Friday, April 30, 2010

புத்தக தினம்!


April 23, 2010

இன்று உலக புத்தக தினமாம்.

ஏதோ மூன்று நான்கு புத்தகங்கள் எழுதியவன் என்ற முறையில் ‘வாசிப்புப் பழக்கம் ஏன் குறைகிறது?’ என்ற தலைப்பில் ஹலோ எஃப்.எம்.மில் இரண்டு நிமிடம் பேச சொன்னார்கள். நேற்று மாலை பதிப்புரிமை - காப்புரிமை கருத்தரங்கில் இருந்தபோது அவசர அவசரமாக ஏதோ போனில் உளறிவைத்தேன். என்ன சொன்னேன் என்பது அட்சர சுத்தமாக எனக்கே நினைவில்லை. சுமாராக எழுத தெரியுமென்றாலும், சுத்தமாக பேச தெரியாது என்பது என் பலவீனம். இனிமேல் ஹலோவோ, ஆஹாவோ, சூரியனோ, மிர்ச்சியோ கூப்பிட்டால் முதலில் எழுதி வைத்துக் கொண்டு, பின்னர் ஏற்ற இறக்கங்களோ கச்சிதமாகப் பேசிவிடவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இன்று காலை ஒலிபரப்பானதாம். நான் கேட்கவில்லை.

ஆக்சுவலாக என்ன சொல்ல விரும்பினேன் என்பதை இங்கே பகிர்தலுக்காக எழுதி வைத்துக் கொள்கிறேன்.

வாசிப்புப் பழக்கம் குறைவதாக நான் நினைக்கவில்லை. வாசிப்புக்கான தளங்களின் வடிவம்தான் காலம் தோறும் மாறிக் கொண்டிருக்கிறது.

புத்தகங்களை எழுதுபவர்கள் ஏன் எழுதுகிறார்கள்? பணம், புகழ் இதையெல்லாம் தாண்டி தனக்குத் தெரிந்த, தன்னால் புனைய முடிந்த விஷயங்களை மற்றவர்களோடு பகிர்தல் என்பதுதான் அடிப்படை.

வாசிப்பு என்பதற்கான தேவை ஒரு வாசகருக்கு ஏன் ஏற்படுகிறது. பிரதிகளின் ஊடாக எதையோ பெறுதல். இங்கே பெறுதல் என்பது உத்தியோகப் பூர்வமானதாகவோ, கல்வியறிவு தொடர்பானதாகவோ, கேளிக்கை கொள்ளக் கூடியதாகவோ, சோகம் கொள்ளக் கூடியதாகவோ எந்த உணர்வின் அடிப்படையிலான அறிவாகவும் இருக்கலாம். புனைவாகவும் இருக்கலாம். அபுனைவாகவும் இருக்கலாம்.

எனவே வாசிப்பு பெறுதலின் அடிப்படையிலேயே பல நூற்றாண்டுகளாய் பல வடிவங்களில் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஓலைச்சுவடிகள், புத்தகங்களாய் உருமாற பல நூற்றாண்டு தேவைப்பட்டது. தொழிற்புரட்சியின் விளைவாக காகிதங்களின் உற்பத்தி பெருகி புத்தக வடிவில் அறிவு பகிரப்பட்டு, பல கோடி பேர்களால் பெறப்பட்டது. இந்நிலை கிட்டத்தட்ட இருநூற்றி ஐம்பது, முன்னூறு ஆண்டுகளாய் இருக்கிறது.

நவீனகால கண்டுபிடிப்புகளின் விளைவால் இப்போது ஓலை, காகிதம் தாண்டி மின் ஊடகங்களின் மூலமாக பகிர்தலும், பெறுதலும் நடைபெற்று வருகிறது. வானொலி, சினிமா, டிவி, இண்டர்நெட், மொபைல் போன் என்று இன்று ஏராளமான ஊடகங்கள் அறிவு பெறுதலை, பகிர்தலை சுலபமாக்கிக் கொண்டிருக்கின்றன.

24 மணி நேரமும் தொலைக்காட்சியில் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே செய்தித்தாளை வாசித்தேயாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. வாசிக்கா விட்டாலும் பெரிய பாதிப்பில்லை. ஏனெனில் செய்தித்தாளில் எதை படிக்க வேண்டுமோ அதை செய்திகளில் பார்த்து/கேட்டு விடுகிறோம். புனைவுகளை மெகா சீரியலாகவும், மசாலா படங்களாகவும் பார்க்கிறோம். புத்தகம் வாசிக்காதவரை இன்று காணலாம். ஆனால் டிவி/சினிமா/ரேடியோ இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தாதவர் கிட்டத்தட்ட இல்லவே இல்லை.

எனவே வாசிப்பு என்பது புத்தகம் தொடர்பானது மட்டுமில்லை என்று நான் எண்ணுவதால் வாசிப்புக்குறைவு என்ற வாதத்தை ஒப்புக்கொள்ள மாட்டேன். பகிர்தலும், பெறுதலும் தொடர்ந்து நடந்துகொண்டேதானிருக்கும். முன்பு காகிதத்தில் நடந்தது. இன்று ஒலி/ஒளி அலைகள் மூலமாக நடக்கிறது. இவ்வளவுதான் வித்தியாசம்.

தனிப்பட்ட முறையில் என்னுடைய தேர்வு என்பது அச்சில் வாசிப்பதுதான் என்பதையும் இங்கே பின்குறிப்பாக சொல்லிக் கொள்கிறேன்.

Source : http://www.luckylookonline.comபுத்தக தினம்!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails