Monday, August 9, 2010

மனதில் தோன்றியது!

மனதில் தோன்றியது!

உலகில் மக்கள் தொகை பெருக்கத்தால் மனிதன் அவன் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக                            காடுகளில் மரங்களை வெட்டி மற்றும் தரிசு நிலங்கள், விவசாய நிலங்கள், மனிதன் வாழ லாயக்கற்ற இடம் என்று சொல்லப்படும் பாலைவன நிலங்களில் கூட‌ தான் வசிக்க வசிப்பிடம் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளை கட்டி வருகின்றான். அதனால் புவி வெப்பமடைதல், தட்பவெட்ப நிலை மாற்றம், பூகம்பம், சுனாமி, கடல் கொந்தளிப்பு, சூறாவளி, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைச்சீற்றங்களுக்கும், அதன் பேரழிவிற்கும் ஆளாகின்றான்.

அவனைச்சொல்லி குற்றமில்லை. காரணம் உலகம் இறைவனால் படைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அது அதன் பரப்பளவில் அப்படியே தான் இருக்கின்றது. மனிதனின் இனப்பெருக்கம் மற்றும் அவன் தேவைக்கு தகுந்தாற்போல் காலத்திற்கேற்ப அது விரிந்து/பரந்து கொடுப்பதில்லை. அதனால் மனிதன் அவன் இனப்பெருக்கத்திற்கு ஏற்ப நகரங்கள், புற நகரங்கள், கிராமப்புறங்கள் பிறகு அதையும் தாண்டி விவசாய நிலங்களில் கூட தன் வாழ்விடத்தை அமைத்துக்கொள்கின்றான்.

எங்கெங்கோ செல்வானேன்? நம்ம ஊரைப்பாருங்களேன். ஒரு காலத்தில் நம்ம ஊர் எல்லைகளாக தெற்குப்பகுதியில் கடல்கரைத்தெருவும், மேற்குப்பகுதியில் மேலத்தெருவும், கிழக்குப்பகுதியில் பழஞ்செட்டித்தெருவும், வடக்குப்பகுதியில் வண்டிப்பேட்டையுமாக நாம் கூற முடியும். ஆனால் இன்றோ ஒரு நேரத்தில் தென்னந்தோப்பு வாங்க கூட தயங்கிய இடங்களில் கூட நம் மக்களின் குடியிருப்பு வந்து விட்டது. காரணம் இதற்கு பல கூறப்பட்டாலும் வீட்டில் ஒரே பெண்ணாக இருந்தாலும் இரண்டு, மூன்றாக‌ இருந்தாலும் வரக்கூடிய‌ மணமகனோ அல்லது அவன் பெற்றோர்களின் கட்டாயத்தால் அல்லது மார்க்கம் தாண்டிய போராட்ட குணத்தால் தனித்தனி வீடுகள் பெண் வீட்டாரிடம் வேண்டப்படுவதே இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறலாம்.

எவ்வளவு பரந்த இடத்தை அவ்வீடு பெற்றிருந்தாலும், வீட்டில் இரண்டு மூன்று பெண்கள் இருந்தாலும் அந்த வீட்டை அவ்வீட்டில் திருமணம் முடிக்க இருக்கும் (பெயருக்கு மணமகள் பெயரில்) தன் மகனுக்கே சொந்தமாக்க மணமகனைப்பெற்ற பெற்றோர்கள் சிறிதும் தயங்குவதும் இல்லை அதில் எவ்வித கருணையும் காட்டுவதும் இல்லை.

இதில் யார், யாரெல்லாம் விதிவிலக்கு பெற்றவர்கள், பெறாதவர்கள் என இங்கு பட்டியலிட இயலவில்லை. அதன் அவசியமும் இங்கு வரவில்லை. இது விசயத்தில் யார், யாரெல்லாம் எப்படி நடந்து கொண்டோம்? நடந்து கொண்டிருக்கிறோம்? எப்படியெல்லாம் நடக்கப்போகிறோம்? என்பதை நம்மைப்படைத்த வல்ல ரப்புல் ஆலமீன் நன்கு அறியக்கூடியவனாக இருக்கின்றான்.

இங்கு சொல்ல வந்த விசயம் என்னவெனில், அரபு நாடுகளிலும் வெள்ளைக்கார மேற்கத்திய நாடுகளில் நம் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு சொல்லாத்துயரை அடைந்து (அயல் நாட்டில் வேலை பார்ப்பவர் எல்லாம் சொகுசான வேலைவாய்ப்பில் உள்ளவர்கள் அல்லர்.) தன் ஆசாபாசங்களையெல்லாம் துறந்து, விலைமதிக்க முடியா வாலிபத்தை இஷ்டமின்றி செலவழித்து தன் மகளுக்காக, சகோதரிகளுக்காக அவர்களின் எதிர்கால நலன்களுக்காகவும் குறிப்பாக அவர்களுக்கு வீடு வாசல் கட்டிக்கொடுப்பதற்காக எத்தனை, எத்தனை நம் ஆண் மக்கள் தன் வாழ்க்கையை தியாகம் செய்து அதில் பல பேர் தான் அயாராத உழைப்பில் கட்டப்பட்ட வீட்டை வந்து பார்க்க முடியாமலேயே இவ்வுலகை விட்டு சென்றவர்களும் பலருண்டு.

தேவையில்லாமல் பல லட்சங்கள் செலவழித்து ஊரின் ஒதுக்குப்புறமான இடங்களில் மனைகளை வாங்கி வீடுகள் கட்டிச்செல்வதை விட தான் இருக்கும் வீட்டிலேயே ஒரு பகுதியில் அல்லது மாடியில் கீழ் தளத்தில் இருக்கும் அதே செட்டப்பில் (அமைப்பில்) வீடுகள் கட்டி அதை இரண்டு, மூன்று பிள்ளைகள் பரஸ்பர ஒற்றுமையின் அடிப்படையில் பிரித்துக்கொண்டால் தேவையில்லாமல் ஊரின் எல்லை எங்கோ சென்று கொண்டிருப்பதை தடுக்க முடியும் மற்றும் நிலம் வாங்க கொட்டப்படும் பல லட்சங்கள் மிச்சப்படும். அதிலேயே வீட்டின் மாடியிலோ அல்லது கொல்லைப்புறத்திலோ மற்றொரு பிள்ளைக்கு வீடு கட்டி கொடுக்க முடியும். அதனால் பல சொளகரியங்களும், அவசர நேரத்தில் ஒருவருக்கொருவர் உதவியும், பாதுகாப்பும் நம் சமுதாயத்திற்கு கிடைக்கும் என்பதே குறிப்பாக இங்கு சொல்ல வந்த கருத்து.

சென்னை போன்ற பெரு நகரங்களில்லெல்லாம் மக்கள் ஒரு குடியிருப்பில் மேல் தளம், நடு தளம், கீழ் தளம் என பிரிந்து வாழவில்லையா? இதனால் பல பிரச்சினைகள் வரும் என்று கருதினால் வீட்டுக்கு வீடு தனித்தனியே மின் கட்டண மீட்டர், குடிநீர், ஆழ்குழாய்க்கிணறு, தனித்தனி கதவு எண் மற்றும் குடும்ப அட்டை போன்றவைகள் பல அவசியங்களை கருத்தில் கொண்டுவைத்துக்கொள்ள முடியுமே.

சென்னை போன்ற பெருநகரங்களில் குருவி கூடு போன்ற‌ வீடுக‌ளில் குடும்ப‌ங்க‌ள் வாழ‌வில்லையா? ஊரில் ம‌ட்டும் பெண் வீட்டாரை வ‌த‌க்கி வேண்டா வெறுப்பாக‌ த‌னி வீடு கேட்டு அட‌ம் பிடிப்ப‌த‌ன் அர்த்த‌ம் என்ன‌?

