எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி M. றிஸ்கான் முஸ்தீன் (ஸலபி)
- எம். றிஸ்கான் முஸ்தீன் ஸலபிஅறிமுகம்:
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மையாக இருந்த போதிலும் முஸ்லிம்களிடம் இஸ்லாமிய எழுச்சி கடந்த 60 வருடங்களுக்கு முன்னர் தான் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய இயக்கங்களின் பிரவேசம் இதற்கு முக்கிய காரணமாகும். இந்த மார்க்க ரீதியான எழுச்சியில் அகில இலங்கை ஜமாஅத் அன்சார் சுன்னா அல்-முஹம்மதிய்யா வுக்கும் பெறும் பங்கு உள்ளது எனலாம். இஸ்லாம் என்ற பெயரில் முஸ்லிம் சமூகத்தில் மலிந்து கிடந்த அல்லாஹ் மன்னிக்காத பாவம் என்ற இணைவைத்தல் மற்றும் நூதன செயற்பாடுகளை களைவதிலும் நபி(ஸல்) அவர்களது முழுமையான வாழ்க்கை வழிமுறையை பின்பற்றச் செய்வதிலும் மேற்படி இயக்கம் முதன்மையானது எனலாம். ஏக இறைவன் மாத்திரம் தான் வணக்கத்திற்கு தகுதியானவன் அவனது படைப்புக்கள் எக்காரணம் கொண்டும் வணங்கப்படக்கூடாது என்ற இஸ்லாத்தின் அடிப்படையையே தௌஹீத் (ஏகத்துவம்) என சுருக்கமாக அழைப்பர்.
இலங்கையில் முதன் முதலாக இயக்க ரீதியாக மார்க்க எழுச்சியை ஏற்படுத்தியவர் அல்லமா அப்துல் ஹமீத் அல்-பக்ரி என்பவர் ஆவார். இவர் 1947 நவம்பர் 11 அன்று தான் நிருவிய ஜமாஅத் அன்சார் சுன்னா அல்-முஹம்மதிய்யா என்ற இயக்கத்தினூடாக பெரும் புரட்ச்சியையே ஏற்படுத்தலானார்.
இப்பேரறிஞரின் வரலாறு இன்று இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது எனலாம். எந்த அளவுக்கு என்றால் நான் தான் தௌஹீதை முதலாவதாக சொன்னேன்.. இல்லை இல்லை நாம் தான் முதலாவது சொன்னோம் என சில அறிஞர்கள் மற்றும் சில இயக்கங்கள் என்பன பஞ்ஜாயத்து நடத்துகின்றனர். சிலர் தமக்கு எந்த இயக்கம் முகவரி கொடுத்ததோ அதைக்கூட மறந்து என்னவோ வானத்தில் இருந்து வந்து விழுந்தவர்களைப் போன்று வீராப்பு மத்திரம் பேசிக் கொள்கின்றனர். எனவே இலங்கையின் தௌஹீத் வரலாற்றின் உண்மைத் தன்மையை எடுத்துச் சொல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
1947ற்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களின் மார்க்கப் பற்று:
இஸ்லாத்தின் அடிப்படையைக் கோட்பாட்டையே மறந்து வாழ்ந்த தேக்க நிலை
கபுறு வணக்கம், கத்தம், பாத்திஹா, கந்தூரி, ராதிபு என ஏகப்பட்ட நபியவர்களின் வழிகாட்டுதலுக்கு மாற்றமான செயற்பாடுகள் இலங்கையின் நாலா பக்கங்களிலும் மழிந்து காணப்பட்ட அக்காலத்திலே குருநாகல் பறகஹதெனிய எனும் கிராமமும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. குறிப்பாக பறகஹதெனிய பொல்வத்தை எனும் பிரதேசத்தில் ‘முத்துப்பேட்டை ஷேக் யுசுப் வலியுல்லாஹ்’ கபுறடியில் நேர்ச்சைகள் கந்தூரிகள் நடத்தப்பட்டன. இதை ‘வளர்ந்த கபுறடி’ என்றும் அழைப்பர். இவ்வாறே கண்டி வீதியில் ‘தெமடகொல்ல அவ்லியா கபுறடி’ என்றும் இன்னும் ஒரு ஜியாரமும் பூஜிக்கப்பட்டு வந்தது.
இவ்வாறு இலங்கையின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் அங்கெல்லாம் தற்காலத்திலும் சில பகுதிகளில் இருப்பதைப் போன்றே சர்வசாதாரணமாக அல்லாஹ் அல்லாதவர்கள் வணங்கப்பட்டார்கள். அதே வேலை இஸ்லாத்தின் மிக முக்கியமான வணக்கங்கள் முஸ்லிம்களால் கொச்சைப் படுத்தப்பட்டது. தொழுகை போன்ற முக்கியமான வணக்கங்களே சரிவர நிறைவேற்றப் படவில்லை. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மார்க்க சரக்குகளுக்கு முஸ்லிம்களிடம் அதிக மவ்சு காணப்பட்டது.
பெரும்பாலான மௌலவி ஆசாமிகள் மார்க்கத்தை விற்று பணம் சம்பாதிக்களாயினர். அல்குர்ஆனை தொட வேண்டும் என்றால் ஏதாவது துக்கமோ அல்லது சந்தோஷமோ ஏற்படவேண்டும் அதுவும் மௌலவிமாருக்கு கையூட்டு ஏதாவது கொடுத்துத்தான் அல்குர்ஆன் ஓதப்பட்டது. இவ்வாறு இலங்கை முஸ்லிம்கள் ஜாஹிலிய்யத்திலே வாழ்ந்த அந்த சந்தர்ப்த்திலே சில அறிஞர்கள் (சித்தி லெப்பை போன்ற) முஸ்லிம்ளுக்கு மத்தியில் இஸ்லாமிய விழிப்புணர்சியை ஏற்படுத்திய போதிலும் அவை பொரிய அளவில் சமூகத்தில் தாக்கம் செலுத்தவில்லை.
அப்துல் ஹமீத் அல்-பக்ரியின் பிறப்பு, சேற்றில் முலைத்த செந்தாமரை
இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் இருள் சூழ்ந்திருந்த அக்காலத்திலே பறகஹதெனியவில் ‘துலுவே ஆரச்சிலாகே கெதர’ என்ற பெயர் கொண்ட கண்ணியமும் வளமும் கொண்ட குடும்பத்தில் ஆதம் பிள்ளை என்பவருக்கு மூன்றாவது பிள்ளையாக அப்துல் ஹமீத் 1909ம் ஆண்டு ஜுலை மாதம் 27ம் திகதி பிறந்தார். இவருடைய தந்தை மேற்படி ‘வளர்ந்த கபுறடியில்’ கந்தூரிகளை முன்னின்று வழங்கக்கூடியவராக இருந்தார். தந்தையின் இச்செயலை சிறுவயதிலிருந்தே அவதானித்து வந்த அப்துல் ஹமீத் அவற்றில் விருப்பம் அற்றவராக ஒதுங்கி இருந்ததுடன், இது இஸ்லாத்திற்கு முரணானது என்பதையும் உணர்ந்தார்கள்.
அப்துல் ஹமீத் அல்-பக்ரியின் கல்விப் பயணம், தீனுக்கான தியாகப் பயணம்
இதன் விளைவாக மார்க்கத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் அவரில் வளர்ந்தது. இவர் தனது அறிவுப் பசியைத் தீர்த்துக் கொள்ள இலங்கைகயில் பல அரபு கல்லூரிகளுக்கு போய் கல்வி பயின்றார். எனினும் அவரது அறிவுப் பசிக்கு தீனி போடக் கூடியதாக இலங்கையில் இருந்த அரபுக் கல்லூரிகள் தூய இஸ்லாத்தை போதிக்கக் கூடிய அளவுக்கு முதிர்ச்சி அடைந்து காணப்படாமையினால் இந்தியா நோக்கி பயணமானார். அங்கு பொதக்குடி அரபுக் கல்லூரியில் மார்க்க கல்வியை கற்றுவிட்டு 1930ல் தாயகம் திரும்பினார்.
