Saturday, April 24, 2010

அமெரிக்காவில் சர்வதேச முஸ்லிம் தொழிலதிபர்கள் மாநாடு!

வாஷிங்டன்:  உலகின் முக்கியமான 55  நாடுகளில் மிகப்பெரிய முஸ்லிம் தொழிலதிபர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை அமெரிக்கா அடுத்த வாரம் நடத்துகிறது. அமெரிக்க வரலாற்றில் முஸ்லிம்களை மட்டும் அழைத்து நடத்தும் முதல் மாநாடு இதுதான்.
நியூயார்க், உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு முஸ்லிம்கள் என்றாலே அமெரிக்காவில் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள், படிப்பு, வேலை வாய்ப்பு விஷயத்தில் பாரபட்சமாக நடத்துகிறார்கள் என்று உலகம் முழுவதும் பரவியுள்ள எண்ணத்தைப் போக்கும் விதத்தில் இந்த மாநாட்டை அதிபர் பராக் ஒபாமா ஏற்பாடு செய்திருக்கிறார்.
மேலும் முஸ்லிம்களுக்கு அமெரிக்க அரசு மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பது பிரதான நோக்கமாக இருந்தாலும்  சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் முஸ்லிம் தொழிலதிபர்களுடன் அமெரிக்கா நேரடியாகத் தொடர்பு கொண்டால் அது வாணிபம் பெருக மிகுந்த உதவியாக இருக்கும், அதன் மூலம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பும் வருவாயும் பெருகும் என்பவை மற்ற நோக்கங்களாகும். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் பேசவிருக்கிறார்கள். அடுத்த முஸ்லிம் தொழிலதிபர்களின் கருத்துகளையும் இருவரும் கேட்பார்கள்.
இராணுவத் தகவல் தொடர்புக்கான தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் இந்த மாநாட்டு ஏற்பாட்டில் முக்கியமானவர். முஸ்லிம் நாடுகளுடன் வலுவான வர்த்தக உறவு அவசியம் என்று அமெரிக்க அரசு கருதுவதாக சர்வதேச வர்த்தகத்துக்கான துணைச் செயலர் பிரான்சிஸ்கோ சாஞ்சஸ் தெரிவிக்கிறார். 2008-ம் ஆண்டில் முஸ்லிம் நாடுகளுடன் அமெரிக்கா நடத்திய வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 16 லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் என்று சாஞ்சஸ் தெரிவிக்கிறார். வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, சுமுகமான நல்லுறவு ஆகியவற்றுக்கு இந்த மாநாடு பெரிதும் உதவும் என்பதால் ஒபாமா இதில் மிகுந்த ஆர்வம் செலுத்துகிறார் என்பது குறிப்பிட்த்தக்கது.
அமெரிக்காவில் சர்வதேச முஸ்லிம் தொழிலதிபர்கள் மாநாடு!
Source : http://www.inneram.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails