Wednesday, June 21, 2017

லைலத்துல்கத்ர் ! / !Abu Haashima

லைலத்துல்கத்ர் !
 ரமளானைப் பற்றிய மினி தொடரின் இன்றைய அத்தியாயம் ...
#லைலத்துல்கத்ர் !
ரமளானின் மாபெரும் கொடையாக இறைவன் வழங்கி இருக்கும்
வியத்தகு பரிசு லைலத்துல் கத்ர் என்னும் இரவு !
இந்த இரவு எத்தனை சிறப்பு வாய்ந்தது என்பதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை .
ஏனென்றால் ...
" கடலை மையாகவும் உலகத்திலுள்ள மரங்களை எல்லாம் எழுதுகோலாகவும் ஆக்கி
அருள்மறை குர் ஆனுக்கு விளக்கம் எழுத முற்பட்டாலும் அதனை
எழுதி முடிக்க முடியாது ".
என்று இறைவன் கூறுகிறான்.
அப்படிப்பட்ட இறைவேதம் குர் ஆன் இந்த இரவில்தான் நபிகள் பெருமானார் ( ஸல் ) அவர்களுக்கு அருளப்பட்டது.

#அஞ்ஞான_இருட்டின் 
அழுக்குப் படிந்த போர்வைக்குள்
உலகம் சுருண்டு கிடந்தபோது
மெஞ்ஞான வெளிச்சம்
நூரே முஹம்மதிய்யா
ஹிரா குகைக்குள்
தனித்திருந்து
விழித்திருந்து
இறையருளுக்கு
தவமிருந்தது !
வானவர் கோமான் ஜிப்ரயீல் ( அலை ) அவர்கள் ரமளானுடைய
லைலத்துல் கத்ர் இரவிலேதான் இறைவேதத்தைக் கொண்டு வந்தார்.
" ஓதுவீராக !
உம்முடைய இறைவனின்
திருப்பெயரைக் கொண்டு
ஓதுவீராக !
இறைவன்
அனைத்தையும் படைத்தவன் ... "
என்ற வேத வரிகளை நபிகள் பெருமான் ( ஸல் ) அவர்களுக்கு ஜிப்ரயீல் ( அலை ) ஓதிக் காட்டினார்.
அண்ணல் முஹம்மது
" முஹம்மது ரஸூலுல்லாஹ் " ஆனது
அந்த இரவிலேதான் !
அப்படிப்பட்ட அற்புதமான
அந்த இரவை தவற விடக்கூடாது என்று
முஸ்லிம்கள் அத்தனை பேரும் ஆசைப்படுவதில்
ஆச்சரியம் எதுவும் இல்லை !
#அன்றைய_இரவு ...
பள்ளிவாசல்கள் அனைத்திலும்
விடிய விடிய இறைமறை ஓதப்படுகிறது !
மக்கள் கூடியிருந்தும்
தனித்தனியாகவும்
அல்லாஹ்வை
அழுதும் தொழுதும்
தங்கள் பாவங்களை மன்னிக்க வேண்டுகிறார்கள் !
தங்கள் கஷ்டங்களை போக்க
தங்கள் தேவைகள் நிறைவேற
தங்கள் மனைவி மக்கள்
சுற்றம் நட்பு என அத்தனை பேருக்காவும்
இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள் !
தாங்கள் வாழும் நாட்டில்
அமைதியும்
நல்லிணக்கமும் ஏற்பட்டு
மக்கள் அனைவரும்
சகோதரத்துவத்தோடு வாழ
இறைவனிடம் துஆ செய்கிறார்கள் !
பள்ளிவாசலுக்கு வரும் மக்கள் அனைவருக்கும்
இனிப்புகளும் உணவும் வழங்கப்படுகின்றன !
நோன்புப் பெருநாளின் முதல் பெருநாளைப்போல
" லைலத்துல் கத்ர் " கொண்டாடப்படுகிறது !
#லைலத்துல்_கத்ரைப் பற்றி இறைவன் என்ன கூறுகிறான் ?
" நிச்சயமாக நாம் ( குர் ஆனாகிய ) இதனை
கண்ணியமிக்க இரவில் இறக்கி வைத்தோம் .
( நபியே ) கண்ணியமிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா ?
( அந்த ) கண்ணியமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும் .
அதில் வானவர்களும்
( ஜிப்ரீலாகிய பரிசுத்த ) ஆன்மாவும்
தங்களுடைய இறைவனின் கட்டளையைக் கொண்டு சகல காரியத்தின் பொருட்டும்
( பூமியில் ) இறங்குகின்றனர்.
அது சாந்தியான இரவாகும்.
அது ..
அதிகாலை உதயமாவது வரை இருக்கும் "
என்று அல்லாஹ் " அல் அக்தர் " என்ற அத்தியாயத்தில்
லைலத்துல் கத்ருக்கு விளக்கம் தருகிறான்.
" இந்த இரவை ரமளானின் பிந்திய பத்து இரவுகளில் ஒற்றைப்படை இரவுகளில்
தேடிக் கொள்ளுங்கள் "
என்று நபிகள் ( ஸல் ) அவர்கள் கூறி இருக்கிறார்கள்.
" லைலத்துல் கத்ர் ரமளானின் 27 வது இரவு " என்றுநபிகள் ( ஸல் ) அவர்கள் கூறியதாக முஆவியா ( ரலி ) அறிவிக்கிறார்.
புனிதமிக்க லைலத்துல் கத்ர் இரவை பெற்றுக் கொள்ளும்
பாக்கியத்தை உலக முஸ்லிம்கள் அனைவருக்கும்
அளவற்ற அருளாளன் அல்லாஹ்
தந்தருள்வானாக !

Abu Haashima

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails