தமிழகத்திலேயே கதிரியக்கத்தை அதிக அளவில் எதிர்கொள்ளும் ஊர்களின் வரிசையில் முதல் வரிசையில் இருக்கிறது காயல்ப்பட்டினம். ஒவ்வொரு வாரமும் யாரோ ஒருவர் புதிதாக வெளியூர் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய சூழல் உருவாகிறது. ஒவ்வொரு மாதமும் யாரோ ஒருவருக்குப் புதிதாக ‘அது’ கண்டறியப்படுகிறது. வெகு சீக்கிரம் ஒரு நாள் ‘அது’ கொன்றுபோடுகிறது.
அபலைகளின் கதறல்
“ஐயா, பொறுப்புள்ள பிள்ளையா. பதிமூணு வயசுல இப்பிடி ஒரு பிள்ளையை நீங்க பார்க்க முடியாது. தாய் – தந்தை மேல அப்பிடி ஒரு பிரியம், மதிப்பு. கடலுக்குப் போயி நூறு, எரநூறுக்கு உயிரைக் கொடுத்து, அப்பன் பொழைக்கிறாம்னு சொல்லி, நல்லாப் படிச்சுக் குடும்பப் பொறுப்பை ஏத்துக்கிடுவேன்னு சொல்லிக்கிட்டிருந்த பிள்ளை. ஒரு நா கைய வலிக்குண்ணாம். கடுக்குண்ணாம். ஆஸ்பத்திரி போனோம். மருந்து மாத்திரை கொடுத்தாங்க. வலி கட்டுபடல்ல. பரிசோதனை பண்ணணும்னாங்க. கடைசில அதுன்னாட்டாங்க. எலும்புல வந்துடுச்சு.
ஐயா, ஒரு பாவம் அறியாத பிள்ளைய்யா. பச்ச பிள்ளைக்கு என்ன தெரியும்? ஐயோ, ஒரு கெட்ட பழக்கம், அது இதுன்னு இருந்து செத்தாக்கூட, தப்புன்னு சொல்லி ஆத்திக்கலாமே… ஏ, ஐயா, புருனோ… உன்னையே பொறுப்பே இல்லாம பறி கொடுத்துட்டேனேய்யா…”
- மாரிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வெளிப்படும் அந்த அழுகுரல் இதயத்தைச் சுக்கு நூறாக்குகிறது.
ஒன்று, இரண்டல்ல; அங்கொன்றும் இங்கொன்றும் அல்ல; இதோ எதிர்த்த வீட்டில் ரத்தப் புற்று, அதோ பக்கத்து வீட்டில் எலும்புப் புற்று, இங்கே பின் வீட்டில் கருப்பைப் புற்று என்று கூப்பிட்டுச் சொல்கிறார்கள்.
யாருக்கும் தெரியவில்லை!
காயல்ப்பட்டினம் பங்குத்தந்தை செல்வராஜ், வரிசை யாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர் கள் தொடர்பான கோப்புகளை விரித்துக் காட்டுகிறார்.
“ஒவ்வொரு வருஷமும் 20 பேர் புத்துநோயால மரிச்சுப்போறாங்க. இந்தச் சின்ன ஊர்ல இதோ, ரெண்டு மாசத்துல நாலு பேர் அடுத்தடுத்து, புத்துநோயால பாதிக்கப்பட்டிருக்காங்க. கொடுமை என்னன்னா, காட்டுறதுக்கு ஆஸ்பத்திரிகூட இங்கே ஏதும் கிடையாது. ஒண்ணு திருவனந்தபுரம் ஓடணும், இல்ல, சென்னைக்கு ஓடணும். சரியான மருத்துவ வசதி, பரிசோதனை வசதி இல்லாததால, முத்துன நெலையிலதான் நோய் பாதிப்பே தெரியவருது. ஒவ்வொரு நாளும் மக்கள் வந்து கதறுறாங்க. என்ன செய்யுறதுன்னே தெரியலை” என்கிறார்.
கடற்கரை முழுவதும் பாதிப்பு
இங்கே குமரி மாவட்டத்தில் தொடங்கி அங்கே திருவள்ளூர் மாவட்டம் வரை புற்றுநோய் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. கடற்கரை ஊர்களில் நுழையும்போதெல்லாம், மக்களைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் அவர்கள் சொல்லும் செய்திகள் குலைநடுங்க வைக்கின்றன. அரசுக்கோ ஊடகங்களுக்கோ இதன் தீவிரம் தெரியவில்லை. நம் கடற்கரை மக்கள் வாழ்க்கையை எந்த அளவுக்குப் புற்றுநோய் குலைத்துப்போட்டிருக்கிறது என்பதற்குச் சரியான உதாரணம் காயல்பட்டினம்.
ஒரு உயிர் ஒரு உலகம்
காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே எதிர்ப்படுகிறார்கள் புற்றுநோயாளிகள். சுப்பிரமணியன் பேருந்து நிலைய வளாகத்தில் வல்கனைசிங் தொழில் செய்கிறார். மனைவியும் புற்றுநோயாளி, மகனும் புற்றுநோயாளி. “டயருக்கு பஞ்சர் ஒட்டிப் பொழப்பு நடத்துறவங்க. பொஞ்சாதிக்கு நுரையீரல்ல புத்து. புள்ளைக்கு ரத்தத்துல புத்து. ஒரே நேரத்துல ஒருத்தரை சென்னையிலேயும் இன்னொருத்தரை மதுரையிலேயும் வெச்சுக்கிட்டுப் போராடுனேன் பாருங்க. எவ்வளவோ செலவு செஞ்சி பாத்தாச்சு. பொஞ்சாதி போய்ட்டாங்க. பிள்ளையைக் காப்பாத்தணும், அதுக்காகத்தான் ஓடிக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லும் தந்தையையே பார்த்துக்கொண்டிருக்கிறான் ஐயன்ராஜ். மருத்துவச் செலவை எதிர்கொள்ள படிப்பை நிறுத்திவிட்டு, அப்பாவோடு கடையில் உதவிக்கு உட்கார்ந்திருக்கிறான். “அப்பா ஒண்டியா எவ்ளோண்ணே கஷ்டப்படுவாங்க, பாவம் இல்லேண்ணே, என்னால பெருசா ஒண்ணும் முடியாது. ஆனா, பக்கத்துலேயே உட்கார்ந்துருக்கும்போது அப்பாவுக்கு ஒரு ஆறுதலா இருக்கு” என்கிறான், கண்ணில் ததும்பும் நீரை அடக்கிக்கொண்டு.
புற்றுக்கு எதிராகத் திரளும் ஊர்
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வாழும் பாரம்பரியமான ஊர் காயல்பட்டினம். சமீப காலத்தில் மட்டும் 60 பேர் இறந்திருக்கிறார்கள்; அவர்களில் 20 பேர் புற்றுநோயாளிகள் என்கிறார்கள் ஊர்க்காரர்கள். அரசு கண்டுகொள்ளாத நிலையில், புற்றுக்கு எதிராக இப்போது ஊரே திரள ஆரம்பித்திருக்கிறது. ‘காயல்பட்டினம் புற்றுநோய் காரணி கண்டறியும் குழு’ என்று ஒரு குழுவை அமைத்து அறிவியல்ரீதியிலான ஆய்வுகளில் களம் இறங்கியிருக்கிறார்கள்.
“ஒண்ணுபட்ட சமூக அமைப்பு உள்ள ஊர் காயல் பட்டினம். பொண்ணு கொடுக்க, எடுக்க எல்லாமே பெரும்பாலும் இங்கைக்குள்ளேதான் நடக்கும். அதனால, இந்த நோயால பாதிக்கப்பட்டாகூட மக்கள் வெளியே சொல்லத் தயங்குனாங்க. பலர் இதை வெளியே சொல்ல விரும்புறதில்லை. ஆனா, இப்படியே போனா இந்தத் தலைமுறையையே பறி கொடுக்க வேண்டியதாம்னு சொல்லிக் களத்துல எறங்கிட்டோம்.
ஒவ்வொரு வீட்டுலேயும் எத்தனை பேர் புத்துநோயால் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு 40 தன்னார்வலர்களை வெச்சுக் கணக்கெடுத்தோம். விஞ்ஞான ரீதியா என்ன காரணமா இருக்கும்னு நிலத்தடித் தண்ணீர்ல ஆரம்பிச்சு மளிகைக் கடை சாமான்கள் வரைக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரியை அனுப்பிச்சு ஆய்வுசெஞ்சோம். புத்துநோய் மருத்துவர் சாந்தாவைக் கூட்டிட்டு வந்து இந்த அறிக்கைங்க, பாதிப்பு எல்லாத்தையும் கொடுத்து ஆலோசனை கேட்டோம். தொடர்ந்து அரசாங்கத்துக் கதவைத் தட்டிக்கிட்டேதாம் இருக்கோம். ஆனா, செவிசாய்க்க ஆள் இல்லை” என்கிறார் உள்ளூரில் மருத்துவ உதவிக்காக இயங்கும் ஷிஃபா கூட்ட மைப்பின் செயலாளரான தர்வேஷ் முஹம்மத்.
கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 125 பேருக்கும் மேற்பட்டவர்களுக்குப் புற்றுநோய் கண்டறியப் பட்டுள்ளதாகக் கூறுகிறார் மருத்துவ அறிக்கைகளோடு.
ஊருக்குள் நோயாளிகளுடன் உரையாடும்போது, நோய் வேதனையைக் காட்டிலும் அரசின் புறக்கணிப்பு தரும் விரக்தி அவர்களைத் துளைத்தெடுப்பதை உணர முடிகிறது. நான்கு குழந்தைகளின் தாயான ஜீனத் தன் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துப் பேசும்போது துக்கம் வெடிக்கிறது. தந்தை முஹம்மது ஹசன் சிறுநீர்ப்பை புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளான பிறகு, தாய் ஆப்பம் விற்கப்போவதாகச் சொல்லும் 12 வயது சஹர் பானு குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது மலங்க மலங்க விழிக்கிறாள். “அப்பாவுக்கு நல்லாயிடுமாண்ணே?” என்று அவள் கேட்கும் கேள்வி துரத்திக்கொண்டே வருகிறது.
தொடர்ந்து கடற்கரையோர ஊர்களில் நோயாளி களைச் சந்திக்கும்போதெல்லாம் எழும் கேள்வி ஒன்று தான்: இவ்வளவு நடக்கிறது, அரசாங்கம் என்ன செய்கிறது?
(அலைகள் தழுவும்…)நன்றி தி ஹிந்து தமிழ்
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
No comments:
Post a Comment