3.5 சதவிகித இடஒதுக்கீடு
வெகுகாலம் காத்திருந்த இட ஒதுக்கீடு தமிழக முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியானது. அநேகமாக அனைத்துக் கட்சிகளும் அனைத்து சமூக மக்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இன்னும் ஓர் உண்மையைப் பார்க்க வேண்டும். இட ஒதுக்கீடு என்பது வேலை வாய்ப்பிற்கும் உயர் கல்விக்கும்தான். இரண்டிற்கும் ஒதுக்கீடு இருந்தாலும் வேலைக்கோ அல்லது உயர் கல்விக்கோ சேருவதற்கு குறைந்த அளவு தகுதி வைத்திருப்பார்கள். அனேகமாக அது மதிப்பெண்களாகத்தான் இருக்கும். அந்தக்குறைந்த தகுதியைப் பெறாதவர்களுக்கு ஒதுக்கீடு உதவ முடியாது. ஆகவே தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
இதையே லிண்டன் ஜான்சன் என்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி "வாய்ப்பின் வாசலை நம் மக்களுக்குத் திறக்க வேண்டியது முக்கியம். அந்த வாயிலில் நுழைவதற்கு அவர்களைத் தயார் செய்வது அதைவிட முக்கியம்" என்று குறிப்பிட்டார்.
ஆகவே இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேற மிகவும் முக்கியமானது மாணவர்களின் தகுதியை வளர்ப்பதாகும். அதே போன்று வேலை தேடும் இளைஞர்களின் தகுதியையும் பொது அறிவையும் உயர்த்துவதாகும்.
வேண்டுவது என்ன ?
தரமும், தகுதியும் மந்திர சக்தியால் மாய வித்தைகளால் ஒரே கணத்தில் வருபவை அல்ல அதிக விளைச்சல் தரும் பயிரைக் கடைசி நாளில் கண்காணித்துப் பெற்றுவிட முடியாது ஆகவே அடிப்படையிலிருந்தே பிள்ளைகளைத் தயார் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் 73 சதவீதம் ஆகும். முஸ்லிம்களிடையே ஆண்கள் 81 சதவீதமும், 79 சதவீதம் பெண்களும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர். ஆனால் 5 ம் வகுப்பைத்தாண்டும் நிலையிலும் அதன் பிறகும் முஸ்லிம்கள் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து விடுவது தான் வேதனையானது.
இதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான காரணம், பொருளாதாரம் ஏழ்மையில் வாடும் முஸ்லிம்கள் வயிற்றுப் பாட்டையே கவனிக்க முடியாத நிலையில் கல்வியை எப்படி கவனிப்பது ?
இது ஒரு நியாயமான கேள்வி போல் தோன்றலாம். அதுவே முழுக்காரணம் அல்ல. ஆர்வமும், அக்கரையும் கல்விமேல் இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாகும். அக்கறையுள்ளவர்கள் ஏழையாக இருந்த போதும் பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்கான வழியை முயன்று தேடி வெற்றி பெற்றுள்ளதை முஸ்லிம் சமுதாயத்தினரும், அதிக அளவில் பிற சமூகத்திலும் சிறப்பாக கிருத்துவ சமூகத்திலும் காணலாம். இதற்கு சமுதாயம் பெரிய அளவில் அமைப்பு ரீதியாகப் பரவலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் பல வழிகளில் கல்வி வாய்ப்பையும், வசதியையும் உருவாக்க வேண்டும். பிள்ளைகளை நன்றாகப் படிக்க ஊக்குவிக்க வேண்டும். ஏழ்மை காரணமாக ஒரு முஸ்லிம் பிள்ளை படிக்க முடியவில்லை என்றால் சமுதாயமே அதற்குப் பொறுப்பு என்று உணரும் நிலை உருவாக வேண்டும்.
இட ஒதுக்கீடு : இன்னொரு பக்கம்
சிறுபான்மையினர் நடத்தும் உயர் கல்விக்கூடங்களில் 50 சதவீதம் இடங்களை சிறுபான்மையினரே நிரப்பிக் கொள்ளலாம் என்ற ஒரு ஏற்பாடு தமிழகத்தில் உள்ளது. மொத்தம் 14 முஸ்லிம் கல்லூரிகளில் 11 கல்லூரிகள் முஸ்லிம் சிறுபான்மைத் தகுதியைக் கேட்டுப் பெற்றுள்ளது. அவைகளில் ஆண்டுதோறும் சுமார் 4000 இடங்களில் 2000 இடங்கள் முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்டவை. இந்த ஏற்பாடு கூட ஒரு வகையில் இட ஒதுக்கீடுதான். ஆனால் 800 முதல் 1000 இடங்களில் முஸ்லிம்கள் சேராமல் அந்த வாய்ப்பு பிற சமூக மாணவர் களுக்குப் போய்க் கொண்டு இருக்கிறது.
ஏன் நமக்கென்று ஒதுக்கிய இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன? இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதால், அதைச் செலுத்த முடியாமல், அவைகளில் சேராமல் இருக்கிறார்கள். இரண்டு பணம் இருந்தாலும் குறைந்த பட்சம் தகுதி மார்க் (Minimum Eligible Marks ) இல்லாத நிலையும் உள்ளது.
ஆகவே தகுதி மார்க்கும் வேண்டும். கட்டணம் மற்றும் வாழ்வுச் செலவும் பணமும் இல்லாமல் தனியார் கல்லூரிகளில் நமது இடங்கள் காலியாக உள்ளன. அவை அப்படியே காலியாக விடப்படவில்லை. பிற சமூகத்தினர் அவ்விடங்களை பெற்று வளர்கிறார்கள். எனவே, தகுதி மார்க் வாங்கும் வண்ணம் மாணவர்களை ஊக்குவித்தல் அவசியம். அதற்கு தொடக்கம் முதலே அவர்களைக் கண்காணித்து உதவி செய்து வளர்த்து வர வேண்டும். இது நம் சமுதாயக் கடமை.
அப்படிச் செய்கின்றபோது தானாகவே அதிக மதிப்பெண்கள் பெற்று அரசு கல்லூரிகளிலும், அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்லூரிகளிலும், அரசு உதவி பெற்ற கல்லூரிகளிலும் குறைந்த கட்டணத்துடன் நல்ல வாய்ப்பான பாடப் பிரிவுகளிலும் சேர முடியும். அப்போதுதான் உண்மையிலேயே அரசு தந்திருக்கும் 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அர்த்தமுள்ளதாக அமையும்.
சமுதாயம் உயர்ந்த கல்விக் கட்டணத்திற்கும் ஏற்பாடு செய்தால் இரண்டாம் கட்டத்தில் உள்ள மாணவர்களும் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உண்டு.
டாக்டர் சே.சாதிக்
( முன்னாள் துணை வேந்தர், சென்னை பல்கலைக்கழகம் )
நன்றி : சமநிலை சமுதாயம், மாத இதழ், சென்னை.
Source : http://adirainirubar.blogspot.com/2010/07/35.html
1 comment:
எல்லாம் நன்மையாகவே நடக்கும் என
நம்புவோம்.
இன்ஸா அல்லாஹ்.
Post a Comment