Tuesday, July 27, 2010

அல்குர்ஆனின் அழகிய பெயர்கள்!

அல்குர்ஆனின் அழகிய பெயர்கள்!
அபூ கதீஜா
எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் மனித குலத்தின் நேர்வழிக்காக – வாழ்க்கை நெறியாக ஆதம்(அலை) அவர்களில் ஆரம்பித்து வழிகாட்டு அறிவிப்புகளை (வஹீ) காலத்திற்குக் காலம் அனுப்பிக் கொண்டிருந்தான். அவற்றில் இறுதி வழிகாட்டி நூலாக – வாழ்க்கை நெறியாக, அவன் அருளிய இஸ்லாம் மார்க்கத்தை நிறைவு செய்து, அல்குர்ஆனை அருளினான். உலகம் அழியும் வரை இறுதி வழிகாட்டி நூலாக – வாழ்க்கை நெறியாக அல்குர்ஆனே திகழும் என்றும் தெளிவாக அறிவித்துள்ளான். இந்த உண்மைகளை அல்குர்ஆன் அல்மாயிதா 5:3, ஆல இம்ரான் 3:19, 85 ஆகிய இறைவாக்குகளை படித்து விளங்குகிறவர்கள் நிச்சயமாக உணர முடியும். மேலும் இறுதி இறைத்தூதரின் மரணத்திற்குப் பின்னர், இறைத்தூதர்களுக்குரிய இறை அறிவிப்புகள் (நுபுவத்துடைய வஹீ) முடிவுக்கு வந்துவிட்டன. அதன் பின்னர் ஒரு கடுகளவேனும் மார்க்கத்தில் எதையும் நுழைக்க முடியாது என்பதை மேலே கண்ட இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் அல்குர்ஆனின் பகரா 2:159,160,161,162 அஃராஃப் 7:3, அஹ்ஜாப் 33:21, 36,66,67,68 ஹஷ்ர் 59:7 இறைவாக்குகள் இந்த உண்மையை மிகக் கடினமாக உறுதிப்படுத்துவதுடன், இதை மீறுவோர் நிரந்தரமாக நரகத்தில் தங்க நேரிடும் என்பதையும் உறுதியுடன் எச்சரிக்கின்றன.
அல்குர்ஆனின் அழகிய பெயர்களையும் அல்லாஹ் அல்குர்ஆனிலேயே தெளிவு படுத்தியுள்ளான். அவையாவன 1) அல்கிதாப் 2:2, (2) அல்பயான் 3:138, (3) அல்புர்ஹான் 4:174, (4) அல்ஃபுர்கான் 2:185, (5) அஃத்ஃததிக்ரு 3:58, (6) அந்நூர் 4:174 (7) அல்ஹக்கு 2:91, (8) அல்கரீம் 56:77, (9) அல்ஹகீம் 36:2, (11) அல்அஜீஸ் 41:41 (12) அல்ஹுதா 3:138 (13) அர்ரஹ்மத் 6:157, (14) அஷ்ஷிஃபா 10:57, (15) அல்மவ்இளத் 3:138, (16) அல்ஹிக்மத் 2:151 (17) அல்முஹைமின் 5:48, (18) அல் கய்யிம் 2:151 (19) அந்நிஃமத் 93:11, (20) அர்ருஹ் 42:52, (21) அத்தன்ஸீல் 20:4, (22) அல்ஹுக்மு 13:37, (23) அல்முபாரக் 6:92, (24) அல் முஸத்திக் 6:92, (25) அல்பஷீர் 41:4, (26) அந்நதீர் 41:4, (27) அல்முதஹ்ஹர் 80:14, (28) அல்முகர்ரமா 80:13 (29) அல்மஜீத் 50:1, (30) அல்அரபிய்யு 12:2, (31) அல்மர்ஃபூஆ 80:14, (32) அல்அஜப் 72:1, (33) அல்பஸாயிர் 7:203, (34) அஃத்ஃதிக்ரா 7:2, (35) ஹப்லுல்லாஹ் 3:103.
இந்த முப்பத்தி ஐந்து பெயர்களைத்தான் அல்குர்ஆனின் அழகிய பெயர்களாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தப் பெயர்களை எல்லாம் சரியாக மொழி பெயர்த்துப் போட்டவர்கள், சுமார் இருநூற்றி ஐம்பது (250) இடங்களில் அல்குர்ஆனில் காண்ப்படும் ‘கிதாப்’ என்ற அரபிபதத்திற்கு ‘வேதம்’ என்று தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். மேலும் ‘ஹப்லுல்லாஹ்’ என்ற அரபி பதத்திற்கு அல்லாஹ்வின் கயிறு என்று தமிழில் மொழிபெயர்த்திருந்தாலும் பெரும்பாலான புரோகித மவ்லவிகள் ஒற்றுமை எனும் கயிறு என்றே எழுதி வருகிறார்கள், சொல்லி வருகிறார்கள்.
இதை அறியாமல் – தெரியாமல் செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. திட்டமிட்டு மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்ப்பதோடு, ஷைத்தானின் ஏஜண்டாக இருந்து மக்களை நரகில் கொண்டு தள்ளவே முற்படுகின்றனர்.
தமிழக மக்களுக்கு ஆரம்ப காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது தூய்மையான ஏகத்துவ இஸ்லாம் அல்ல என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஹிஜ்ரி 600க்குப் பிறகு தூய்மையான ஏகத்துவ இஸ்லாம், மனிதனும் இறைவனுடன் இரண்டறக் கலக்க முடியும் என்ற அத்துவைத (வஹ்தத்துல் உஜுது) சூஃபிஸ இஸ்லாமாக – இறைவனுக்கு இணை வைக்கும் மதமாகத் திரிக்கப்பட்ட பின்னர்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனால்தான் தமிழகத்து ஊர்களில் பல தர்காக்கள் – சமாதிகள் பள்ளிக்குப் பக்கத்திலேயே கட்டப்பட்டிருப்பதையும், அவற்றிற்கு ஃபாத்திஹா, மெளலூது, ராத்திபு, கூடு, கொடி, கந்தூரி, கச்சேரி என அமர்க்களப்படுவதையும் பார்த்து வருகிறோம். ஊருக்கு ஊர் முஹ்யித்தீன் ஆண்டவர் பள்ளி என்றும் பெயரிட்டிருப்பதையும் பார்க்க முடியும். முஸ்லிம்கள் இப்படிப்பட்ட இறைவனுக்கு இணை வைக்கும் செயல்களில் மூழ்கி நரகைச் சென்றடைய வேண்டும் என்ற ஷைத்தானின் தூண்டுதலின் பேரில் இந்தப் புரோகித முகல்லிதுகளின் சதித்திட்டங்கள் இவை.
அந்தச் சதித்திட்டங்களில் ஒன்றுதான் ‘கிதாப்’ என்ற அரபிப் பதத்திற்கு ‘வேதம்’ என்று மொழிபெயர்த்து வருவதாகும். இப்போது ‘க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி’ (1992 ஜூனில் திருத்தி அச்சடிக்கப்பட்டது) பக்கம் 966-ல் காணப்படும் ‘வேதம்’ பற்றிய விவரங்களை அப்படியே தருகிறோம்.
வேதக்காரர் – கிறிஸ்தவர்.
வேதம் -1, இந்து சமயத்திற்கு ஆதாரமான நெறிமுறைகளைக் கூறுவதாகவும் புராதன காலத்தில் தோன்றியதாகவும், புனிதமானதாகவும் கருதப்படும் நூல் அல்லது நூல்களின் தொகுப்பு.
2. கிறிஸ்தவ பைபிள்
வேதவாக்கு : (வேதம் போன்று) மதிக்கத் தகுந்த வாக்கியம் அல்லது சொல்.
வேதாந்தம் : 1. வேதத்தின் இறுதிப்பகுதியாக உள்ள உபநிடதம்.
2. அத்துவைதம்
3. (வாழ்க்கை குறித்து தன்னளவில் கொண்டிருக்கும்) தத்துவம்.
உ.ம். எடுத்ததற்கெல்லாம் வேதாந்தம் பேசுகிறாயே!
வேதாந்தி : 1, அத்துவைதக் கொள்கையை பின்பற்றுபவர்.
2. உலகப் பொருள்கள் மீதுள்ள பற்றையும் உலக நடவடிக்கைகளில் ஈடுபாட்டையும் துறந்தவர்.
இந்த விபரங்களைப் படித்துப் பார்த்தவுடன் ஈஸல(அலை) அவர்களுக்கு அருளப்பட்ட தூய ஏகத்துவ இஸ்லாம் மார்க்கத்தை திரியேகத்துவ கிறிஸ்தவ மதமாக கிறிஸ்தவ மதப்புரோகிதர்கள் திரித்திருப்பது போல், இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முழுமைப்படுத்தப்பட்ட – பூரணத்துவமுடைய தூய இஸ்லாம் மார்க்கத்தை ஈரேகத்துவ (அத்துவைதம் – வஹ்தத்துல் வுஜுது) முஹம்மதிய மதமாக முஸ்லிம் மதப்புரோகிதர்கள் திரிப்பதற்கு வசதியாகத்தான் அல்குர்ஆனுக்கு அதிலேயே 250 இடங்களுக்கு மேலாக குறிப்பிடப்பட்டுள்ள ‘கிதாப்’ என்ற அரபி பதத்திற்கு வேதம் என்ற பதத்தை மக்களின் உள்ளங்களில் பதிய வைத்திருக்கிறார்கள். மதப்புரோகிதர்களால் திரித்து, வளைத்து, மறைத்து இறையருளிய வழிகாட்டு நெறிநூல்கள் வேதங்களாக்கப்பட்டதை முன்மாதிரியாகக் கொண்டு இறுதி வழிகாட்டல் நெறி நூலுக்கும் ‘வேதம்’ என பெயர் சூட்டி முன்னைய நெறிநூல்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாக நிலையையே அல்குர்ஆனுக்கும் ஏற்படுத்த முற்பட்டிருக்கிறார்கள் முஸ்லிம் மதப்புரோகிதர்கள்.
அந்த அடிப்படையில் தான் அல்குர்ஆனிலுள்ளவற்றை அப்படியே நடைமுறைப்படுத்த முடியாது; அது சாத்தியமில்லை என்று சொல்லாமல் என்று சொல்லாமல் சொல்லி, தங்களின் சொந்த யூகங்களையும், கற்பனைகளையும் மார்க்கமாகச் சொல்லி, மக்களை அவற்றின்படி நடக்கத் தூண்டுகிறார்கள். அல்குர்ஆனை உங்களால் விளங்க முடியாது; நாங்கள்தான் விளக்கிச் சொல்ல வேண்டும் என்று அவர்கள் கதைளயப்பதும் அந்த அடிப்படையில்தான். வேதங்களை தாழ்த்தப்பட்ட மக்கள் படிக்கக் கூடாது; மீறிப் படித்தால் அவரதுநாக்கைத் துண்டிக்க வேண்டும்; வேதத்தைப் படிக்கக் கேட்கக் கூடாது; மீறி கேட்டால் அவரது காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றெல்லாம் ஹிந்து மதப்புரோகிதர்கள் சொல்லி வருகிறார்களே, அவற்றின் ஆரம்ப நிலை இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அவற்றின் பரிணாம வளர்ச்சிதான் நாம் மேலே எழுதியுள்ளது. அதே புரோகித வழியில் முஸ்லிம் மதப்புரோகிதர்களும் முன்னேறி வருகிறார்கள். அதற்காக திட்டமிட்டே கிதாப்-நூல் என்ற பதத்தை ‘வேதம்’ என எழுதி வருகிறார்கள், சொல்லி வருகிறார்கள். அல்குர்ஆனை உங்களுக்கு விளங்காது என்றெல்லாம் கதையளக்கிறார்கள். இவை அனைத்தும் இந்த முகல்லிது மவ்லவி புரோகிதர்களின் தில்லுமுல்லுகளேயல்லாமல் உண்மையல்ல.
இதேபோல் இந்தப் புரோகித மவ்லவிகள் அடிக்கடி அல்குர்ஆனுக்கு சொல்லிவரும் மற்றொரு பெயர் மறை – திருமறை என்பதாகும். இதுவும் ஹிந்து மதப்புரோகிதர்களைப் பின்பற்றி இவர்கள் தீயநோக்கடன் புழக்கத்தில் விட்டிருக்கும் ஒரு பதமேயாகும். மறை என்றால் மக்களிடமிருந்து மறைக்கப்பட வேண்டியது என்ற கெட்ட எண்ணத்துடனேயே ஹிந்து மதப்புரோகிதர்கள் இதை புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள். அதே தீய நோக்கத்துடன் தான் முஸ்லிம் மதப்புரோகிதர்களும் அல்குர்ஆனுக்கு மறை என்ற பதத்தைப் புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள். இந்த மறை என்ற பதம் எந்த அரபி பதத்தின் மொழி பெயர்ப்பும் அல்ல; முழுக்க முழக்க புரோகிதர்களின் மார்க்கமாக மக்களிடையே புழக்கத்தில் விட்டிருக்கும் கத்தம், ஃபாத்திஹா, மீலாது, மெளலூது, கூடு, கொடி, கந்தூரி, ஸலாத்து நாரியா போன்ற விதவிதமான நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் அந்தஸ்த்துக்கு உயர்த்தும் – இணை வைக்கும் கொடிய ஸலவாத்துகள் இவை அனைத்தும் குர்ஆன் போதிக்கும் நேர்வழி அடிப்படையிலானவை அல்ல; மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் கொடிய செயல்களாகும்.
மக்கள் சுதந்திரமாக தன்நம்பிக்கையுடன் அல்குர்ஆனை படித்துச் சிந்தித்து விளங்க ஆரம்பித்தால், இந்த முகல்லிது புரோகித மவ்லவிகளின் தில்லுமுல்லுகள் அம்பலத்திற்கு வந்துவிடும். எனவே அல்குர்ஆனை மக்களிடமிருந்து மறைப்பது அந்த முகல்லிது புரோகித மவ்லவிகளைப் பொறுத்தமட்டிலும் மிகமிக அவசியமாக இருக்கிறது. ஹிந்து வேதங்களை ஹிந்து மதப்புரோகிதர்கள் எந்த நோக்கத்தோடு மக்களிடமிருந்து மறைக்க முற்படுகிறார்களோ அதே தவறான நோக்கத்துடன் தான் முஸ்லிம் மதப்புரோகிதர்களும் அல்குர்ஆனை மக்களிடமிருந்து மறைக்க முற்படுகிறார்கள். அதனால்தான் அவர்களைப் பின்பற்றி இவர்களும் அல்குர்ஆனுக்கு மறை என்றும் பெயர் சூட்டி இருக்கிறார்கள். மற்றபடி நாம் ஆரம்பத்தில் எடுத்தெழுதியுள்ள அல்குர்ஆனில் காணப்படும் அல்குர்ஆனின் அழகிய பெயர்களில் இந்த ‘மறை’ என்ற பதத்திற்குரிய அரபி பதம் இல்லை.
அதேபோல் இவர்கள் அல்குர்ஆனை ‘ஷரீஃப்’ என்றும் அழைத்து வருகிறார்கள். இந்த ‘ஷரீஃப் என்ற பதமும் அல்குர்ஆனில் இல்லை. கஃபத்துல்லாஹ்வுக்கு கஃபா ஷரீப் என்று ஹதீஸ்களில் காணப்படுகிறது. கஃபாவுக்குரிய ஷரீஃப் என்ற பதத்தை அல்குர்ஆனுக்கு எந்த நோக்கத்துடன் புகுத்தியுள்ளார்களோ? அதிலும் அவர்களின் தப்பான நோக்கம் இருக்கலாம். நமக்கு விளங்கவில்லை.
குர்ஆனை அல்குர்ஆன் என்று சொல்லலாம். தமிழில் ்திரு’ என்ற பதம் மதிப்பு தரும் முறையில் இடப்படுவது, உதாரணமாக காமராஜ் என்ற பெயரையுடையவரை மரியாதையுடன் அழைக்கும்போது திரு.காமராஜ் என்றே சொல்வார்கள். ‘திருக்காமராஜ்’ என் சொல்ல மாட்டார்கள் அதே போல் திரு.குமரன் எனும் சொல்லாக அமைகிறது. அது சமயம் ‘திருக்குமரன்’ எனும்போது இங்கு பெயரே ‘திருக்குமரன்’ என்றாகி விடுகிறது. திருக்குமரன் என்ற பெயரை உடையவரை மரியாதையுடன் அழைப்பதாக இருந்தால் திரு திருக்குமரன் என்றே அழைப்பார்கள்.
இங்கு ‘திரு’ தமிழ்ச்சொல்; குர்ஆன் அரபிச் சொல். திருவை மரியாதை அடிப்படையில் சொல்வதாக இருந்தால் திருகுர்ஆனை என்றே சொல்ல வேண்டும்; எழுத வேண்டும். திருக்குர்ஆன் என்று சொல்லும்போது, எழுதும் போது திருக்குமரன் என்று பெயரைக் குறிப்பிடுவது போல், அது பெயராகவே ஆகிவிடும். இங்கு ‘திரு’மரியாதை சொல் ஆகாது. அல்குர்ஆனுக்கு திருக்குர்ஆன் என்று பெயர் இல்லை. மேலும் திரு தூய தமிழ்ச் சொல்; குர்ஆன் தூய அரபி சொல், மேலும் தமிழையும் அரபியையும் சேர்த்து எழுதும் போது இடையில் வல்லினம் வருவது தமிழ் இலக்கணப்படி தவறாகும். எனவே அல்குர்ஆன் என்று சொல்வதே எழுதுவதே மிகச் சிறப்பாகும்.
அந்நஜாத்திலும் ஆரம்ப காலங்களில் இப்படிப்பட்ட முறையில் தவறாக எழுதப்பட்டு வந்துது உண்மை தான். வழமையாக நடைமுறையில் இருப்பதையும், அல்குர்ஆனின் அனைத்து மொழிபெயர்ப்புகளிலும் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருந்ததை, எழுதப்பட்டிருந்ததை பின்பற்றி அப்படியே எழுதி வந்தோம். ஆனால் இன்று ஆய்வு செய்யும் போதே இந்தத் தவறுகள் எம் கவனத்திற்கு வந்தன. சமயங்களில் குர்ஆனின் மொழிபெயர்ப்புகளை அப்படியே பார்த்து எழுதுவதாலும் அந்தத் தவறுகள் அதிகமாக இடம்பெற்று வந்தன. இனிமேல் இன்ஷா அல்லாஹ் கவனமாக இருப்போம். ஆக்கங்களை எழுதி அனுப்புகிறவர்களும் இனிமேல் இத்தவறுகளைக் கவனித்து திருத்தி எழுதி அனுப்பும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
http://www.annajaath.com/?p=1002

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails