Tuesday, July 27, 2010

என்றும் இனிக்கும் நம் (பழைய) நோன்பு கால நினைவுகள்.

என்றும் இனிக்கும் நம் (பழைய) நோன்பு கால நினைவுகள்.

ஒரு காலத்தில் நம்மூரில் புனித ரமளான் நோன்பு வர இருக்கின்றது என்றாலே ஆண், பெண், பெரியவர் முதல் சிறியவர் வரை ஒரு இனம் புரியாத பரபரப்பு                                             நம்முள் தானாகவே ஒட்டிக்கொள்ளும் அந்த நாள் நம் வாழ்வில் வந்த நாள்.

இன்று உலக வெப்பமயமாதலால் பனி போர்த்திய அண்டார்ட்டிக்கா கண்டமே ஐஸ் கிரீம் போல் உருகி வந்தாலும், ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டிருந்தாலும் நம் பழைய கால நினைவுகள் மட்டும் ஒரு போதும் பழுதடைவதில்லை.

அன்று நமக்கு அறிவுரை சொன்ன எத்தனையோ பெரியவர்களும், மார்க்கத்தை முறையே போதித்த மார்க்க அறிஞர்களும், "மாக்காண்டி" என்று பயமுறுத்தப்பட்டவர்களும், அதனால் பயந்து அடம் பிடிப்பதை அடக்கிக்கொண்டு உணவு உட்கொண்ட சிறுவர்களும். அவர்களில் எத்தனையோ பேர் இன்று மண்ணோடு மண்ணாகி விட்டார்கள். நமக்கு முன் இறைவனடி போய்ச்சேர்ந்து விட்டார்கள்.

நம்ம ஊர் குறிப்பாக வயதான பெண்மணிகள் அவர்களுக்கென்று அரபு, ஆங்கில, தமிழ் மாதங்கள் போக பன்னிரண்டு மாதங்கள் தனியே உருவாக்கி அதை நடு ராத்திரியில் எழுப்பிக்கேட்டாலும் வரிசை தவறாது கச்சிதமாக சொல்வார்கள். (கீழே நான் குறிப்பிட்ட வரிசை சரியா? அல்லது தவறா? என்று நம்மூர் மூத்த குடிமகன்கள் சொன்னால் நல்லது) ஷிர்க் எது? பித்'அத் எது? என்று விளக்கமாக தெரியாத காலம் அது என்று சொல்லலாம்.

1. முஹர்ரம்
2. சேலாந்திரி
3. நாகூர் ஆண்டவர் கந்தூரி
4. மையதுநாண்டவோ கந்தூரி
5. முத்துப்பேட்டை கந்தூரி
6. கோட்டப்பட்டிணம் கந்தூரி
7. கடற்கரைப்பள்ளி கந்தூரி
8. காட்டுப்பள்ளி கந்தூரி
9. விராத்து
10.நோம்பு
11.இடையத்து
12. ஹஜ்ஜூ

புனித ரமளானை வரவேற்க விராத்து மாதத்தில் பெண்கள் காட்டும் பரபரப்பும், சுறுசுறுப்பும் நம்மை திகைக்க வைக்கும். ஆம். அவர்கள் வீடு வாசல் கழுவி, ஒட்டடை அடித்து, அரிசி மாவு இடிக்க வீட்டுக்கு ஆள் வரவைத்து, உரல், உலக்கைகளெல்லாம் அக்கம்பக்கத்து வீட்டில் இரவல் வாங்கி இடித்தும் (அது ஒரு மெஹா ப்ராஜெக் மாதிரி நடக்கும்), மளிகைக்கடை சாமான்கள் சிட்டை போடப்பட்டு நோன்புக்கு தேவையான எல்லா சாமான்களும் வாங்கி சுத்தம் செய்து அரைக்க வேண்டியதை அரைத்தும், டப்பாவில் அடைக்க வேண்டியதை அடைத்தும் எல்லாம் முறையே செய்யப்பட்டு தயார் படுத்தி வைப்பார்கள்.

நோன்பு வருவதற்கு ஒரு சில நாட்கள் முன்பே நம் முஹல்லாப்பள்ளிகளெல்லாம் அதை வரவேற்க தயாராகிக்கொண்டிருக்கும். சில பள்ளிகளில் வெள்ளையும் அடிப்பார்கள். மினாராக்களில் வண்ண விளக்குகள் மாற்றப்பட்டு நம் உள்ளங்களில் மத்தாப்பு கொளுத்தப்படும். நோன்பு கஞ்சி காய்ச்ச அங்கு தென்னங்கீற்றால் ஆன கொட்டகை போட மாட்டு வண்டியில் கீற்றும், கம்பும் அங்கு வந்திறங்கும். அத்துடன் நம் குதூகலமும் வந்திறங்கும். இவற்றை எல்லாம் இக்கால சிறுவர்கள் அனுபவிக்கிறார்களா? இல்லையா? என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். கம்ப்யூட்டர் யுகமாகிப்போன இக்காலத்தில் நிச்சயம் அவற்றை எல்லாம் தொலைத்தவர்களாகத்தான் அவர்கள் இருப்பர் என்பது என் நம்பிக்கை.

இன்று பெய்த‌ மழையில் துளிர் விடும் புல்,பூண்டு போல ஆங்காங்கே திடீரென தோன்றும் சம்சா, இரால் மண்டை புதைத்த வாடா விற்கும் கடைகள்.

(நீர் மூழ்கி) ஆழ்குழாய்க்கிணறுகளெல்லாம் இல்லாத அக்காலத்தில் குளங்களெல்லாம் அடுத்து வரும் மழைக்காலம் வரை தண்ணீரை தன்னகத்தே தாங்கி நின்றது நாமெல்லாம் குதித்து/குளித்து கும்மாளமிடுவதற்காக.

கண்களெல்லாம் சிவந்து, காதிலும், மூக்கிலும் கொஞ்சம் வாயிலும் தண்ணீரை தடையின்று உள்ளே செல்ல அனுமதித்து விட்டு பிறகு நோன்பு திறக்கும் சமயம் மிக சங்கையாக மரியாதை இல்லா வாடாவையும், முக்கோண‌ சம்சாவையும் கஞ்சிக்கோப்பையில் பிய்த்துப்போட்டு வெகுநேரம் ஆடாமல், அசையாமல் இருந்து மீனைக்கவ்வுவதற்காக காத்திருக்கும் கொக்கு போல இடி முழக்கமென இறங்கும் 'நகரா' சப்தத்தில் நோன்பு திறக்கும் து'ஆ கூட முழுவதும் சொல்ல நேரமில்லாதவர்களாய் மடக்கென தன் வரண்ட வாயிக்குள் கவிழ்த்த கஞ்சிக்கோப்பை நினைவுகள் இன்று உங்களுக்கு கொஞ்சமும் இல்லையா?

அந்த காலத்தில் சஹாபாக்கள் பதுருப்போருக்கு படையுடன் களத்திற்கு சென்றது போல் நோன்பு பிறை 17ல் பதுரு ரொட்டி வாங்க தெருதோறும் பொட்டியுடன் சென்று போரில் வென்று கனிமப்பொருள்களை கவர்ந்து வருவது போல் பொட்டி நிறைய (தேங்காய், அரிசி மாவு ரொட்டி, சர்க்கரை, வெள்ளடை) சாமான்களுடன் முஹல்லாப்பள்ளிக்கு கொண்டு வந்து சேர்த்த அந்த நினைவுகள் இன்று வந்து ஏனோ வந்து நம்மை ஏக்கமடையச்செய்கின்றது?

அன்று நோன்பு கால இரவில் இளம்காற்றில் ஒலி பெருக்கி மூலம் கரைந்து வரும் பள்ளிகளின் ஹிஜ்பு/குர்'ஆன் வசனங்களும், அதற்குப்பின் கொடுக்கப்பட்ட நார்சாவையும் இன்றும் அனுபவிக்க வேண்டும் என்று உள்ளம் அலைபாயுது ஏனோ?

அன்றிருந்தவர்கள் இன்றில்லை நம்மிடம். இன்றிருக்கும் நாமோ நாளை இருப்பதில் எவ்வித நிச்சயமும் இல்லை. நாம் எல்லாம் ஒரு நாள் நம்மைப்படைத்தவனிடம் மீளக்கூடியவர்களாக இருக்கின்றோம்.

உச்சி நேர பெரும் பசியில் ஆசை, ஆசையாய் வாங்கிச்சேர்த்து வைத்த திண்பண்டங்களும், நோன்பு நோற்றதும் வேண்டா/வெறுப்பாய் தீண்டாமல் காலை நேர வீட்டு வேலைக்காரிக்கு உணவாய் ஆகிப்போகும் அத்தனையும்.

அன்று நாம் வெகுதூர வெள்ளைக்கார நாடுகள் செல்லாமல் அரபு நாட்டுடன் அடக்கமாய், அமைதியாய் இருந்தோம். குடும்பம், உறவு பேணினோம். அன்பும், அரவணைப்பும் அதிகம் கண்டோம். இன்றோ நம் வீட்டு பெரும் தேவைகளுக்காக அழகாய் தன் மெழுகால் கட்டப்பட்ட தேன்கூட்டை கல்லெறிந்து சிதைத்தது போல் எட்டு திசைக்கும் திரும்பி ஒன்று சேர இயலாதவர்களாய் தேனீக்கள் போல் பறந்து போனோம்.

சீரும் சிங்கங்களும், பாயும் புலிகளாய் நோன்பு கால இரவில் ஆடித்தீர்த்த விளையாட்டுக்களும், தூக்கில் தொங்கும் மின் விளக்கின் கீழ் ஆடிய கேரம் போர்டு விளையாட்டும் கடைசியில் தேவையில்லாமல் கொண்டு வந்து சேர்த்த தெரு சண்டைகளும் இன்று இல்லாமல் போனதில் நமக்கு (வருத்தம் கலந்த) சந்தோஷம் தான்.

அயர்ந்து உறங்கும் நம் வீட்டுப்பெரியவர்களை சஹர் நேரத்தில் அலாரம் வைத்தாற்போல் வந்தெழுப்ப வரும் (தப்ஸ் அடிக்கும்) சஹர் பக்கிர்சாவும், அவருடன் (அரிக்கலாம்பு) விளக்கு எடுத்து வரும் சிறுவனும் இன்றும் இருக்கிறார்களோ? இல்லையோ? தெரியவில்லை.

மேனி தெரிய அணிந்த மார்ட்டின் சட்டையும், பாக்கெட்டிற்குள் பளபளக்கும் பத்து ரூபாய் சலவை நோட்டும், அதன் மேல் கம்பீரமாக காட்சி தரும் ஹீரோ பேனாவும், காதில் சொறுகப்பட்ட நறுமண அத்தரில் நனைத்த பஞ்சும், காலில் சரசரவென சப்தம் செய்யும் சிகப்பு நிற பூ வைத்த சோலாப்பூரி செருப்பும் அதை நினைக்கும் இன்றும் நம் உள்ளத்தில் பேரின்ப நீர்வீழ்ச்சியை உண்டாக்கி அதில் வண்ண,வண்ண வானவில்லை வரச்செய்கின்றது.

புனித ரமளான் மாத கடைசிப்பத்து நாட்களின் மகத்துவம் குர்'ஆனிலும், ஹதீஸிலும் அதிகம் சொல்லப்பட்டதை சரிவர‌ விளங்காமல் கடைசிப்பத்தை கடைத்தெருவிலும், துணிமணி எடுக்க பட்டுக்கோட்டை, தஞ்சாவூருக்கு படையெடுத்துச்சென்றதும், உள்ளூர் தையல்கடைக்காரர்களை பண்டிகைகால ரேசன்கடைகள் ரேஞ்சுக்கு ஆக்கி அதில் அநாவசியமாய் ஆனந்தமும் கண்டோம்.

பள்ளிகளில் தராவீஹ் தொழுகையில் செய்த சிறுபிள்ளைத்தனமான குசும்புகளும், பாதியில் தொழுகையில் உறங்கிய உறக்கமும் பின் நார்சாவை நினைத்து வந்த சுறுசுறுப்பும் அதை வரவழைத்த‌ தேனீரும் நீர் அண்டார்டிக்காவே சென்றிருந்தாலும் உம்மை மெல்ல அசை போட வைக்கும் அந்த நினைவுகள்.

இவைகளெல்லாம் இன்று இல்லாமல் போனாலும் கடந்த காலத்தை இங்கு மெல்ல அசை போட ஆட்களுமா இல்லாமல் போய்விடுவார்கள்?

மேலே என்னால் ஞாபகப்படுத்த முடிந்ததை இங்கு எழுதி விட்டேன். ஏதேனும் உங்கள் நினைவுகளிலிருந்து விடுபட்டு இருப்பின் நீங்கள் பின்னூட்டம் மூலமோ அல்லது தனி கட்டுரை மூலமோ தாராளமாக தொடரலாம் என் அன்பிற்கினியவர்களே.

நம்மை நெருங்கிக்கொண்டிருகும் புனித ரமளானின் பரக்கத்தால் வல்ல ரப்புல் ஆலமீன் ஹலாலான நம் எல்லாத்தேவைகளை பூர்த்தி செய்தும், பெரும் ஆபத்துக்களிலிருந்தும், விபத்துக்களிலிருந்தும், விபரீதங்களிலிருந்தும் நம்மை காத்தருளி, ஈருலகிலும் எல்லாப்பாக்கியங்களையும் பெற்றவர்களாய் எம்மை ஆக்கி, உலக ஆசாபாசங்களுக்காக இஸ்லாத்திலிருந்து தடம்புரளாமல் கடைசி மூச்சு உள்ளவரை இஸ்லாத்தின் இன்பத்தை சுவைத்தவர்களாய், அச்சுவையுடனே எம்மை படைத்த உன்னிடம் நாங்களெல்லாம் வந்து சேர வேண்டும் அதற்கு ரப்புல் ஆலமீனான நீ எங்களுக்கு நல்லருள் புரியவேண்டும் (ஆமீன் யாரப்பல் ஆலமீன்) என்று அவனை இறைஞ்சிக்கேட்டு கொண்டவனாய் என் கட்டுரையை இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

இன்ஷா அல்லாஹ் என்றும் பசுமையான நம் நினைவுகள் தொடரும்......

மு.செ.மு. நெய்னா முஹம்மது

Source : http://adirainirubar.blogspot.com/2010/07/blog-post_4378.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails