Gafoor
 
இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ....

எனது நினைவுச் சக்கரங்கள் சுழல்கிறது ...

குவைத் தேசத்தை தனது மடியினில் அமர்த்தி உச்சி முகர்ந்து முத்தமிடும் நட்பு தேசமான சவுதி அரேபியாவையும் ஆக்கிரமிக்க தமது படைகளுக்கு கனத்த குரலில் சதாம் உசைன் உத்தரவு பிறப்பித்து சவுதி மன்னரின் தூக்கத்தை கலைத்து துக்கத்தை தருகிறார் ....

பஹாஹீல் நகரத்தில் நுழைந்த ராணுவத்தை காண நாங்கள் வசிக்கும் எங்கள் வீட்டிலிருந்து 50 மீட்டர் தூரமிருக்கும் முக்கிய சாலைக்கு சென்றதும் பீரங்கி வண்டிகளில் ராணுவப் படைகள் ஆணவ நடைகள் போட்டு சவுதிக்கு செல்லும் சாலைகளில் அணிவகுக்கும் காட்சிகள் எங்களை பிரமிக்க வைத்தது ....

அசர வைக்கும் சதாமின் அறிவிப்பால் சவுதி அரசாங்கம் அவசர கூட்டத்தை கூட்டி தமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த தீவிர ஆலோசனையில் மூழ்கி இறுதியில் ...
நல்லரசு நாடான சவுதி அரேபியா வல்லரசு நாடான அமெரிக்காவின் கதவுகளை தட்டுகிறது ....

பசியோடு காத்திருக்கும் அமெரிக்க அதிபர் சீனியர் புஷ் குசியோடு கதவுகளை திறக்கிறார்..
தீப்பந்தம் போல் எரியும் சவுதியின் சூழலை சமாளிக்க இரு நாடுகளுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது ....

தமது உள்ளத்தில் புரண்ட மகிழ்ச்சியோடு சவுதியில் திரண்ட எண்ணெய் வளத்தின் பொருளாதாரத்தை சுரண்ட அமெரிக்க ராணுவ விமானங்கள் முக்கிய தளபதிகளோடு சில மணித் துளிகளில் சவுதியில் தனது இறக்கைகளை விரிக்கிறது ....

இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மன் போன்ற நேச ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் முதுகில் அமர்ந்து தமது படைகளையும் சவுதிக்கு அனுப்புகிறது ....
தன்னாட்டு மக்களை பாதுகாக்க பன்னாட்டு படைகளை சவுதி அரசாங்கம் இரு கை நீட்டி வரவேற்கிறது ....

குவைத்தியர்களை சிறைப் பிடிக்கவும் அடிபணியாதோரை சுட்டுத் தள்ளவும் ஈராக் ராணுவம் தயங்கமின்றி செயலாற்றுகிறது ....

ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு அவசரமாக தீர்மானம் நிறைவேற்றி ஈராக்கிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கிறது ...
நாட்கள் விரைந்து செல்கிறது எங்களது நம்பிக்கையும் கரைந்து செல்கிறது ....

ஐநா சபையின் பொதுச் செயலாளர் சதாமையும் அவரது வலக் கரமான வெளிநாட்டு மந்திரி தாரிக் அஜீஸையும் சந்தித்து பல முறை பேச்சு வார்த்தை நிகழ்த்தியும் தோல்வியை தழுவுகிறது ...

சதாமின் நண்பர் எகிப்து அதிபர் முபாறக்கும் சதாமை தொடர்பு கொண்டு படைகளை விலக்கச் சொல்லியும் சதாம் மசியவில்லை ...

எங்களை சுற்றி வாழ்ந்த குவைத்தியர்கள் இடமாற்றம் செய்து பக்கத்து நாடுகளுக்கு தப்புவதால் ஆள் நடமாட்டம் குறைகிறது ...
குடிநீர் பால் உணவுப் பொருட்களை விற்பனை கடைகளும் மூடப்படுகிறது ....

ஆகார கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிட்டு வாழ்ந்த எங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு என்கிற பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து எங்களை வலுவிழக்கச் செய்கிறது .....

தொடரும் ...
இன்ஷா அல்லாஹ் ....
அன்புடன் Abdul Gafoorஅப்துல் கபூர்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails