Monday, April 19, 2010

மனித நேயத்தைக் காக்கும் மனிதர்கள்


இறை என்பது வாழ்க்கையின் அங்கம். சிலர் மறுக்கலாம் பலர் ஏற்கலாம்.
மறுக்கப்படுவதும்,ஏற்கப்படுவதும் அவரவர்களின் நம்பிக்கையும்,அறிவுத் தெளிவையும் பொருத்தது.
இருப்பதை இல்லை என்று கூறுவதும்,இல்லையை இருக்கிறது என்று வாதிப்பதும் இன்று பலருக்கு வாழ்க்கையாக இருக்கிறது. இருப்பது இருக்கிறதுதானே அதை எவ்வளவு காலத்திற்கு இருக்கிறது,இருக்கிறது என்று வாதிப்பது இல்லையும் அப்படித்தான்.

இருந்தாலும் இல்லை என்றாலும் மனிதன் மனிதனாக வாழ்ந்தாக வேண்டும்.ஒரு கட்டுப்பாட்டுக்குள் மனிதன் அடங்கவேண்டும். தனது செயல்களை யாரோ கண்காணிக்கின்றார்கள் அது இறையோ அல்லது இயற்கையோ என்ற உள் உணர்வு அவனை உசுப்பிக் கொண்டிருக்க வேண்டும். ஒன்றைச் சார்ந்து வாழக்கூடியவர்கள் நூறு சதவீதம் அதைச் சார்ந்து வாழ்ந்து விட்டால் அவர்களால் மற்றவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை. அதை முழுமையாகப் கடைபிடிக்காமல் நானும் மனிதன் தான் தவறு செய்யக் கூடியவன்தான் என்று வாதம் செய்யக் கூடியவர்களால் பலருக்கு தொந்தரவு இருக்கிறது.

மனிதன் மனிதனாக வாழ்வதற்காக இன்று வரையில் எத்தனையோ உபதேசங்கள், எத்தனையோ வழிகாட்டல்கள், எத்தனையோ வழிபாடுகள் இத்தனை இருந்தும் இன்னும் கிமு, கிபி, ஹிஜ்ராவையும் தாண்டி நவீனம், அறிவியல் என்று மனித அறிவு வளர்ச்சி அடைந்துக் கொண்டிருக்கின்ற பின்பும் முழுமையாக மனிதம் வளரவில்லை, மனித நேயம் மலரவில்லை என்றால் குறை எங்கிருக்கிறது.

மனித நேயத்திற்கு பாதகம் விளைவிக்க கூடியவர்கள் இறைநம்பிக்கை அற்றவர்களா?, இறை நம்பிக்கையாளர்களா?, மதங்களை சார்ந்தவர்களா?, மதமே இல்லாதவர்களா ? யார் என்று ஆய்வு செய்தால் ஏதோ ஒன்றை சார்ந்தவர்களாக ஒரு காரணத்தை கற்பிப்பவர்களாகதான் இருக்கிறார்கள்.

எங்கோ ஒரு இடத்தில் மனிதநேய மாநாடு போடுவதை விளம்பரம் செய்கின்றோம்.
மதநல்லிணக்க விழாவை பிரகடணம் படுத்துகின்றோம் எதற்காக?
ஒற்றுமையை மனித நேயத்தை வளர்ப்பதற்கு அல்லவா?

உலகம் தோன்றி எத்தனைஆண்டுகள்?,
உயிர்கள் தோன்றி எத்தனை ஆண்டுகள்?,
தீர்க்கதரிசிகள் மறைந்து எத்தனை ஆண்டுகள்?,
வேதங்கள் தோன்றி எத்தனை ஆண்டுகள்?
ஆனால் இன்றும் தீர்க்கதரிசிகளின் வேலையை பல மதத்தவர்களும் செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆண்டுகள் கடந்து விட்டன; ஆனால் மனித நேயம் இன்னும் தத்தளித்துக் கொண்டுதானே இருக்கிறது. எல்லா மதங்களும் மனிதநேயத்தை தான் போதிக்கிறது என்பது திண்ணம். மதங்களை பின்பற்றக் கூடியவர்கள் முழுமையாக பேனாததின் வெளிப்பாடுதான் இன்று மனிதநேய மாநாடுகள் மத நல்லிணக்க விழாக்கள்.

பெரும்பாலான உபநியாசர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கொள்கைகளை அல்லது கருத்துக்களை முழுமையாக உள்வாங்கி விளங்கி அதை தங்களின் வாழ்க்கையாக்கிய பின்னரே மற்றவர்களுக்கு போதனை செய்ய வேண்டும்; ஆனால் பெரும்பாலோர் மற்றவர்களுக்கு போதிப்பதோடு சரி. கருத்து விவாதங்களுக்காக காலங்களை கடத்துகிறார்களே தவிர பேணுதல் என்பது நம்மிடையே மிகக் குறைவாகதான் இருக்கிறது.

மனிதன் மனிதர்களை நேசிக்கவேண்டுமானால் அவன் தன்னை முழுமையாக அறியவேண்டும். அறிதலில் மேம்புல் மேய்ந்தால் நேசம் என்பது வேசமாகவே இருக்கும். வாழ்க்கை நாடகத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்க்காக நடித்துக் கொண்டிருக்க வேண்டும். இன்று பலரும் நடித்துக் கொண்டிருக்கின்றோம். உண்மையான அன்போ நேசமோ பண்போ நம் எல்லோரிடமும் குறைந்தே இருக்கிறது.

இறைவணக்கத்தை முழுமையாக கடைப்பிடிக்க கூடிய ஒருவர் தாகத்துடன் நிற்கும் ஒரு நாய்க்கு தண்ணீர் கொடுக்காமல் சென்றால் அவரின் வணக்கம் யாரை திருப்தி படுத்துவற்காக வணங்கப்பட்டது?

எந்த வேதங்களை வாசித்தாலும் வாசிப்பவரின் அறிவுக்கேற்ப அவரின் புரிதல் இருக்கும். வேதத்திற்கு வியாக்கியானம் சொல்லக் கூடியவர்களிடமும் அப்படித்தான். நானும் படித்தேன், நானும் புரிந்தேன் என்று வாதங்கள் தான் வழுவாகிக் கொண்டிருக்கிறதே தவிர உண்மையை உணர்வதற்கு முயற்சிகள் என்பது மிக மிக குறைவு.

பிறந்த குழந்தை தாயின் மார்பகத்தில் பாலை சப்பிக் குடிக்கிறது. ஆனால் சப்பினால்தான் பால் வரும் என்று அந்த குழந்தைக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்.

பிறக்கும் குழந்தை அறிவுடன் பிறக்கிறது, அன்பை நேசக்கிறது, கவுடு, சூது தெரியாது. கோபத்தை நாம் வெளிப்படுத்தினால் குழந்தை அழும். வன்மையை விரும்புவதில்லை அதன் தொடக்கமே அன்பு பாசம் நேசம் ஆனால் நாளடைவில் அது மறந்து போனது எப்படி? அன்பே உருவான குழந்தைக்கு மனித நேயத்தை போதிக்க வேண்டிய அவசியம் ஏன்? எது மறக்கடித்தது?

ஒரு மகான் தன் மாணவர்களுடன் காட்டுக்குள் செல்கிறார். செல்லும் வழியில் மலங்கள் கிடக்கிறது இதைப் பார்த்த மாணவர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒடினார்கள். இதைக் கண்ட மகான் அங்கேயே நின்றார் மாணவர்கள் தூரம் சென்று மகானைப் பார்க்கிறார்கள். மலத்தின் பக்கத்திலேயே மகான் நிற்பதைக் கண்ட மாணவர்களுக்கு வியப்பாக இருந்தது.

மாணவர்கள் மகானை நோக்கி வந்தார்கள் ஒரு மாணவர் மகானிடம் கேட்டார்.
இந்த அசிங்கத்தின் துர்நாற்றம் தாங்க முடியாமல் நாங்களெல்லாம் ஒடிப்போனோம் நீங்கள் மட்டும் எப்படி இங்கேயே நிற்கிறீர்கள்? என்றார்.

அதற்கு அந்த மகான் இந்த மலம் என்னுடன் பேசியது என்றார்.மாணவர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. என்ன பேசியது? என்று ஆர்வத்துடன் கேட்டார்கள்.

நேற்று கடைகளில் அரிசியாக, காய்கனிகளாக, உணவு பண்டங்களாக இருந்தேன் இந்த மனிதர்கள் என்னை வாங்குவதற்கு ஆசையாக ஆவலாக ஒடோடி வந்து பணம் கொடுத்து வாங்கி என்னை சமைத்து, ருசித்து, ரசித்து அருகில் வைத்து உண்டார்கள். ஒரே ஒரு இரவு மட்டும் அவர்களின் வயிற்றில் தங்கினேன் காலையில் வெளியில் வந்த என்னைக் கண்டு மூக்கை பிடித்துக் கொண்டு ஒடுகிறார்கள் துர்நாற்றம், அசிங்கம் என்கிறார்கள் என்று என்னுடன் பேசியது என்றார்.
ஒரு மகானின் வாழ்க்கை சரித்திரத்தில் படித்தக் கதை.

நாம் இன்னும் மாணவர்களாகதான்த் இருக்கிறோம்.எதை அசிங்கம் என்று நினைக்கின்றோமோ அதில் எத்தனை உண்மை இருக்கிறது. எதையும் ஆழமாக சிந்திப்பதில்லை. வலி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். ஒரு உண்மையின் கீழ்தான் இந்த உலகம்.
மதங்களை நேசிக்குமளவு அதை முழுமையாக புரிதலும் அவசியம்.
மறந்துபோன அன்பை நினைவுக் கொள்வோம் மனிதர்களை நேசிப்போம் மதங்கள் நம்மை நேசிக்கும்

     நன்றி :http://kismath.blogspot.com 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails