''இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082
ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம். ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள்.
இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை. நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட வேண்டும்! கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது! ஆனால் மனைவியைக் கணவன் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள்.
From :Naseer Ali Through mail
No comments:
Post a Comment