பின்னர் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று முஸ்லிம்களின் யதார்த்த நிலையை உணர்ந்து கொண்டதுடன் தனக்குள்ள கடமைகளையும் பொறுப்புகளையும் எண்ணி தன்னை ஒரு தெளிவான திசையில் செலுத்தத் தீர்மானித்துக் கொண்டார். தான் மேலும் மார்க்கத்தை விளங்க வேண்டும் என்ற அவாவோடு இந்தியாவில் தான் கற்ற ஆசிரியர் ஒருவரின் உபதேசத்திற்கு அமைய 1935ல் இந்தியா ஊடாக மக்கா நோக்கி கல்விப் பயணம் மேற்கொண்டார். மக்காவில் திருப்தியுடன் மார்க்கக் கல்வியை கற்றுத் தேர்ந்தவராய் தான் கற்ற தூய மார்க்கத்தை மக்கள் மன்றத்தில் பறைசாற்றும் முகமாக 1947 செப்டம்பர் 27 ஆம் திகதி தனது தாய் மண்ணாகிய இலங்கைக்குத் திரும்பினார்.
தஃவா களத்தில் அப்துல் ஹமீத், அஞ்சா நெஞ்த்தோடு உண்மையை உரத்துக் கூறக் கிழம்பியவர்
1947ம் ஆண்டு தொடக்கம் தனது அழைப்புப் பணியை குடும்ப மட்டத்திலிருந்து ஆரம்பித்தார். தொடர்ந்து தனது கிராமத்திலும் அல்லாஹ் மாத்திரம் வணங்கப்பட வேண்டும் என்கின்ற ஏகத்துவப் பிரச்சாரத்தை முன்வைக்க கச்சை கட்டிக் கொண்டு இறங்களானார்.
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான்’ அல்-குர்ஆன் (4:116)
என்ற வசனத்தை முதன்மைப் படுத்தி ஷிர்க்கை முற்றாக ஒழிப்பதற்கு அயராது பாடுபட்டார். தனது தனது தஃவாப் பணியின் விரிவாக்கம் தல்கஸ்பிட்டிய, பானகமுவ போன்ற அயல் கிராமங்களின் கதவுகளையும் தட்டியது. ஈற்றில் ஒரு பெரும் கூட்டமே அப்துல் ஹமீத் அவர்களின் பின்னால் அணி திரண்டது.
இதனால் மன உறுதியடைந்த அவர்கள் நபியவர்களின் வழிகாட்டளுக்கொப்ப பரகஹதெனியாவில் பிரசித்தி பெற்ற இரு கபுறுகளுக்கும் 1948 மார்ச் 23ம் திகதி இஷாத் தொழுகையின் பின் ஆப்பு வைத்தார்.
அல்லாமாவுக்கெதிராக அணிதிரண்ட அவ்லியா பக்கதர்கள் தோற்றுப் போன கபுரு வணங்கிகள்
அல்லாஹு அக்பர் என்ற வீர முழக்கத்தோடு அந்த இரு மண்ணறைகளையும் சமப்படுத்தி அவ்லியா வழிபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த அப்துல் ஹமீதுக் கெதிராக அவ்லியா பக்தர்கள் அணிதிரண்டனர். இச்செய்தியோ காட்டுத் தீயாய் எங்கும் பரவியது. ஆத்திரமடைந்த கபுறு வணங்கிகள் கொதித்தெழுந்தனர். அப்துல் ஹமீத் அவர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களும் எதிராக வழக்கும் தொடுத்தனர். இவ்வழக்கு 1948 மார்ச் மாதம் 43114ம் இலக்கத்தில் நீதிமன்றத்தில் பதியப்பட்டது.
எமது வணக்கஸ்தளத்தை உடைத்து விட்டனர் என வாதிட்ட எதிர்தரப்பு வாதிகள் அப்போது சபாநாயகராக இருந்த எச்.எஸ் இஸ்மாயீல் அவர்களையும் அமைச்சராக இருந்த டீ.பீ ஜாயா அவர்களையும் அணுகி உதவி கோரினர். எவ்வளவோ பிரயத்தனங்களை மேற்கொண்ட போதிலும் தோல்வியடைந்த கபுறு வணங்கிகள் திகைத்துப் போய் நின்றனர்.
சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் என நீர் கூறுவீராக’ (பனீஇஸ்ராயீல்: 81)
என்ற அல்லாஹ்வின் வாக்கு நிறுபிக்கப்பட்டு அப்துல் ஹமீத் அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியை வழங்கினான். உண்மையில் இது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்த வெற்றி என்றால் அது மிகையல்ல.
இயக்க ரீதியான செயற்பாட்டை தோற்றுவித்தல்:
உண்மைச் சொல்ல உதயமான இயக்கம்
இவ்வெற்றியானது மென்மேலும் தனது தஃவாப் பணியை துரிதப்படுத்த வழி அமைத்தது. அவ்வாறே தான் ஏளவே ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னா அல்முஹம்மதியா என்ற அமைப்பை 1947 நவம்பர் 11ம் திகதி நிறுவியமை தனது தஃவாப் பணியை நிறுவனமயப்படுத்த முடிந்தது. தற்காலத்தில் ஆங்காங்கே எந்த ஒரு தூர நோக்கும் இல்லாமல் உலக ஆதாயங்களை மாத்திரம் கருத்திற் கொண்டு தோன்றி மறையும் இயக்கங்களைப் போன்று இருக்காமல்
தான் இஸ்தாபித்த இஸ்லாமிய இயக்கத்தின் நோக்கங்களையும் இலக்குகளையும் பின்வருமாறு பட்டியலிட்டார்.
1. அல்குர்ஆன் அஸ்ஸுன்னா சார்ந்த இமாம்களது கருத்துக்களை ஏற்று நடத்தல்.
2. தொழுகை நோன்பு ஸகாத் போன்ற கடமைகளில் அதிகம் கவனம் செலுத்துதல்.
3. ஸுன்னத்துக்களை உயிர்ப்பிபதுடன் பித்அத்களை முற்றாக ஒழித்தல்.
4. நன்மையை ஏவி தீமையை தடுத்தல்.
5. அல்குர்ஆன் அல்ஹதீஸ் அரபு மொழி அடிப்படை சட்டங்களை (பிக்ஹு) கற்பிக்க அரபுக் கல்லூரிகள் நிறுவுதல்.
6. அமைப்பின் பிரச்சாரப் பணிக்காக ஒரு பத்திரிகையை நடத்துதல்.
7. பிளவு பட்டுள்ள முஸ்லிம் உம்மாவை ஐக்கியப்படுத்தி முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லல்.
மேற்படி இலக்குகளை அடையும் பொருட்டு முதற்கட்டமாக முஸ்லீம்களின் கேந்திரஸ்தளமான பள்ளிவாசலோடு ஒட்டி ஒரு மத்ரஸாவை பரகஹதெனிய பொல்வத்தை பிரதேசத்தில் 1948ம் ஆண்டு நிறுவினார். மேலும் இதனை கலாசார அமைச்சில் பதிவு செய்தார். அங்கு அல்குர்ஆன் அல்ஹதீஸ் அரபு மொழி சிங்கள மொழி பிக்ஹு போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அன்று அப்துல் ஹமீத் அவர்கள் விதைத்த தாருத் தவ்ஹீத் எனும் விதை இன்று அல்லாஹ்வின் பேரறுளால் ஆலமரமாய் பல கிளைகளுடன் விருட்ச்சமாய் காணப்படுவது நாடறிந்ததே.
