அப்ரஹா
*********
#அபிசீனிய_சக்கரவர்த்தியின்யெமன் நாட்டு ஆளுநராக இருந்தவன் #அப்ரஹா.
மக்காவிலிருந்த கஃபாவை தரிசிக்க மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வருவதை பொறுக்க முடியாத இவன்
தன் தலைநகர் சன்ஆவில்
#காலிஸ் எனும் பிரம்மாண்ட ஆலயம் ஒன்றை கட்டி எழுப்பினான்.
கஃபாவுக்குச் செல்லும் மக்களை
காலிசுக்கு திரும்ப வைப்பதே
தனது லட்சியம் என்றும் அறிவித்தான்.
ஒருநாள் நுபைல் என்பவன் காலிஸ் ஆலயத்தில் ஓரிரவைத் தான் கழிக்க விரும்புவதாகக்கூறி அனுமதிபெற்று
அங்கே மலஜலம் கழித்து விட்டு ஓடிவிட்டான்.
இதை கேள்விப்பட்ட அப்ரஹா
கோபத்தில் கொந்தளித்தான்.
கஃபா இருக்கும் வரை தான் கட்டிய
காலிஸ் ஆலயத்திற்கு மரியாதை கிடைக்க வாய்ப்பே இல்லை என்று எண்ணி மக்காவின் மீது தாக்குதல் நடத்த பெரும் யானைப் படையோடு புறப்பட்டான்.
வழியில் அவனை தடுத்து நிறுத்த நினைத்தவர்களை தீர்த்துக் கட்டினான்.
கிபி. 570 ல் அவன் மக்காவை அடைந்து அங்குள்ள கால்நடைகளைக் கொள்ளையடித்தான்.
அதில் அப்துல் முத்தலிபின் இருநூறு ஒட்டகங்களும் இருந்தன.
தான் படையெடுத்து வந்த காரணத்தை மக்காவின் தலைவராக இருந்த
அப்துல் முத்தலிபுக்கு அவன் சொல்லி அனுப்பினான்.
அவனைக் காண வந்த அப்துல் முத்தலிப் தனது ஒட்டகைகளை திருப்பித் தருமாறு கேட்டார்.
அப்ரஹா ஆச்சரியத்தோடு...
" நான் கஃபாவை அழிக்க வந்திருக்கிறேன்.. அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் உங்கள் ஒட்டகையை மட்டும் கேட்கிறீர்களே" என்று கேட்டான்.
அப்துல் முத்தலிப் அமைதியாகச் சொன்னார்..
" ஒட்டகைகளுக்கு நான் எஜமானன். அதனால் அதைப்பற்றி பேச வந்திருக்கிறேன். கஃபாவின் எஜமானன் வேறொருவன். காபாவை அவன் பார்த்துக் கொள்வான் " என்றார்.
ஆபிரகாவுக்கு அப்போதே அபசகுனம் தட்டியது. ஆனாலும் ...
யானைப்படையை கஃபாவை நோக்கி நகர்த்தினான்.
அதில் " மஹ்மூத் " என்ற வெள்ளை யானை மட்டும் நகராமல் அங்கேயே படுத்து விட்டது. என்னதான் அதை துன்புறுத்திய போதும் அந்த வெள்ளை யானை அசையவில்லை.
அப்போது ...
வானிலிருந்து ஒரு பெரும் படையைப்போல புறப்பட்டு வந்தன அபாபீல் பறவைகள்.
அவை தங்கள் அலகிலும் கால்களிலும் சிறு சிறு கற்களை எடுத்து வந்தன.
அந்த அற்புதக் காட்சியை மக்காவின் மலைக் குன்றுகளில் இருந்து குறைஷிகள்
பார்த்து வியந்தார்கள்.
விரைந்து வந்த அபாபீல் பறவைகள் அப்ரஹாவின் யானைப்படையின் மீது தாங்கள் கொண்டு வந்த சிறு சிறு
கற்களை வீசி எறிந்தன.
அந்த சிறு கற்களின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் யானைகள் மிரண்டு ஓடின. அவற்றின் மிதிபட்டு வீரர்கள் மடிந்தார்கள்.
கல்வீச்சின் வேதனைத் தாங்காமல் ஏராளம் பேர் செத்தார்கள்.
அப்ரஹா தன் குதிரையில் ஏறி தப்பி ஓடினான்.
அவனை ஒரு அபாபீல் பறவை துரத்திச் சென்று தாக்கியது.
அவன் மீது ஒரு கல்லை வீசியது. அப்ரஹாவின் கை விரல்கள் அழுகி விழுந்தன.
அந்தப்பறவை விடாமல் அவனை துரத்தியது. அதனிடமிருந்து தப்பி அவன் தன் தலைநகரை அடைந்த போது
அரைகுறை உயிரோடு இருந்தான்.
அப்போது அவனை துரத்தி வந்த
அபாபீல் பறவை அவன் தலையில்
ஒரு கல்லைப்போட்டது.
அதன் வேதனை தாங்காமல் அவன் அப்போதே சுருண்டு விழுந்து செத்தான்.
அவன் கட்டி எழுப்பிய காலிஸ் ஆலயம் பாழடைந்தது. அங்கே ஜின்களும் ஷெய்த்தான்களும் குடியேறின.
அங்கே யாராவது சென்றால் அவர்களை தரித்திரமும் கேடுகளும் சூழ்ந்தன.
புனித கஃபாவை அழிக்க நினைத்து அழிந்து போனவனின் வரலாறு இது.
இறை மறையும் இந்த வரலாறை
பதிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment