Saturday, May 1, 2010

மழை பெய்துகொண்டிருக்கிறது

  இப்பொழுது வெளியே மழை பெய்துகொண்டிருக்கிறது ரிஷான். வீட்டுக்குள்ளே இருப்பதனால் மழைச் சத்தம் எவ்வளவு ரம்மியமானதாக இருக்கிறது எனக்கு? ஆனால் இதே கணத்தில் எத்தனை பேர் குடைகளில்லாமல் வீதிகளில், கடைகளினோரங்களில் வீடுகளுக்குச் சென்றுவிட முடியாமல் பரிதவித்துக் கொண்டிருப்பார்கள். இன்றைய இரவு, கடைகளின் வாயில்களில், ஈரலித்த தரைகளில் உறங்கக் காத்திருக்கும் மனிதர்களின் மனதில் எத்தனை சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும்? மழை, அடைக்கலம் சிறப்பாக அமைந்த உயிர்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது.


இறுக மூடப்பட்ட
வீட்டினுள் வர முடியாது
நனைந்து கொண்டிருக்கிறது
மழை

ஆட்டுக் குட்டிகளுடன்
தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்று
இன்னொரு
புல்வெளி தேடிப் போவதற்குத்
தருணம் பார்க்கிறது

புகார்கொண்டு
தன்னைப் போர்த்தியவாறு
தென்னந் தோப்பினுள்
வழிதவறியலைகிறது

வாய் திறந்து பார்த்திருந்த
நீர் நிலைகளின்
கனவுகளை நிறைவேற்றிய பின்
மீன் கூட்டங்களைச்
சீதனமாகக் கொடுத்துச் செல்கிறது

யார் யாரோ
வரைந்த கோடுகளையெலாம்
தனது கால்களால்
தேய்த்து அழித்துச்
சேற்றில் புரண்டவாறு
வீதிகளைக் கழுவுகிறது

பெரும் கோட்டைகளையெலாம்
கரைத்தழித்திட நினைத்து
நிறைவேறாமற் போகவே
அவற்றின் வசீகரங்களை
கழுவிக் கொண்டு நகர்கிறது

ஆழ் மண் வரையும்
நீரிட்டு நிரப்பிய பின்
அடுத்துச் செய்வதென்ன?
என்ற வினாவுடன்
தரை மீது தேங்கி நிற்கிறது

ஓய்ந்திட மாட்டாமல்
இன்னொரு
வெப்ப மழை பெய்து கொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமெலாம்
ஒடுங்கிப் போய்விடப்
பெய்வதை நிறுத்திப்
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை

: http://faheemapoems.blogspot.com
 --------------------------------------------------------------------------------------
மேலும், எவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும். தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் – (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அல்குர்ஆன் 24:39)

seasonsnidur - சீசன்ஸ் நீடூர்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails