Saturday, July 31, 2010

சத்தியமார்க்கம்.காம் தள அறிமுகம்


சத்தியமார்க்கம்.காம்நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கூறினார்கள்: ''...என்னிடமிருந்து (நீங்கள் அறிந்து கொண்டது) ஒரே ஒரு வசனமாயிருப்பினும் அதை பிறருக்குச் சேர்ப்பித்து விடுங்கள்...'' (ஸஹீஹூல் புகாரி)


     "பருவத்தே பயிர் செய்" என்பது ஆன்றோர் வாக்கு. காலம் கடந்த ஞானோதயத்திற்கு எவ்விதப் பலனும் இல்லை என்பதை இன்று முஸ்லிம் சமுதாயம் கண்கூடாகக் கண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் உலகத்தின் வளர்ச்சிக்கு ஒப்பத் தன்னை தயார் படுத்திக் கொள்ளாத முஸ்லிம் சமுதாயம், இன்று தனது கைகளை விட்டுப் போன அல்லது எதிர்கால சமுதாய முன்னேற்றத்துக்கு பயன்படுத்த வேண்டிய ஊடகத் துறையின் சிறப்பைத் தெரியாமல் இருந்ததன் பலனை இன்று உலகளாவிய அளவில் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த சில வருடங்களில் உலகில் ஊடகத்தால் ஏற்பட்ட விளைவுகள் எண்ணிலடங்கா! உலகின் கடந்த கால நிகழ்வுகளில் ஊடகம் மிகப் பெரிய பங்கு வகித்துள்ளது. இன்று உலக மக்களால் முஸ்லிம் சமுதாயம் ஒருவிதப் பயங்கரவாத சமுதாயமாக பார்க்கப்படுவதற்கு மிக முக்கிய காரணம் ஊடகங்களே எனில் அது மிகையாகாது. இதனை இன்று எழுதித் தெரிய வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. அந்த அளவிற்கு இது வெளிப்படையான ஒரு விஷயமாகும்.
"ஒரு பொய் திரும்பத் திரும்ப கூறப்படின் அது உண்மையாகும்" என்ற கோயபல்ஸ் தத்துவத்திற்கு மிகப் பெரிய இலக்கணமாக இன்று முஸ்லிம் சமுதாயம் விளங்குகிறது. உலகில் உயர்வு தாழ்விலா சமத்துவமிக்க சமுதாய அமைப்பு நிறுவக் கூடிய சாத்தியக்கூறுள்ள ஒரே வழி இஸ்லாமாக இருக்கையில், அதனைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம் சமுதாயம் இன்று உலக மக்களால் "தீவிரவாதிகளாக", "பயங்கரவாதிகளாகப்" பார்க்கப்படுகிறது எனில் இது போன்ற வேடிக்கையான, நம்ப முடியாத விஷயம் வேறு ஏதாவது இவ்வுலகில் இருக்குமா?

முஸ்லிம் சமுதாயத்தின் மீதான இந்த களங்கத்தின் (பொய் குற்றச்சாட்டின்) மூலத்தையும், அதன் காரணங்களையும் ஒருவாறு பரவலாக அனைவரும் அறிந்திருந்தாலும், "அவர்கள் பயங்கரவாதிகள்" என்ற சிந்தனை ஓட்டம் பாமரர்களின் மத்தியில் ஆழமாக விதைக்கப் பட்டதை மாற்றுவது என்பது எளிதில் நடக்கக் கூடிய காரியமன்று. எனினும் முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்காலம் இதில் தான் அடங்கியுள்ளது. தங்கள் மீது வலிந்து திணிக்கப் பட்ட இக்கறையை எவ்வளவு விரைவில் நீக்குகிறார்களோ அவ்வளவு வேகத்தில் இச்சமுதாயம் வளரும்.

இதற்கு முஸ்லிம் சமுதாயம் செய்ய வேண்டிய முக்கிய காரியங்களில் தலையாயது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தங்களது பாதையை செம்மையாக்குவதாகும். எப்படி கடந்த காலங்களில் சமுதாயத்துக்கு ஏற்படும் எதிர்காலச் சவால்களை கணக்கில் கொண்டு உலகின் வளர்ச்சியில் அதன் நீரோட்டத்தில் கலக்கவில்லையோ அது போல் இனி இருத்தல் சமுதாயத்தின் அழிவிற்கே வழி வகுக்கும்.

அந்த வகையில் இனி எதிர்காலத்தை நிர்ணயிப்பது எது என ஆராய்ந்தால், அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு அளிக்கும் பதில், அது இணையமாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு இன்று உலகின் அனைத்து காரியங்களும் இணையத்தின் மூலமாகவே நடைபெறுகிறது. வர்த்தகத்தில் ஆரம்பித்து மருத்துவம், ஆராய்ச்சி, விண்வெளி கட்டுப்பாடு என அனைத்தையும் இன்று தனது காலடியில் இணையம் வைத்துள்ளது. தகவல் புரட்சியில் இன்று ஈடு இணையற்ற பங்கினை இணையம் நிர்வகித்துக் கொண்டு வருகிறது. எதிர் காலத்தில் இணையம் இல்லையேல் உலகம் இல்லை என்ற நிலை வரினும் ஆச்சரியப் படுவதற்கில்லை. (இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இணையத்தின் முக்கியத்துவத்தினைக் குறித்து ஒரு சிறந்த கட்டுரையினை வடித்து அதன் இணைப்பை இவ்விடத்தில் தருகிறோம்.)

அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இத்துறையினில் முஸ்லிம்கள் தங்களது பங்களிப்பினை முழுமையாகச் செலுத்த முன் வரவேண்டும். எதிர் காலத்தில் அனைத்துக்கும் மேற்கோள் காட்ட இணையத்தை உலகம் பார்க்கும் பொழுது அதிலும் இச்சமுதாயத்தின் மேல் சுமத்தப் பட்ட களங்கமே நிறைந்து நிற்குமானால் அதன் பின் செய்வதறியாது திகைத்துக் கொண்டு எந்த பலனும் இருக்கப் போவதில்லை.

எனவே முழுக்க முழுக்க இவ்வொரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொண்டு இச்சத்திய மார்க்கம் இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சத்தியத்தை சத்தியமாக எடுத்துரைக்க இது ஒரு சத்தியத் தளமாக இன்ஷா அல்லாஹ் செயல்படும். சமுதாய முன்னேற்றத்தை மட்டும் கவனத்தில் கொண்டு ஏட்டிலே இருப்பதை மட்டும் எடுத்துக் கூறிவிட்டு சென்று விடாமல் இன்று சமுதாயம் எதிர் கொள்ளும் பிரச்சனைகளுக்கு நடைமுறைப் படுத்த முடியக் கூடிய தீர்வுகளையும் யாருக்கும் அஞ்சாமல் இத்தளம் உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கும்.

சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு ஒரு முக்கிய காரணம், சமுதாயத்தின் வழிகாட்டிகளாக இருக்க வேண்டியவர்கள் "தான்" என்ற அகந்தையினாலோ அல்லது எதிரிகளின் சூழ்ச்சிக்குத் தங்களை அறிந்தோ, அறியாமலோ பலியாகி சமுதாயத்தைப் பிளவு படுத்திக் கொண்டே செல்வதாகும். (சத்தியமார்க்கம்.காம் தளம்) இத்தளம் இவ்விஷயத்திலும் மிகுந்த கவனத்தை செலுத்தி, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தவறைத் தவறெனச் சுட்டிக்காட்டி தனி மனித துதி, சக சகோதரர்களை இழிவு படுத்துதல், இயக்கவெறி போன்ற சமுதாய முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையிடும் தீய செயல்களிலிருந்து சமுதாயத்தை மீட்டெடுக்கப் போராடும் இன்ஷா அல்லாஹ்.

இது மட்டுமல்லாமல் நவீன உலகில் இஸ்லாத்திற்கெதிராக பின்னப் படும் சதிவலைகளை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி சமுதாயத்தை விழிப்புணர்வு அடைய வைக்கும். உலகில் நடக்கும் நிகழ்கால நிகழ்வுகளை ஆய்வதிலிருந்து சந்தேகங்களுக்கு இஸ்லாமிய ஒளியில் விளக்கங்கள் அளிப்பது வரை முடிந்த அளவு அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி எதிர்கால முஸ்லிம் சமுதாயத்திற்குத் தகுந்த அடித்தளம் அமைக்கும் படியாக சத்தியமார்க்கம்.காம் தளம்   அமையும் இன்ஷா அல்லாஹ்!
- சத்தியமார்க்கம்.காம்
சத்தியமார்க்கம்.காம்
சத்தியமார்க்கம்.காம் தள அறிமுகம் (Introduction)
 Source : http://www.satyamargam.com/0033

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails