(சுய விமர்சனமா என்றால், யாவரும் சுயம் அறியும் விமர்சனம்)
இனி ஒரு முக்கியமான வேலை பாக்கி இருக்கிறது. சிறிய வயதிலிருந்தே கேள்வி படும், நெடும் தொலைவில் இருக்குமோ என்று நினைக்கும் ஒரு புதிய ஊருக்கு போக; புதுப்பிக்கும் பாஸ்போர்ட்டில், அந்த ஊருக்கான எண்டார்ஸ்மென்ட் செய்ய வேண்டும். வயது 23-ல் இருந்து ஆரம்பித்து, சில நாடுகளை பார்த்தும், அவைகளிலிருந்து உழைத்தும் பிழைத்தும் எல்லாம் ஆயிற்று, இனி அந்த புதிய ஊரையும் அதற்கான பாதையையும் பார்த்து விடத்தான் வேண்டும். அது எந்த ஊர் என்பவரே, அந்த ஊர் நீயும்(ங்களும்) கூட அறிந்த ஊர் அல்லவா என்று சொல்லி விடும் நோக்கம்தான் இந்த பதிவு !
இந்திய உழைப்பு நான்கு வருடங்களையும் சேர்த்துக் கொண்டால் கிட்டத்தட்ட 41 வருடங்களுக்கான உழைப்பில், உலகில் இன்றைக்கிருக்கும் என் நிலை, இருந்ததற்கு பரவாயில்லை என்கிற நிலையும், அதில் திருப்தி கொண்டு இறைவனுக்கு நன்றி சொல்கிற மனப்பான்மையும்தான். என்றாலும் பெரும் பணக்காரன் ஆகும் நிலையையும், துபாயில் ஒரு சந்தர்ப்பத்தில்; குறுகிய காலத்தில், கோடீஸ்வரன் என்றாகும் நிலையாகும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த ஒரு பதவி உயர்வின் அலுவலக ஆணை கடிதத்தையும், அதிலிருந்து வரும் வருமானம் நிச்சயமாக மனதுக்கு உவந்ததாக அமைந்து விடாது என்று தெரிந்திருந்த காரணங்களுக்காக, வேண்டாம் என்று தீர்க்கமாக மறுத்திருக்கிறேன், அழுத்திச் சொல்வதானால், உதறி தள்ளியே இருக்கிறேன், அல்லாஹ் மட்டுமே அதற்கு சாட்சி !
எதையோ சொல்ல வந்து, இதுவெல்லாம் இப்போது எதற்கென்றும், இதற்கும் ஆரம்பித்த பாஸ்போர்ட் எண்டார்ஸ்மெண்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்க வந்தால்.......
தற்போதைய காலகட்டத்தில், இளவயது அன்பர்களின் எதிர்பாராத தொடர் மரணங்களும், குறிப்பாக; என் வயது ஒத்த ஏராள நண்பர்களின் அடுக்கடுக்கான மௌத்துக்களும், பெரும் திடுக்கத்தையும் நடுக்கத்தையும் என் நெஞ்சில் ஏற்படுத்தி இருக்கிறது. போகுமிடம் வெகு தூரமில்லை என்ற ஒரு பாட்டுக்கு இணங்க, இனி போகும் நேரம் வெகு தூரமில்லை என்பதும், வாழும் நாட்களின் எண்ணிக்கையை; எண்ணிப் பார்த்தே சொல்லி விடும் அளவிலும்தான் இருக்கிறது என்கிற உணர்வும் அதிகப்பட்டிருக்கிறது !
அதனால், இனி, இறை இருப்புக்களை இன்னமும் கூடுதலாய் உறுதிப் படுத்த வேண்டும், நல்லடியார்களான நல்லவர்களின் துவாக்களை, அவர்களின் மனம் நிறைத்து; கூடுதலாக பெற்று விட; சில மேலான காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும், கேட்க தயக்கப்படும், ஆனால் தேவைப்படும் ஏழைகளை தேடிக் கண்டு பிடித்து, அவர்களின் உயர் தேவைக்கானவைகளில் ஒன்றிரண்டையாவது செய்து கொடுத்து விட வேண்டும். இதுவெல்லாம் இருக்க, வயிற்றுப் பசி என்று வருவோர்க்கெல்லாம் உணவு வழங்கி, சந்தோஷம் பகிரும் சலிப்பில்லாத மனது எப்போதும் இருக்க வேண்டும். இதையெல்லாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க, உண்மையாய் உழைக்கும் உழைப்பின் வழியில், வரும் பணம்; இன்னமும் கொஞ்சம் கூடுதலாக வர வேண்டும். இப்படி சில நன்மைகளை முடிக்கும் பலன் இருந்தால், மேலிட உத்தரவு வாங்கி வருபவர், கொஞ்சம் இரக்கப்பட்டு, இலகுவாகவே எடுத்துச் செல்லக்கூடும் என்கிற நம்பிக்கை ஏற்பட வாய்ப்புண்டு, அந்த நினைப்பாலேயே மனது இலேசாகிப் போகவும் வழி கிடைக்கும் !
ஆம், அந்த புதிய ஊருக்குப் போக, புதிய உலகத்தின் புதுமைப் பேரழகாம் சொர்க்கம் சென்றடைய புதுப்பிக்கும் பாஸ்போர்ட்டில் இனி எண்டார்ஸ்மெண்ட் போட வேண்டும், அதற்கான அப்ளிகேஷன் ஃபார்மில், கேட்கப்பட்டிருக்கும் சில சங்கடமான கேள்விகளுக்கு, மிகச் சரியான முறையில் பதிலை பூர்த்தி செய்ய, இனி எஞ்சிய நாட்களில் விடை தேடும் நோக்குடன் உறுதியாய் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வாழ்க்கைப் பயணத்தில் இறுதிக் கட்டம் என்று எங்களைப் போன்றோர் சொல்லிக் கொண்டாலும், யாவரும் பிறக்கும் போதே; இறக்கும் நேரமும் குறித்தே வைக்கப்படுகிறது என்கிற நம்பிக்கையின் அடிப்படையில், அதற்கு உட்பட்ட நாம் எல்லாம், மிக அவசரமாகவும் அவசியமாகவும்; தம்மால் செய்ய முடிகிற நன்மைகளின் எண்ணங்களை மனதில் வளர்த்து, அவைகளை செயல் படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். ஒன்றைப் பார்த்து அல்லது அறிந்து, நன்மை செய்யும் எண்ணம் மனதில் ஏற்பட்டு விட்டால், நொடிகள் கூட தாமதிக்காது அதை செய்து முடித்து விடுவது என்பது, அடுக்கடுக்கான நன்மைகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்போரின் அந்தரங்க இரகசியமாக இருந்து கொண்டிருக்கிறது. இப்படியாக, இங்கே சொல்லப்பட்டது எல்லாம், உலக மனிதர்கள் எல்லோருக்கும் பொருந்தும் கருத்துக்களாகவே இருப்பதால், பாவம் ரஹீமுல்லாவுக்கு மட்டும் என்ன பிரச்சனையோ என்று சொல்லி; வாய் விட்டு சிரித்து, விலகி ஓடி விடுவென்றோ, தூரப் போய்விடுவென்றோ இன்னொரு புறமாய் தூக்கி எறிந்து விட மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.. அல்லாஹ் ஒருபோதும் அவன் தன்மைகளில் குறை படவே மாட்டான், அவனுடைய நல்ல தன்மைகள், அவன் கோப தன்மைகளை நிச்சயமாக மிகைத்து விடும் என்கிற பூரண நம்பிக்கையை நம் மனதில் உறுதியான நம்பிக்கையாய் கொண்டு, அவனிடமே நமக்கு நன்மையானவைகளை எல்லாமும் கேட்டுப் பெறுவோம். மிக நிச்சயமாக அந்த நம்பிக்கை; வேண்டிய பலன் தரும், நாடிய நாட்டங்களை எல்லாம், நேரிய நடவடிக்கைகளாகவும் மாற்றி வைக்கும், ஆமீன், ஆமீன், யா ரப்பில் ஆலமீன் !!
கட்டுரை ஆக்கம் Raheemullah Mohamed Vavar
நன்றி Jazaakum'Allah Khairan ரஹீமுல்லாஹ் முஹம்மது வாவர் அவர்களுக்கு
"May Allâh reward you [with] goodness.".
No comments:
Post a Comment