(இது குருநாகல் பிரதேச தென்னந்தோப்பு ஒன்று)
11.
தென்னையோடு தொடர்புடைய பேச்சு வழக்குச் சொற்கள்:
கலட்டிக்காய்
குரும்பை
குரும்பட்டி
தென்னம்பூரி
புள்ளப் பால
Bபோலாத்த - பூக்கமாறு
முகுல்
ஓல நெய்தல்
குருமிணியான்
அடி மட்டை
உரி மட்டை
ஓலக் கூந்தல்
சூள்
bபொட
1. தேங்காய்க்கும் இளநீருக்கும் இடைப்பட்ட பருவம் - கலட்டிக்காய்
2.இளநீர் - குரும்பை
3.இளநீரிலும் சிறிய பருவம்- குரும்பட்டி
4. தென்னம் பூ- தென்னம்பூரி
5.பாளை மரத்தோடு பொருந்தும் பகுதியில் பாளையோடு ஒட்டியிருக்கும் பகுதி (பாளையை விட மெல்லியது பன்னாடையை விட கடினமானது) - புள்ளப் பால
6.தென்னங்குலையில் தேங்காய்கள் வீழ்ந்த பின்னர் எஞ்சும் பகுதி- Bபோலாத்த அல்லது பூக்கமாறு
7.தேங்காய், குலையுடன் பொருந்தும் காம்புப் பகுதி- முகுல்
8.கிடுகு பின்னுதல்- ஓலை நெய்தல்
9. தென்னை நீள் மூஞ்சி வண்டு - குருமிணியான் (சிங்களத்திலிருந்து மருவியது)
10. தென்னை ஓலையின் மட்டை- அடி மட்டை
11. தேங்காய் உரித்தபின் வரும் தேங்காய் மட்டை- உரி மட்டை
12.ஓலையின் நுனிப் பகுதி - ஓலைக் கூந்தல்
13. ஓலையின் நுனிப் பகுதியைச் சுற்றிக் கட்டி பற்ற வைக்கும் தீப்பந்தம்- சூள்
.14.தென்னையின் கழுத்துப் பகுதி- bபொட* (சிங்களச் சொல்)
பொறுமை உள்ளவர்கள்,
கோபப்படாதவர்கள்,
சகிப்புத்தன்மையுள்ளவர்கள் மாத்திரம்
தொடர்ந்து வாசிக்கலாம்.
தென்ன மறம் bபுளுந்தா இல்லாட்டி வெட்டினா அதுற ஈந்து தென்னங் குருத்த வெட்டி எடுப்பாங்க.அதுற குருத்து நள்ள ருசியா ஈக்கும்.அத மிச்சமாத் திண்டா சத்தி போகும் இல்லாட்டி தள சுத்தும்.
சின்ன வயசில அதுக்கு நான் நள்ள புரியம். எப்பிடியானும் சறி நானாட்ட செல்லி வெட்றது தான்.
என்னத்த? இத வாசிக்கிற ஒங்குளுக்கு தள சுத்துறா?
ப்ரகாஷ் தான் எளுதச் சென்னாருண்டு இப்பிடியா எளுதுற. என்னத்த பிச்சா?
மேலே உள்ள பகுதியை வாசித்து நாவு சுளுக்கியிருந்தால் அதற்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பல்ல. என்னை இங்கே எழுதக் கூப்பிட்டவர்களே அதற்குப் பொறுப்பாவார்கள்.
தென்னை மரங்கள் வீழ்ந்தால் அல்லது வெட்டினால் ஓலைகள் பொருந்தியிருக்கும் நுனிப் பகுதியை வெட்டி அதனுள்ளே இருக்கும் இளம் குருத்துப் பகுதியை வேறாக்கி எடுப்பார்கள்.தெனனையின் எல்லா பச்சை மட்டைகளையும் வெட்டிய பின்னரே உள்ளே இருக்கும் வெண்ணிற இளம் குருத்துப் பகுதியை வேறாக்கி எடுக்க முடியும்.அந்தப் பகுதி இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.அதிகம் சாப்பிட்டால் வாந்தி போகும்.(அதனையும் bபொட என்றே அழைப்பர்.)
சிறிய வயதில் அதைச் சாப்பிடுவதில் எனக்கும் விருப்பமிருந்தது.நான் அண்ணாவை (பெரியம்மாவின் மகன்- சர்தார் நானா) நச்சரித்துக் கொண்டே இருப்பேன்.
அண்ணாவின் கையில் தொங்கிக் கொண்டு திரிவேன்.
(அண்ணா 10 ,11ம் வகுப்புகளில் படிக்கும் பருவம்: இளமைக்கால வே.பிரபாகரன் அவர்களின் சாயலில் இருப்பான். உயரம் பருமன் எல்லாமும் தான்)
"சர்தார் நானா வெட்டித்தாங்க".
"சர்தார் நானா.... வெட்டித்தாங்க...".
"சர்தார் நானா..... வெட்டித்தா...ங்..க"
(போகப்போக தொனியும் வேறுபடும்)
வீட்டில் அண்ணாவுக்கு ஏச்சுக் கிடைக்கும் என்பதால் அண்ணா உடனடியாக வெட்டித் தரமாட்டான்.
(அதைச் சாப்பிட்டால் உணவு சாப்பிட மாட்டேன். அல்லது வாந்தி போகும். இவை நிகழ்ந்தால் அண்ணாவுக்கு ஏச்சு விழும்.சிறிய வயதில் எனக்குச் சாப்பாட்டோடும் மருந்தோடும் எட்டாப்பகை இருந்தது. இப்பமட்டும் என்னவாம் என்று யாரோ சொல்வது கேட்கிறது)
அண்ணா வெட்டித்தராமல் ஒளிந்து திரிய எனது மரியாதையும் கூடிப்போகும்.
" சர்தார் நானா வெட்டித்தாடா...."
"டேய்.... வெட்டித் தாடா "
பிறகு பெரியம்மாவிடம் போய் அழுது முறையிட்டு எப்படியாவது அண்ணாவைப் பாடாய்ப் படுத்தி வெட்டி எடுத்த பின்னர் அதில் சிறிய ஒரு துண்டைத் தான் சாப்பிட்டிருப்பேன்.... ..
பிறகு என்ன நடந்திருக்கும் என்று யாரும் கேட்க வேண்டாம்.....
No comments:
Post a Comment