Thursday, August 12, 2010

இனிய நம்(ப‌ழைய‌) ர‌ம‌ளானின் நினைவுக‌ளிலிருந்து....

இனிய நம்(ப‌ழைய‌) ர‌ம‌ளானின் நினைவுக‌ளிலிருந்து....

ஒரு காலத்தில் வறட்சியான கடும் கோடை காலத்தில் புனித ரமளான் நோன்பு வரும்.
                                                             
அப்பொழுது பள்ளிக்கூடங்களெல்லாம் தன் முழு ஆண்டு விடுமுறையை விட்டிருக்கும். அதனால் அச்சமயம் சிறுவர்களாக இருந்த நம் நெஞ்சத்தில் சந்தோசம் குடி கொள்ளும்.

தலை நோன்பு. மஹ்ரிப் நேரம் நெருங்கும். பிறையைப்பார்க்காமல் விட மாட்டோம். அதை பிடித்து வராமல் விட மாட்டோம் என உறுதி மொழி எடுத்தவர்கள் போல் சிறுவர் பட்டாளம் தெருக்களில் உலா வரும். பிறையைக்கண்ட செய்தி கிடைத்தால் தெருதோறும் 'பிறையைக்கண்டாச்சு. பிறையைக்கண்டாச்சு' என கூப்பாடு போடும் சாப்பாடு இல்லாமல்.

தெளிவான வானம் தென்பட்டாலும். நாம் பார்க்க முடியாமல் போன அப்பிறையை அந்த கொழும்பு ரேடியோ எப்படியும் பார்த்தே தீரும். அதன் தீர்ப்பே இறுதி தீர்ப்பாக எண்ணி நோன்பு ஆரம்பமாகும் நம் ஊரில்.

தராவீஹ் தொழுகை இருபது ரக்காத்துகள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடக்க இருப்பதை எண்ணி கால் வலிப்பது போல் கட்டப்பட்ட சைத்தானைத்தாண்டி உள்ளம் ஒரு மாயயை ஏற்படுத்தினாலும் அதற்குப்பின் ஆரம்பமாகும் இரவை பகலாக்கும் அவ்விளையாட்டுக்களை எண்ணி மனம் ஆறுதல் பெறும். ஆறுதலுக்கு மேல் ஏழுதல், எட்டுதல் இருந்தாலும் அதையும் நிச்சயம் பெற்றிருக்கும் அச்சமயம்.

பள்ளிவாசலுக்கு நோன்பு கஞ்சி காய்ச்ச இஞ்சி, பூண்டு உரித்துக்கொடுத்தாலே பெரும் பாக்கியம் பெற்றவர்களாக கருதப்பட்டோம் அன்று.

பள்ளிவாசல் 'நஹரா'க்களெல்லாம் பகல் நேரத்தில் சூரியக்குளியல் எடுக்கும். நேரம் வரும் சமயம் இடிமுழக்கமென தன் சப்தத்தை ஊருக்கு பறைசாற்றும். பூக்கமளெயால் சீவப்பட்ட கம்புகள் பள்ளி சாபின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருவூல சாவி போல்.

இரவு நேர விளையாட்டு வீரர்கள் வீரத்துடன் விளையாட தேவையான ஊட்டச்சத்துக்களை தற்காலிகமாய் தோன்றிய ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன்வீட்டா, கல்கண்டு பால், கடல்பாசி, கவாப் கடைகள் வழங்கும்.

கவாப் கடையில் இரும்பு கம்பியில் சொறுகப்பட்ட மசாலாக்கலந்த இறைச்சியுடன் எம் ஆசையும், ஏக்க‌மும் சேர்த்தே சொறுக‌ப்ப‌ட்டிருக்கும். அதை வாங்கி ஆவ‌லுட‌ன் சாப்பிடுவ‌து என்ன‌வோ ஒரு சுன்ன‌த்தான‌ செய‌ல் போல் ந‌ட‌ந்தேறும்.

எதாவது ஒரு பள்ளியிலிருந்து திருக்குர்'ஆனின் வசனம் ஒலிபெருக்கி மூலம் காற்றில் கரைந்து வந்து நம்மை தாலாட்டும் ரமளான் முழுவதும். இரவுத்தொழுகைக்குப்பின் பள்ளிகளில் ஹிஜ்பு ஓதப்பட்டு அதற்கு கொடுக்கப்பட்ட நார்சா மிச்சர், காராசேவை நம் வீட்டு அப்பா கொண்டு வந்து கொடுத்ததை நினைக்கும் பொழுது வருடங்கள் பல ஓடிப்போயிருந்தாலும் இன்றும் அந்த மிச்சரின் மொரு,மொருப்பு குறையவில்லை (சவுத்துப்போகாமல் இருக்கின்றது).

வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் நம் குடும்ப,தெருவைச்சார்ந்த வயதிற்கு மூத்தவர்கள் மினு,மினு சட்டை அணிந்து, புது செருப்பு, புது தொப்பி அணிந்து ஆடையில் நறுமணம் பூசி பள்ளிக்குச்செல்வார்கள். அவர்களைப்பார்த்து அன்று விளங்காமல் ஆசைப்பட்டோம்.(வெளிநாட்டு மோகம் என்ற ஆப்பை அன்று நமக்கு நாமே அடித்துக்கொண்டோம் அதை இன்றும் பிடுங்க முடியாதவர்களாய்)

தலை நோன்பு பிடித்து செய்வதறியாதிருந்த நம்மை சீவி, சிங்காரித்து, தலையில் ஊதா தொப்பி அணிந்து, புது சட்டை போட்டு, புது வேட்டியுடன் மாலை நேரத்தில் தெருவில் உலா வந்து பாக்கெட்டுகளை நிரப்பினோம். அதில் பரவசமும் கண்டோம்.

நோன்பு மாலை நேர குளங்களெல்லாம் காமென்வெல்த் விளையாட்டரங்கு போல் காட்சியளிக்கும் (ஊழல்கள் செய்ய வாய்ப்பின்றி). குளித்து கண்களெல்லாம் சிவந்து போகும். நாம் பிடித்த நோன்புகளில் எத்தனை நோன்புகள் செக்கடிகுளத்திலும், செடியன் குளத்திலும், கடல்கரை குளத்திலும் திறந்தோமோ? அல்லாஹ்வே அறிவான்.

குளிர்சாதனப்பெட்டிகளெல்லாம் (ஐஸ் பெட்டி) எல்லோர் வீட்டிலும் இல்லாத காலம் அது. பல்லிளித்து வாங்கிய ஐஸ் கட்டிகளும், பன்னீர் கலந்த இளநீரும், டேங்கில் கலந்த சர்பத்தும் நம் தேகத்தை குளிரூட்டும் மின்சாரமின்றி மின்'தடையைத்தாண்டி.

நல்ல நாளு, பெரிய நாளு பார்த்து தண்டிக்கப்பட்ட/துண்டிக்கப்பட்ட மின்சாரம். நம் வீட்டு பெரியவர்களின் கோபம் கலந்த சாபத்தை கூடை நிறைய பெரும். நல்ல நாளு, பெரிய நாளுக்கும் மின்சாரவாரியத்திற்கும் ஏதேனும் கள்ளத்தொடர்பு இருக்குமோ? கலிச்சல்லபோகுமோ?

முட்டை விளக்கும், அரிக்களாம்பும் நம் வீட்டுப்பெண்மணிகளுக்கு அவசர கால ஆம்புலன்ஸ் போல் அன்றாடம் உதவி செய்யும். வீட்டு பிரோ சாவியை மறந்தாலும் மண்ணெண்ணெய் இருக்குமிடம் ஒரு போதும் மறக்கமாட்டார்.

ஒரு நேரத்தில் வீட்டில், குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், பொருளாதார நெருக்கடிகள் வந்து குரல்வளைகளை நெறித்தாலும் கணவன்,மனைவி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விட்டு கொடுத்து கடைசி வரை தொடர்புகள் துண்டிக்கப்படாமல் இறுதி வரை சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றோ சிறு,சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் குழந்தைகளைப் பெற்றிருந்தும் பரஸ்பரம் ஒற்றுமையில்லாமல் யாரோ,எவரோ என்று (தலாக் மூலம்)இணைய வாய்ப்பின்றி பிரிந்து விடுகின்றனர். பிறகு கணவன் தன் துணையை தேடிக்கொள்கின்றான். மனைவியும் குடும்பத்தினரின் வற்புறுத்தலில் தனக்குரிய துணையுடன் இணைகிறாள். இரண்டிற்கும் நடுவே பிறந்த குழந்தைகள் தாயுடன் இருந்தாலும் காலப்போக்கில் அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் ஆகிவிடுகின்றது. இது ஒரு நல்ல ஆரோக்கியமான முடிவன்று. முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

அல்லாஹ் சங்கை மிகு புனித ரமளானின் பொருட்டு நம் அனைவ‌ருக்கும் ந‌ற்கிருபைக‌ளை வாரி வ‌ழ‌ங்குவானாக‌வும்.. என‌ அவ‌னிட‌ம் இறைஞ்சிக்கேட்ட‌வானாய் இன்ஷா அல்லாஹ் ம‌ற்றொரு க‌ட்டுரையில் ச‌ந்திப்போம்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.
http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_12.html
 

1 comment:

ரஹீம் கஸ்ஸாலி said...

உண்மையில் இது ஒரு மலரும் நினைவுகள்

LinkWithin

Related Posts with Thumbnails