Sunday, August 10, 2014

வாசிப்பு நம் சுவாசிப்பு!

கல்வித் தேடல் என்பது முஸ்லிம்களின் கடமை. இக்கடமையின் தொடக்க நிலை வாசிப்பும் எழுத்துமாகும். வாசிக்காத சமூகம் தனது வெற்றியைப் பற்றி யோசிக்க முடியாது.

வலைத்தளங்களின் வளர்ச்சியினாலும், முகநூல் போன்ற சமூகத் தளங்களின் ஆதிக்கத்தினாலும் இன்று வாசிப்புப் பழக்கம் வெகு வேகமாக விடைபெற்று வருகிறது. பிறரிடம் கேட்டு அறிந்து கொள்வதும், அத்தோடு தங்களது அறிவுத் தேடலை போதுமாக்கிக் கொள்ளும் போக்கும் தொடர்கின்றன. சுய தேடல் என்பதைக் கைவிட்டு விலைமதிப்பற்ற நேரத்தை வீணான காரியங்களில் ஈடுபட்டு பாழாக்குகின்ற ஒரு பரம்பரை உருவாகிக் கொண்டிருக்கிறது.
பெரும்பாலான மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக வாசிக்கிறார்கள், மனனமிடுகிறார்கள். தேர்வு முடிவுற்றதும் தேய்ந்து விடுகிறது வாசிப்பு. எழுத்துக்கும், எழுதுகோலுக்கும் முக்கியத்துவம் கொடுத்த குர்ஆனைச் சுமந்தவர்கள் என்று பெருமையாக மார்தட்டிக் கொள்வதற்கு மட்டும் நாம் தயங்குவதில்லை.

வாசிக்க வேண்டும் என்றவுடன் சினிமா செய்திகள் நிறைந்த சில வார இதழ்களை எடுத்து புரட்ட ஆரம்பிப்பார்கள் சிலர். இது பயனுள்ள வாசிப்பு அல்ல. மாறாக, சிந்தனைக்கு விருந்தாக அமையக்கூடிய, உள்ளத்தைப் பண்படுத்தக்கூடிய, நடத்தைகளை நெறிப்படுத்தக்கூடிய நல்ல நூல்களை வாசிப்பதே பயன் தரும்.

நமது வாசிப்பு திருக்குர்ஆனிலிருந்து துவங்க வேண்டும். திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் வாசிப்பையும், சிந்திப்பதைப் பற்றியும் கூறுகின்றான்.

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும்போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள். வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மகா தூய்மையானவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்று பிரார்த்தித்துக்கொண்டிருப்பார்கள்.) (திருக்குர்ஆன் 3:191)

திருக்குர்ஆனை எப்பொழுதும் நிரந்தரமாக வாசிக்க வேண்டும். தினமும் அதற்கு சில மணித்துளிகள் ஒதுக்கிட வேண்டும். அதன் பிறகு நல்ல பயனுள்ள நூல்களை வாசிக்க வேண்டும்.

“அறிவு ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை காணாமல் போன சொத்து. அவர் அது கிடைக்குமிடமெல்லாம் சென்று ஆவலுடன் சேகரித்துக் கொள்ள வேண்டும்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதீ)

முஸ்லிம்களின் அறிவியல் பாரம்பரிய வரலாற்றை எடுத்து ஆராய்ந்தால் சுய தேடலுக்கான முன்மாதிரிகளைக் கண்டுகொள்ளலாம். இமாம் இப்னு ருஷ்த் அவர்கள் இரு சந்தர்ப்பங்களில் மட்டுமே வாசிக்காது இருந்துள்ளார்கள். முதலாவது சந்தர்ப்பம் அவரின் தாய் இறந்த நாள். இரண்டாவது, அவரது திருமண நாள்.

அப்பாஸியர்களின் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் தமது அரசவை பணிகளிலிருந்து விடுபட்டு இருப்பதற்கு சிறிதளவு அவகாசம் கிடைத்தாலும் கூட, புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கி விடுவார்களாம்.

ஐரோப்பிய – அமெரிக்க நாடுகள் அன்று நாகரிகமோ, பண்பாடோ, நல்ல பழக்கவழக்கங்களோ தெரியாமல் அறியாமையிலும், மௌட்டீகத்திலும் மூழ்கிக் கிடந்தன. இஸ்லாமிய எழுச்சியும், முஸ்லிம்களின் அறிவுத் தேடலும்தான் இருள் படிந்திருந்த உலகுக்கு அறிவு தீபம் ஏற்றி ஒளி கொடுத்தது.

இஸ்லாம் அறிவையும், ஆராய்ச்சியையும் தூண்டுகின்றது. ஏனைய மதங்கள் போன்று அது ஆன்மீகம் பற்றி மட்டும் பேசவில்லை. அது இயற்கையை ஆராயச் சொல்கின்றது. இதுவே அறிவியல் எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்தது.

இஸ்லாத்தின் முதல் தூது, ‘இக்ரஃ!” (ஓது! வாசி!) என்ற கட்டளையுடன்தான் துவங்கப்பட்டது. முதலில் இறங்கிய 5 வசனங்களும் வாசித்தல், கற்றல், எழுதுதல் பற்றியே கூறுகின்றன. அறிவியலின் அனைத்துத் துறைகளையும் முஸ்லிம்கள் தொட்டார்கள். அதில் அவர்கள் உச்சி வரை சென்றார்கள். சரி, எப்படி வாசிப்பது? அதனை ஓர் அறிஞரின் வாயிலாகவே கேட்போம்.

“ஒரு புத்தகத்தை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால், அதை உங்களுக்குள்ளே இரண்டறக் கலக்கச் செய்ய வேண்டுமென்றால், ஆசிரியரின் எண்ணங்களோடு உங்கள் எண்ணங்களையும் கலந்து அதை உங்களின் தனிப்பட்ட அனுபவமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் அதை நீங்கள் நிதானமாகப் படித்தேயாக வேண்டும்” என்று Slow Reading (2009) என்ற புத்தகத்தின் ஆசிரியரான ஜான் மீய்டெமா (John Miedema) கூறுகிறார்.

ஒரு சமுதாயத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் இளைஞர்களும் மாணவர்களும் இதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். உயிரினும் மேலான நேரத்தை அவர்கள் நாசப்படுத்தி விடாமல் வாசித்தலில் கழித்து பயன் பெற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உனக்குப் பயன் தரும் விடயங்களில் பேரார்வம் கொள். அல்லாஹ்வின் உதவியைப் பெற்றுக் கொள். எதையும் செய்ய இயலாது என்று இருந்து விடாதே. உனக்கு துன்ப துயரம் ஒன்று ஏற்பட்டால் “நான் இவ்வாறு செய்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமே” என்று கூறாதே! மாறாக, ”அல்லாஹ் திட்டமிட்டு தீர்மானித்தது நடந்திருக்கிறது” என்று கூறு. ஏனெனில், இவ்வாறு செய்திருந்தால், அவ்வாறு செய்திருந்தால் என்ற வார்த்தை ஷைத்தானின் செயலுக்குரிய வாயிலைத் திறந்து விடும்.” (முஸ்லிம்)

MSAH
http://www.thoothuonline.com/archives/66364

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails