கண்ணதாசன் கண்ட இஸ்லாம்! (ஆய்வு)
“இஸ்லாமியத் திருமறையின் முதல் இரண்டு பாகங்களைப் பூர்த்தி செய்ததில் என் பங்கும் முழுக்க இருந்தாலும், அதன் கவிதை மற்றும் ஒவ்வொரு வாக்கியத்தின் தமிழ் நடையும் கவிஞரால் சரி செய்யப்பட்டவையாகும்.
“அல்ஃபாத்திஹா” எனும் “அல்ஹம்து சூராவை” அழகிய தமிழில் “திறப்பு” கவிதையாகக் கவிஞர் தந்துள்ள சிறப்பு ஒன்றுக்கே அவர் இறைவனின் கருணைக்கும் மகிழ்ச்சிக்கும் என்றென்றும் பாத்திரமாகி இருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.”
அப்பாஸ் இப்ராஹீம்
“இனிய தமிழில் இஸ்லாமியத் திருமறை”
மூன்றாம், நான்காம் பாகங்கள் பக். VI
கண்ணதாசனின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு
திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதுவதற்காகக் கவிஞர் கண்ணதாசன் மேற்கொண்ட முயற்சி, முஸ்லிம் அன்பர்கள் சிலரின் எதிர்ப்பால் தடைப்பட்டுப் போயிற்று. குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் குர்ஆனுக்கு உரையெழுதக் கூடாது என்று உலமா பெருமக்கள் சிலர் எதிர்த்தனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த கவிஞர், எவர் மனமும் புண்படக் கூடாதென்ற நல்ல எண்ணத்தில் தம் முயற்சியை நிறுத்திக் கொண்டார்.
ஆயினும் திருமறையின் தோற்றுவாய் எனப்படும் முதல் அத்தியாயத்துக்கு அவர் எழுதியுள்ள மொழி பெயர்ப்பு இறையருளால் நமக்குக் கிடைத்துள்ளது. அழகிய தமிழில், எளிய நடையில் கவிதையாகக் கவிஞர் கண்ணதாசன் தந்துள்ள மொழியாக்கம், அவர் தம் திருக்குர்ஆன் புலமைக்கும், மொழிபெயர்ப்புத் திறனுக்கும் சான்றாகத் திகழ்கிறது.
திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம் “அல்ஃபாத்திஹா” அல்லது “தோற்றுவாய்” என்று அழைக்கப்படும். இறைவனின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் இந்த அத்தியாயம் அரபி மொழியில் ஏழு வசனங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
“அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்;
அர்ரஹ்மான் நிர்ரஹிம்; மாலிகி யவ்மித்தீன்;
இய்யாக்க நஹ்புது வ இய்யாக்க நஸ்தயீன்;
இஹ்திநஸ் ஸிராத்தல் முஸ்தகீம்; ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம் ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்”
ஒவ்வொரு தொழுகையின் போதும் நிற்கின்ற நிலையில் கட்டாயம் ஓதப்படுகின்ற திரு வசனங்களாக இவை உள்ளன. இருபத்தைந்து அரபி சொற் களில் அமைந்துள்ள இந்த ஏழு வசனங்களையும் மனனம் செய்யாத முஸ்லிம்களே உலகில் இல்லை எனலாம்.
கண்ணதாசனின் மொழிபெயர்ப்புத் திறனை உணர் வதற்கு முன்னர், இதன் தமிழாக்கத்தை அறிந்து கொள்வோம்.
அரபி மூலம் – தமிழாக்கம்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
அகில உலகைப் படைத்து நிர்வகிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்
அர் ரஹ்மானிர் ரஹீம்
(அவன்) அளவிலா அருளாளன்; நிகரில்லா அன்புடையோன்.
மாலிகி யவ்மித்தீன்
அவனே மறுமை நாளின் அதிபதி.
இய்யாக்க நஹ்புது
(ஏக இறைவனே!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;
வ இய்யாக்க நஸ்தயீன்
உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்.
இஹ்தினஸ் ஸிராத்தல்
எங்களை நேரான வழியில் முஸ்தகீம் செலுத்துவாயாக!
ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம்
எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களுடைய வழியில் நடத்துவாயாக!
ஹைரில் மஹ்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்
அவ்வழி உன் கோபத்துக்கு உள்ளானவர்களுடையதும் அல்ல;
வழி தவறியவர்களுடையதும் அல்ல.
திருமறையின் தோற்றுவாயாக விளங்கும் “அல் ஃபாத்திஹா” எனப்படும் இதன் அரபி மூலத்தையும் தமிழாக்கத்தையும் கவியரசர் கண்ணதாசன் ஆழ்ந்துணர்ந்து “திறப்பு” என்ற தலைப்பில் மொழியாக்கமாகத் தந்துள்ளார்.
திறப்பு
எல்லையிலா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வைத் துணைகொண்டு
ஆரம்பம் செய்கின்றேன்.
* * *
உலகமெலாம் காக்கின்ற
உயர்தலைவன் அல்லாவே
தோன்றுபுகழ் அனைத்திற்கும்
சொந்தமென நிற்பவனாம்;
அவன் அருளாளன்;
அன்புடையோன்;
நீதித் திருநாளின்
நிலையான பெருந்தலைவன்;
உன்னையே நாங்கள்
உறுதியாய் வணங்குகிறோம்;
உன்னுடைய உதவியையே
ஓயாமல் கோருகிறோம்;
நேரான பாதையிலே
நீ எம்மை நடத்திடுவாய்;
அருளைக் கொடையாக்கி
யார் மீது சொரிந்தனையோ
அவர்களது பாதையிலே
அடியவரை நடத்தி விடு!
எவர்மீது உன் கோபம்
எப்போதும் இறங்கிடுமோ
எவர்கள் வழிதவறி
இடம் மாறிப் போனாரோ
அவர்களது வழி விட்டு
அடியவரைக் காத்து விடு!”
- கண்ணதாசன்
எத்தனையோ முஸ்லிம் தமிழ்க் கவிஞர்கள் இப்பகுதியை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். ஆயினும் கவியரசர் கண்ணதாசனுடைய மொழியாக்கத்திலுள்ள இனிமையும், எளிமையும், தெளிவும், தேர்ந்த சொல்லாட்சித் திறனும் பிற கவிஞர்களிடம் இல்லை என்பது முற்றிலும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. எல்லாவற்றுக்கும் மேலாகத் திருக்குர்ஆன் வசனங்களின் கருத்துகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல், கற்பனைக் கலப்பில்லாமல் உயிரோட்டமாக மொழியாக்கம் செய்திருப்பது கவியரசர் கண்ணதாசனின் மேல் நமக்குப் பெருமதிப்பை ஏற்படுத்துகிறது. திருக்குர்ஆன் முழுமைக்கும் கவிஞரின் விளக்கவுரை கிடைக்காமல் போயிற்றே என்ற ஏக்கமும் உடன் எழுகின்றது.