துஆ
அழையுங்கள் நம் அல்லாஹ்வை துவா என்ற பிரார்த்தனையின் வாயிலாக! ஏனெனில் அல்லாஹ் திருக்குர்ஆன் மூலம் நமக்கு அறிவுரை கூறுகிறான் கீழே உள்ள திருமறை திருக்குர்ஆனின் வசனத்தை சற்று பொறுமையாக கேளுங்கள்!
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த் தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186)
சரி பிரார்த்தனை என்பது பற்றி அல்லாஹ்வின் இறுதி இறை தூதர் நபிகள் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்? இதோ ஆதாரத்துடன் விளக்குகிறேன் படியுங்கள்!
”பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, ”என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்‘ என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள். நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: திர்மிதீ 3372
சரி நம் துவா என்ற பிரார்த்தனைகளை எவ்வாறு கேட்பது?
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)
உறுதியான நம்பிக்கையுடன் கேட்க வேண்டும்
பிரார்த்தனை செய்யும் போது ”இறைவன் கட்டாயம் தருவான், அவனால் தர முடியும்” என்ற உறுதியான நம்பிக்கையுடன் பிரார்த்திக்க வேண்டும்.
அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது. (அல்குர்ஆன் 7:56)
துவா என்ற பிரார்த்தனையின்போது அவசரப்படக்கூடாது
”நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6340
உங்கள் துவா என்ற பிரார்த்தனை விரைவாக ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும்?
”உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியத்தில் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ”அல்லாஹ் அதிகமாக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஸயீத் (ரலி) நூல்: அஹ்மத் 11150
தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ பிரயாணத்தின் போது…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3. தந்தை தனது மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை.
அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 3908
கடமையான தொழுகைக்குப் பின்.
கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.
”எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”இரவில் கடைசியிலும் கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும்” என்று பதிலளித்தார்கள். அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதீ 3499
From MUDUVAI HIDAYATH
No comments:
Post a Comment