அல்லாமாவின் எழுத்துப் பணி
அசல் இஸ்லாத்தை எழுத்துருவில் மக்கள் மன்றத்தில் வைத்த அப்துல் ஹமீத்
சமூக மாற்றத்திலும் மறுமலர்ச்சியிலும் பொதுசன தொடர்பு சாதனங்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதை நன்குணர்ந்து இஸ்லாமிய அழைப்புப் பணியில் மீடியாவைப் பயன்படுத்தி உண்மை உதயம் எனும் பெயரில் சொந்தமாக ஒரு பத்திரிகை நடாத்தி இஸ்லாத்தை தெளிவு படுத்த முற்பட்டார். இவரது இப்பாரிய முயற்சி பிற்காலத்தில் இலங்கையில் தோன்றிய இயக்கங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. 1955ம் ஆண்டு ஆறம்பிக்கப்பட்ட இப்பாரிய சமூகப் பணி இன்றுவரை சமூகத்தில் பெரும் தாக்கம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆக்காலத்தில் முஸ்லிம் நேசன் இஸ்லாமியத் தாரகை தப்லீகுல் இஸ்லாம் போன்ற பத்திரிகைகள் வெளிவந்த போதிலும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எத்தி வைப்பதன் நோக்கத்தை உண்மை உதயம் நிவர்த்தி செய்தது.
இது மாத்திரமன்றி நூல் வெளியீடு மற்றும் மொழிபெயர்ப்பு முயற்ச்சிகளிலும் அல்லாமா கால்பதித்தார். அவர்களாக எழுதி வெளியிட்ட புத்தகங்கள்,
1. சத்தியப் போர்வையில் அசத்தியம் வளர்க்கும் அஹமதிய்யாக்களுக்கு அல்லாமா அப்துல் ஹமீதின் ஆணித்தரமான பதில்
2. விசக் கிருமிகளுக்கோர் கிருமி நாசினி
3. தப்லீக் எதிர்ப்பாளர்களுக்கு மறுப்பு
4. நபியின் நற்குணங்கள்
5. அல்லாஹ்விடம் இருந்து எமக்கு வந்த தூதுத்துவம்
மொழிபெயர்ப்புக்கள்
1.இஸ்லாமும் இலஞ்சமும் (உஸ்மான் இப்ராஹீமுல் ஹாகிம்)
2. புராதன சின்னங்களை கௌரவிப்பது இவ்வாரல்ல (பின் பாஸ்)
3. மவ்லீது ஓதலாமா?
4. ஏகத்துவத்தின் இரகசியங்கள் (இப்னு ஹஜர் அல் பூதமி)
தாயிகளை உருவாக்குதல்
இப்பணி தன்னோடு முடிந்து விடக்கூடாது என்ற அல்லாமாவின் ஆதங்கம்
இவ்வாறு நூற்கள் வடிவில் மார்க்கத்தை விளக்கிய அப்துல் ஹமீத் (ரஹ்) அவர்கள் தனது பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற ஆவலில் ஒரு சிறந்த மாணவக் குழுவை உருவாக்கும் நோக்கோடு சுமார் 12 மாணவர்களை பாகிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சில காலம் அம்மாணவக் குழு கல்வி கற்றதும் மக்கா நோக்கி அவர்களை அழைத்துச் சென்றார். அதில் அப்துல் ஹமீத் (ரஹ்) அவர்களின் நோக்கத்தை அஷ்ஷெய்க் ஸாதிஹான் ஸெய்லானி, என்.பீ.எம்.அபூபக்கர் சித்தீக் (மதனி) இன்னும் பலர் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் இவர்கள் இலங்கை மாணவர்களின் நலன் கருதி அக்கால சவூதி மன்னர் ‘அப்துல் அஸீஸ் இப்னு அப்துல் ரஹ்மான்’ என்பவரிடம் சில வேண்டுகோள்களை முன்வைத்தார். அதற்கிணங்க இலங்கை மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதி வாய்ப்புக்கள் சவூதியில் வழங்குமாறும் அவர்களுக்குரிய புத்தகங்கள், நிதியுதவி மற்றும் புலமைப் பரிசில் என்பன வழங்குமாறும் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். இதன் விளைவை அல்லாஹ்வுடைய பேரருளால் இன்று வரை நூற்றுக்கணக்கான ஆலிம்கள் சவுதி அரேபியாவின் பிரதான பல்கலைக்கழகங்களான மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகம், மக்கா உம்முல் குரா, ரியாத் மலிக் ஸஊத் மற்றும் ஜாமிஅதுல் இமாம் அகிய கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறி இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக மற்றும் கல்வித் துறை வளர்ச்சியில் பெறும் பங்காற்றிக் கொண்டிருக்கின்றமை மறுக்க முடியாத உண்மையாகும். நடப்பு வருடத்தில் கூட கிட்டத்தட்ட 60 க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் இலமாநி, டிப்ளோமா, முதுமானி மற்றும் கலாநிதி என எல்லா மட்டங்களிலும் கால்பதித்துல்லமை உள்ளங்கை நெல்லிக் கணியே. இவ்வாய்பை பெற்ற மற்றும் பெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய மாணவர்கள் அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிராத்திக்க வேண்டும்.
அரசியலில் அல்லாமா:
முஸ்லிம்களுக்கும் தனிக்கட்ச்சி தேவை என்பதை உணர்நதவர்
முஸ்லிம்கள் என்றும் பேரினவாத கட்சிகளையே நம்பி அர்கள் பின்னால் போகவேண்டிய நிலை தொடரக் கூடாது என்பதை நன்கு உணர்ந்து முஸ்லிம்களின் தனித்துவத்தை பிரதிபலிப்பதற்கு முயற்சித்தார். அதே வேளை உண்மையான மார்கத்தை சொல்லக் கிழம்பியபோது அன்றிருந்த அரசியல்வாதிகள் அதற்கு தடையாக வந்ததை அனுபவத்தில் உணர்ந்து அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்ற அவருடைய இவ்வுறுதிப்பாடு அரசியலில் பிரதிபலித்தது. அதாவது அவர் 1960-01-10ம் திகதி ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார். அதில் 1960 ஆண்டு பொதுத் தேர்தலின் பின் தமது அமைப்பு ஒரு கட்சியாக இனிவரும் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் என்பதை பொதுமக்களுக்கு அறிவித்தார். முஸ்லிம் உம்மத் அரசியற் காரணிகளால் ஒரு போதும் பிரிந்துவிடக் கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருந்தார்.
தொடர்ந்து இஸ்தாமியப் பிரச்சாரத்தை பகிரங்க மேடைகளிலும் மேற்கொண்டார். இவற்றில் பறகஹதெனிய கலந்துரையாடல், இஸ்லாம் மத ஆராய்ச்சி மாநாடு, என்ற தலைப்பிலான தல்கஸ்பிடிய மாநாடு, கல்முனை மாநாடு என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.
மரணம்
ஒரு புத்துயிர்ப்புவாதியின் இறுதிப் பயணம்:
இலங்கை இஸ்லாமிய அழைப்புப் பணியின் வரலாற்றிலேயே முதன்மை பெற்றுத்திகழ்ந்தவர் அப்துல் ஹமீத் அப்பக்ரி (ரஹ்) அவர்களாவார் என்றால் அது மிகையான கூற்றாகாது. இஸ்லாமிய நோக்கில் கால, சூழ்நிலைகள் பற்றிய அறிவும், தெளிவும் உள்ள எந்த சமூகவியல் ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டிய தெளிவான உண்மை இதுவாகும்.
இவர் அசத்தியத்திலிருந்து மக்களை சத்தியத்தின் பால் அழைப்பதில் பல்வேறு வழிகளைக் கையாண்டு அவற்றில் வெற்றியும் கண்டவர். இவ்வழிமுறைகளில் ஷிர்க், பித்அத் நடைபெரும் இடங்களுக்கு கடிதங்களை அனுப்பி பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதன் விளைவாக பலர் திருந்தியமை குறிப்பிடத்தக்கது.
சுருங்கக் கூறின் அப்துல் ஹமீத் (ரஹ்) அவர்கள் இந்த சமூகத்தில் விளைவித்த தாக்கங்கள் ஆக்கபூர்வமானவை, அவசியமானவை, இஸ்லாத்தில் கலந்திருந்த பிறமதச் சிந்தனைகளை களையெடுத்த அதேவேளை தூர்ந்து போயிருந்த இஸ்லாமிய சிந்தனைகளை மீண்டும் கண்டு பிடித்து இஸ்லாம் காட்டியிராத சடங்கு சம்பிரதாயங்களை நீக்கி, இஸ்லாமிய கடமைகளையும் நபி வழிகளையும் மேற்கொள்ளுமாறு இந்த சமூகத்தை தூண்டியதுமே இவரது தஃவா வரலாற்றின் சாரம்சமாகும்.
இவ்வாறு ஓரிறைக் கொள்ளையை பரப்புவதற்கே தன்னை அர்ப்பணித்த அப்துல் ஹமீத் (ரஹ்) அவர்கள் 1976ம் ஆண்டு மே மாதம் 9ம் திகதி மாலை மஃரிப் வேளை அல்லாஹ்வின் புனித கஃபா இருக்கும் பூமியான மக்கமா நகரில் தனது மனைவி, மக்கள், நண்பர்கள் மத்தியில் தனது இறுதி மூச்சை விட்டார். ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’
இவ்வாறு மார்க்கத்துக்காய் போராடிய ஒரு ஏகத்துவப் போராளியின் இவ்வுலக வாழ்க்கை முற்றுப் பெற்றது. இவரது வாழ்வில் நாம் அனைவரும் படிப்பினை பெறுவோமாக. அவர் எம்மை விட்டுப் பிரிந்த போதிலும் அவர் எமக்காக விட்டுச் சென்ற உண்மை உதயம் மாசிகை, ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னா அல்முஹம்மதியா, தாருத் தவ்ஹீத் அரபுக் கல்லூரி, தாருத் தவ்ஹீத் நூல்நிலையம் என்பன பல வளர்சி படிக்கற்களை தாண்டி முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காய் தொடர்ந்தும் உழைக்கின்றன. அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தஸ் எனும் சுவர்க்கத்தில் சேர்த்தருள்வானாக! மேலும் இப்பணிகளை தொடர்கின்றவர்கள் மீதும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக!
தொகுப்பு: பறகஹதெனிய ஸலபி, மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகம், சவுதி அரேபியா
தகவல்கள்Source : http://www.islamkalvi.com/portal/?p=4886
1. இப்றாஹீம் எம்.எம்.எம் அல்லாம் அப்துல் ஹமீத் அல்பக்றி (றஹ்) வாழ்வும் பணியும்.(1996) ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னா அல்முஹம்மதியா பறகஹதெனிய
2. எம். றிஸ்கான் முஸ்தீன், இலங்கை முஸ்லிம்களிடம் தவ்ஹீதின் எழுச்சியை ஏற்படுத்திய முன்னோடி (2005 ஆகஸ்ட்) சத்தியக் குரல் கொழும்பு
3. அப்துல் ஹமீத் பக்றியின் சகோதரரின் புதல்வரான காலம்சென்ற அமீன் ஹாஜியார் அர்களின் மனைவி ஹுஸைனா உம்மாவுடன் நிகழ்ந்த செவ்வியில் இருந்து
No comments:
Post a Comment