மல்லிகைப்பூச் சூடிய ஹூருலீன்களும் சதுப்பு நிலத்தில் புதைந்த பாதச்சுவடுகளும்
#நிஷாமன்சூர்
சீத்தலைச் சாத்தனாரின் ஆணி நுனியில் கற்றுக்கொண்டோம்
எம் தாய்மொழியின் கூர் வன்மையை.
அரபுமொழியில் இறைமறையை ஓதும்போதும்
அதன் ஆழ அகலங்கள் குறித்து
எம் தமிழின் ஒளியில்தான் சிந்தித்துத் தெளிந்தோம்
உமர்கய்யாமின் கோப்பையில் ததும்பிக்கொண்டிருக்கும் ஞானத்தை மிடறுமிடறாய் அருந்தி
ஆசான் ரூமியின் நெற்றிக்காய்ப்பு பதிந்த தொழுகைப்பாயில் தந்திரம் விற்றுப் பேரின்பம் யாசித்துக் கொண்டிருக்கிருந்தபோதும்
எமது வேர்கள் யாதனின் யாதனின் நீங்கியான் நோதலில் ஆழப்புதைந்து புரிதலில் ஒளிர்ந்தன.
இறையாற்றலை விளக்கிய அல்ஹம்து சூராவும்
இஹ்லாஸ் சூராவும் எம் பாட்டன் குணங்குடியார்
"அணைந்து உயிர்க்குயிராய் அலர் மடல் அவிழ்ந்த
அகண்டிதாகார மாமலரின் மணம் கமழ் நயினார்" என இயம்பிய தருணத்தில் இதயத்துள் பொதிந்தன.
பாரசீகரோஜாவும் குலிஸ்தானும் மஸ்னவியும் ஹகீம் ஷெனாயும் எமக்குள்
மாயமாமலர்களை மணம்வீச வைத்தபோது
எமது பாதங்கள்
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தின் மல்லிகைத் தோட்டத்துச் சதுப்பு நிலத்துச் சேற்றில் ஊறி வெளுத்திருந்தன.
பூச்சூடுவதும் வாழைமரம் நடுவதும்
இஸ்லாமிய மரபல்ல என்றொரு சிறுகுழுவினர் மறுத்தபோதும்
சுவனக் கண்ணழகிகள் ஹூருலீன்களைக் கற்பனிக்கும்போதும்கூட அவர்களுக்கு மல்லிகைப்பூச்சூடிக் கற்பனித்தோம்
எம் தமிழ்ப்பாட்டன் உமறுப்புலவர் ஒருபடி மேலேபோய்
பாலைவனத்தில் நிகழ்ந்த நபித்திருமேனியின் மகளாரின் திருமணத்தில்
வாழைமரம் நட்டு அழகு பார்த்தார்
கண்மணி நாயகத்தின் மேனியில் சுரந்த
பாலைவன வியர்வையில்
கஸ்தூரி மணப்பதாய் எம் அன்னையர்
குப்பியில் சேகரித்துப் பூசிமகிழ்ந்தபோதும்
அது சாம்பிராணி மணம்போல இருக்குமாவென
விசாரித்தறிந்துதான் மனதிற் பொருத்தினோம்
சுவர்க்கத்து உயர்தர உணவுவகைகளை
எமது ஆசிரியர்கள் நயந்து பூரித்த தருணத்தில்
இட்லி தோசை கிடைக்கும்தானே என
உறுதிப்படுத்திக் கொண்டு அமைதி கொண்டோம்
எமது மார்க்கம் விளைந்த மக்காவும் மதினாவும் எமது புனித மண் எனினும்
எமது வேர்கள் பதிந்து விழுதுகள் செழித்த தமிழகமே எம் தாய்மண்
எம் நேசத்துக்குரிய சகோதரர்களுக்கு ஒரு அன்பான விண்ணப்பம்,
நாங்கள் தமிழர்கள்
ஆனால் தமிழருக்கான வரையறைகளை எமக்குள் திணிக்காதீர்
நாங்கள் இந்தியர்கள்
ஆனால் இந்தியருக்கான புதிய சட்டங்களை
எம்மீது சுமத்தாதீர்
நாங்கள் முஸ்லீம்கள்
ஆனால் முஸ்லீம்களுக்கான கற்பிதச் சட்டகங்களுக்குள் எம்மைப் புகுத்தாதீர்.
குறிப்புகள்:
1.ஹூருலீன்கள் -திருக்குர்ஆனில் குறிப்பிடப்படும் சுவனக் கண்ணழகிகள்
2.நபிகள் நாயகம் அவர்களின் வியர்வைகூட கஸ்தூரி வாசம் வீசும்,அதனை குப்பியில் சேகரித்து நறுமணமாகப் பூசிக்கொள்வார்கள் என்கிற சான்று
3.உமறுப்புலவரின் சீறாப்புராண மேற்கோள்
No comments:
Post a Comment