தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபையின் மாநில பொறுப்பாளர்களின் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். ஆரம்ப காலங்களில் பொது கருத்தொற்றுமையின் அடிப்படையில் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால், ஒரு சிலர் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். ஆயிரக்கணக்கான ஆலிம்களுக்கு மத்தியில் ஒரு பெயர் முன்மொழியப் படும்பொழுது அவர்களுக்கு பிடிக்காதவர்கள் கூட சபை நாகரிகம் கருதியும் தேவையற்ற விரோதம், குரோதம் ஏற்படும் என்ற அடிப்படையிலும் மௌனமாக இருந்துவிடுகின்றனர். எனவே, ரகசிய வாக்கு அடிப்படையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் சுதந்திரமாக நாம் விரும்பும் நபரை தேர்ந்தெடுக்க முடியும் என்று கருத்து தெரிவித்தனர்.
அதன் அடிப்படியில், தேர்தல் குழு ஒன்று அமைக்கப் பட்டது. தேர்தல் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே, அந்த குழு தன் பணியை தொடங்கும். ஒவ்வொரு மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தங்களிடம் பதிவு செய்திருக்கின்ற ஆலிம்களின் பட்டியலை தயார் செய்து தலைமைக்கு அனுப்பும். ஒரு ஆலிம் தான் சொந்த மாவட்டத்திலும் தான் பணி செய்யும் மாவட்டத்திலும் தன் பெயரை பதிவு செய்திருந்தால் பணி செய்யும் மாவட்டத்தின் உறுப்பினாராக கருதப்பட்டு சொந்த மாவட்டத்தின் உறுப்பினரின் பதிவிலிருந்து நீக்க படுவார்
. அதன்பின், ஒவ்வொரு மாவட்டமும் தங்கள் மாவட்டத்தில் பதிவு செய்துள்ள பத்து ஆலிம்களுக்கு ஒரு ஆலிமை பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து அவர் பெயரை தலைமைக்கு அனுப்பும். அந்த ஆலிம் தான் மாநில தேர்தலின் வாக்காளராக கருதப்படுவார்.
அதன் அடிப்படையில், தமிழகத்தில் மொத்தம் 6650 ஆலிம்கள் தமிழ் மாநில ஜமாத்துல் உலமாவின் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளார்கள். பத்து பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் மொத்த வாக்காளர்கள் 650 பேர்.
தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும். தேர்தலில் போட்டி இட விரும்புவோர் அவர் பதிவு செய்துள்ள மாவட்டத் தின் பரிந்துரையின் அடிப்படையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். போட்டி இருந்தால் தேர்தல் நடைபெறும்.
19/08/14 அன்று நடைபெற்ற தேர்தலில் தலைமை பதவிக்கு தற்போதைய தலைவர் மவ்லானா மவ்லவி A.E.M.அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களும் சென்னை மவ்லானா மவ்லவி தர்வேஷ் ரஷாதி ஹஜரத் அவர்களும் போட்டியிட்டார்கள்.
ஈரோடு மவ்லானா மவ்லவி முஹம்மது சுல்தான் ரஷாதி ஹஜ்ரத் அவர்களும், சிவகங்கை மவ்லானா மவ்லவி முஹம்மது ரிளா ஹஜ்ரத் அவர்களும் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார்கள்.
மதுரை மவ்லானா மவ்லவி முஹம்மது காஸிம் பாகவி ஹஜ்ரத் அவர்களும் வேலூர் மவ்லானா மவ்லவி முஹம்மது இலியாஸ் ஹஜ்ரத் அவர்களும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டனர்.
வாக்காளார்களுக்கு, அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவு எண்ணை பரிசீலித்த பின்னர் மூன்று வாக்கு அட்டைகள் வழங்கப்பட்டன . அதில், அவர்கள் விரும்பும் வேட்பாளர்களின் பெயருக்கு எதிரில் முத்திரையிட்டு அதற்கு உரித்தான பெட்டியில் போட ஏற்பாடு செய்யப்பட்டது. வோட்டு போடும் இடத்தில் வேட்பாளர்களும் தேர்தல் குழுவினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மிக சுமூகமான முறையில் ஆலிம் பெருமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
சுமார் ஒரு மணியளவில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மவ்லானா மவ்லவி அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிக வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செயலாளராக சிவகங்கை முஹம்மது ரிளா ஹஜ்ரத் அவர்களும், பொருளாளராக மதுரை முஹம்மது காஸிம் பாகவி ஹஜ்ரத் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!!!!!!!
- மவ்லவி கனியூர் இஸ்மாயில் நாஜி
1 comment:
நன்றி ஜஜாக்கல்லாஹ்மிக அழகாக வடிவமைத்துள்ளீர்
Post a Comment