எது எப்ப‌டியோ? பெண்ணுக்கு வீடு கொடுப்பதில் கார‌ண‌, காரிய‌ங்க‌ள் ஆயிரம் சொல்ல‌ப்ப‌ட்டாலும், அத‌ற்கு நியாய‌ம் க‌ற்பிக்க எவரேனும் முய‌ற்சித்தாலும் அது நிச்ச‌ய‌ம் ந‌ம் மார்க்க‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்டாத‌ விச‌ய‌ம் என்ப‌து ம‌ட்டும் ந‌ம் எல்லோருக்கும் ந‌ன்கு விள‌ங்கும்.

உதாரணத்திற்கு மாடி வீட்டைக்கொண்டு இரண்டு பெண் பிள்ளைகளோ அல்லது ஆண் பிள்ளைகள் மட்டுமோ உள்ள வீட்டில் கீழ் (வீடு) தளம் ஒரு பிள்ளைக்கும், மேல்(மாடி வீடு) தளம் மற்றொரு பிள்ளைக்கும் என பரஸ்பரம் நம் உன்னத மார்க்கத்தை முன் வைத்து ஒற்றுமை அடிப்படையில் எழுதிக்கொடுத்தால் அநாவசியமாக பல லட்சங்கள் செலவாகுவதையும், நம் ஆண் மக்களின் விலைமதிப்பற்ற வாழ்நாட்கள் அயல்நாடுகளில் இலட்சியமின்றி வீண், விரயமாகுவதையும் நிச்சயம் தடுக்க/கட்டுப்படுத்த முடியும்.

நம் ஆண் மக்களில் எத்தனையோ பேர் தன் மகளுக்காக, சகோதரிக்காக ஊரில் வீடு கட்டிக்கொடுப்பதற்காக அயல்நாடுகளில் கடினமான வேலைகளுக்கிடையே (கடின வேலை என்பது கடும் குளிரிலும், வெயிலிலும் பொதி சுமக்கும் வேலையோ அல்லது மண் வெட்டும் வேலை மட்டும் தான் என்று பொருள் கொள்ளக்கூடாது. அது அலுவலகத்திலும் பணிச்சுமையாலும்,

ப‌ல‌ த‌ர‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் அழுத்த‌த்தாலும், தொந்த‌ர‌வுக‌ளாலும் குளிர்சாத‌ன‌ அறைக‌ளில் இருந்தால் கூட அது ந‌ம்மை துர‌த்தும்.)

த‌ன் ஆசாபாச‌ங்க‌ளையும், இள‌மைக்கால‌த்தையும் இடித்து த‌ரை ம‌ட்ட‌மாக்கி ஊரில் இல்ல‌ங்க‌ளை எழுப்புகின்றான். சில‌ ச‌ம‌ய‌ம் அதைக்காண‌ இய‌லாத‌வ‌னாய் இறைவ‌ன‌டியும் போய்ச்சேருகின்றான். இதை எல்லாம் ச‌ற்ற‌ல்ல‌ நிறைய‌வே சிந்திக்க‌ க‌ட‌மைப்ப‌ட்டுள்ளோம்.

குறிப்பாக‌ பெண் வீட்டாரிட‌ம் அட‌ம் பிடிப்ப‌வ‌ர்க‌ள் அதிக‌ம் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌ வேண்டும். காரண‌ம் அவர்கள் அட‌ம் பிடித்து த‌ன் ம‌க‌னுக்கு பெண் வீட்டாரிடமிருந்து விருப்பமின்றி எழுதிய‌ வாங்கிய‌ வீட்டில் த‌ன் ம‌க‌ன் வாழ்ந்து அவ‌னுக்கு பிற்கால‌த்தில் பிற‌க்கும் பெண் பிள்ளைகளுக்காக‌ அவ‌ன் அல்லோல‌ப்ப‌ட‌ நேரிடும் என்ற உண்மையான தொலைநோக்கு பார்வையை அவ‌ர்க‌ள் ஒரு போதும் தொலைத்து விட‌ வேண்டாம் அது யாராக‌ இருந்தாலும் ச‌ரியே.

ஆர‌ம்ப‌ கால‌த்திலிருந்து சின்ன‌, சின்ன‌ மார்க்க‌ விச‌ய‌ங்க‌ளை கூட‌ இறுக்கிப்பிடித்துக்கொண்டிருக்கும் நாம் இது போன்ற‌ பெரிய‌(வ‌ர‌த‌ட்சணை)ச‌மாச்சார‌ங்க‌ளில் பல மார்க்க அறிஞர்களைப்பெற்றிருந்தும் கோட்டை விட்ட‌து ஏனோ?

அல்ஹ‌ம்துலில்லாஹ் இன்றைய‌ கால‌ங்க‌ளில் ப‌ல‌ இளைஞ‌ர்க‌ள் போதிய‌ மார்க்க‌ விள‌க்க‌ம் பெற்று பெண் வீட்டாரை க‌ச‌க்கிப்பிழிய‌ விரும்புவ‌தில்லை. அவ‌ர்க‌ள் த‌ன் உழைப்பில் த‌ன் ம‌னைவி, பிள்ளைக‌ளைக்காப்பாற்ற தம்மால் இய‌ன்ற‌ள‌வு முய‌ல்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளின் ந‌ல்ல‌ எண்ண‌ங்க‌ளை ம‌ற்றும் இல‌ட்சிய‌ங்க‌ளை வ‌ல்ல‌ ர‌ப்புல் ஆல‌மீன் த‌டையின்றி நிறைவேற்றித்த‌ர‌ வேண்டும் என்று இங்கு நாமெல்லாம் து'ஆச்செய்வோமாக‌...

நிச்சயமாக நம் இன்றைய கால இளைஞர்களுக்கு இது போன்ற தவறான நடைமுறை ஒடுக்க‌ ஒரு புரட்சி வெடிக்க வேண்டும். அது அனைவராலும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். கொடுக்க வேண்டிய தொந்தரவுகளை கொடுத்து முடித்தப்பின் பெண் வீட்டார்கள் அவர்கள் பிள்ளைக்கு தானாகவே முன் வந்து தான் வீட்டை எழுதிக்கொடுத்தார்கள். நாங்கள் எவ்வித நிர்ப்பந்தமும் கொடுக்க வில்லை என்ற மாயத்தோற்றத்தை தகர்த்தெறிய வேண்டும்.

இது போன்ற தவறுகள் என் வீட்டிலோ அல்லது இதை படிக்கும் உங்கள் வீட்டில் மட்டும் நடந்தவையல்ல. பரவலாக நம்மூரில் எல்லா வீடுகளிலும் நடந்த, நடந்து கொண்டிருப்பவை தான்.

இது விசயத்தில் என் மனதில் பட்டதை இங்கு உங்கள் பார்வைக்காக கொட்டி தீர்த்து விட்டேன். இதில் ஏதேனும் தவறுகள், சரி செய்யப்பட வேண்டிய கருத்துக்கள் இருக்கலாம். இது சம்மந்தமாக‌ நீங்கள் உங்களின் மேலான‌ கருத்துக்களையும், நல்ல, சிறப்பான‌ உபதேசங்களையும் நம் எல்லோரின் பார்வைக்கும் பின்னூட்டமாக வழங்குவீர்கள் என்று எதிர்பார்த்தவனாய் இக்கட்டுரையை முடித்துக்கொள்கின்றேன்.

வரக்கூடிய சங்கை மிகு ரமளானை நாம் சிறப்புடன் வரவேற்று அதன் பரக்கத்தாலும், ரஹ்மத்தாலும், மஹ்பிரத்தாலும் நம் எல்லோரின் ஈருலக தேவைகளையும், ஹலாலான லட்சியங்களையும் நிறைவேற்றித்தர எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீனிடம் இறைஞ்சிக்கேட்டுக்கொள்கின்றேன். ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails