Saturday, April 17, 2010

தொம் யோம் in மாயாஜால்[#522]


சில மாதங்களுக்கு முன் மாயாஜால் பக்கம் சென்றிருந்த போது அங்கே பசியாற ஒதுங்கிய போது 'ஏன்டா வந்தோம்' என்று நொந்து கொள்ளும் விதமாக ஒரு கும்பலே வந்து சூழ்ந்து கொண்டு மெனு கார்டுகளைக் கொடுத்து 'என்ன சார் வேணும்?' என்று நச்சரித்தவாறு நின்றார்கள். ஒரே நேரத்தில் பத்து பேருக்கும் மேள் ஆளுக்கு ஒரு விதமான மெனு கார்டை கையில் வந்து திணித்து ஆர்டர் கொடுக்கச் சொன்னால் என்ன செய்வதாம்? ஏன் தான் இப்படி ஒரு கிறுக்குத்தனமான மார்க்கெட்டிங் டெக்ணிக்கோ?! இதற்கு பதிலாக டோக்கன் வழங்கி வேண்டுமென்பதை சென்று ஆர்டர் கொடுக்க செய்திருக்கலாம். (அப்படிதான் வழக்கமாம். ஆனால் போட்டியினால் இப்படி ஒரு குளறுபடி என்று சொன்னார்கள்).

ஆர்டர் எடுக்கும் போது இருந்த வேகம் அதன் பின்னர் டெலிவரியின் போதும், பணம் வாங்கும் போதும், முக்கியமாக மீதியைக் கொண்டு வந்து தரும்போதும் காணும்.

மேட்டருக்கு வருவோம்.

மெனு கார்டுகளில் பார்வையை மேய விட்டுக் கொண்டிருந்த போது 'தொம் யோம் சூப்' என்று இருந்தது.

அட.. தாய்லாந்தில் மிகப் பிரபலமான சூப் இது.

வெஜிடேரியன் தொம் யோம் சூப் ஆர்டர் கொடுத்து சிறிது நேரம் கழித்து வெள்ளையாய் ஒரு திரவம் வந்தது. கொஞ்சம் காய்கறிகள் கிடந்தன. லேசாக மிளகுத் தூள் தூவியிருந்தார்கள். வந்திருந்த வஸ்துவிற்கும் 'தொம் யோம் சூப்'பிற்கும் 'ஸ்நானப் பிராப்தி' கூடக் கிடையாது என்று பார்த்த உடனே தெரிந்தது. வெந்நீரைக் கொதிக்க வைத்து அதில் உப்பு, மிளகைத் தூவி, கொஞ்சூண்டு காய்கறிகளைக் கொட்டி... கொண்டு வந்து கொடுத்து 'தொம் யோம்' என்ற பெயரில் காசு பார்க்கிறார்கள்.

ஒரிஜினல் தாய்க்காரர்கள் யாராவது வந்து அந்த கண்றாவியை குடித்துப் பார்த்தார்களேயானால், உடனடியாக தாய்லாந்து மன்னரிடத்தில் சொல்லி தங்கள் நாட்டில் இனிமேற் கொண்டு யாரும் தொம் யோம் சாப்பிடக்கூடாது என்று சட்டம் போடச் சொல்லிவிடுவார்கள்.

தாய்லாந்தில்....

'தொம் யோம் குங்' என்பது 'தொம் யோம்' சூப்பில் இறால் (குங் - Gung) போடப்பட்டது.

நம்மூர் ஆட்களின் புண்ணியத்தில் இப்போது 'தொம் யோம் சே' - வெஜிடேரியன் ('சே' - chae) கிடைக்கிறது.

தொம் யோம் குங் என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு அதிரடித் தாய் திரைப்படம் கூட வந்தது. (அதையும் நம்மூரில் தமிழில் டப் செய்து வெளியிட்டார்கள். பெயர் தான் நியாபகம் இல்லை. 'அதிரடிக்கார மச்சான்' அல்லது அதே மாதிரி எதுவோ?!)

தொம் யோம் எப்படி தயாரிப்பது என்பதை இங்கே பாருங்கள்.(மாயாஜால் தொம் யோம் அல்ல)



தாய்லாந்துப் பக்கம் சமீபத்திலோ அல்லது பிற்காலத்திலோ வரும் யோசனையில் இருப்பவர்கள் தப்பித்தவறிக்கூட மாயாஜாலில் தொம் யோம் பக்கம் போய் விடாதீர்கள்.

(, இதே மாதிரி வேற எது எதிலெல்லாம் ஆட்டயப் போடுறாங்களோ?!)
 
தொம் யோம் in மாயாஜால்[#522]   நன்றி:Source : http://mayavarathaan.blogspot.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails