இருபத்தோராம் நூற்றாண்டில் தற்பொழுது நாமெல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கால கட்டத்தில் நாம் எத்தனையோ முன்னேறியிருக்கிறோம். என்றாலும், சில விஷயங்களில் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறோம்.
சுற்றுப்புறச் சூழல்,சுத்தம் பற்றி இப்போதெல்லாம் நிறைய பேசப்படுகிறது.ஒவ்வொருவரும் தங்கள் சுற்றுப்புற சூழலை நன்கு பராமரித்து வந்தாலே போதும்,நம் நாடு முழுவதும் நலம் பெரும் என்கிறார்கள்.
ஆனால்,சுற்றுப்புறத்தில் இன்னும் சில விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. இதில்...
* ஒரு நல்ல குடிமகனாக...
* ஒரு சுயநலமற்ற நல்ல நண்பனாக...
* ஒரு நேசமுள்ள அயலவராக...
* ஒரு ஆதரவான உறவினராக...
* ஒரு பாசமுள்ள குடும்பத்தினராக...
இருப்பதும் அடங்கும்.
நாமெல்லோரும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் உழல்வதால் பலவித அனுபவங்களையும்,கடமைகளையும்,நம்மைச்சுற்றி வெள்ளமாய்ப் பெருகும் அன்பையும் புறக்கணித்துவிட்டு மனதளவில் இன்னும் ஏழைகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஒரு சுயநலமற்ற,உண்மையான நண்பராக இல்லாத நாம், நம் குடும்பத்தினருக்காக மட்டும் பாடுபட்டு விட்டு,எத்தனையோ அருமையான மகிழ்ச்சித் தருணங்களை கோட்டை விடுகிறோம்.
நம்மால் ஒன்றாகக் கூடி நம் சுற்றுப்புறத்தை தோழமை,நட்பு,பாசம், கஸ்டத்திற்கு உதவுதல் போன்ற சின்னச் சின்ன விஷயங்களினால் எத்தனை அற்புதமான சூழலாக மாற்ற முடியும்? ஒவ்வொரு குடியிருப்பும் பாசம்,அன்பு மற்றும் கவனிப்பினால் பிணைக்கப்பட்டால் எவ்வளவோ நன்மைகள் கிடைக்கும்.
ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ளவர்கள்,ஒன்றாக வேலை செய்பவர்கள்,ஒரு கல்லூரி மாணவர்கள் ஒரே குடும்பமாக இயங்கினால் பல பண்டிகைகளை ஒன்றாகக் கொண்டாடலாம். திருமண வைபவங்கள்,விசேஷ தினங்கள் எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கும்.குழந்தைகளும் பாதுகாப்பு,பரந்த குணங்களோடு வளர்வார்கள்.இதற்குத் தேவை நம் கண்களை மறைக்கும் சுயநலம் என்னும் முகத்திரையைக் கிழித்தெறிவதுதான்.
அன்பு கொடுக்கக்கொடுக்க அட்சயபாத்திரமெனப் பெருகும்.அன்பைப் பெறுபவர்களும்,அன்பைப் பொழிகிறவர்களும் சந்தோஷத்தில் திளைப்பது நிச்சயம்.
நன்றி : http://rishanshareef.blogspot.com/2007/09/blog-post_10.html
No comments:
Post a Comment