மஹ்மூத் அல்ஹஸன், கோட்டார்
நாங்கள், எங்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஸையும் ஒப்புக் கொள்கிறோம். நீங்கள் “முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது” என்று சொல்கிறீர்கள்! என்று அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன் ஹதீஸ்களை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்களே! இது முரண் இல்லையா?”
நம்மைப் பார்த்து அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. அறிவுடையோரைக் கூட தடுமாற வைக்கும் சாமார்த்தியம் நிறைந்த போலித்தனத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்வி இது! சற்று விரிவாகவே இதை அணுக வேண்டும்.
மனிதனுக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன. இப்புலன்களின் வழியாகவே பொருட்களை செய்திகளை, உணர அறிய முடிகின்றது, கண்ணால் ஒரு பொருளைக் காண்கிறோம். அதன் பெயரைச் செவி வழியாக அறிகிறோம். அதன் மனம் என்ன என்பதை உணர, மூக்குத்தான் உதவுகிறது. அதன் சுவையை நாவால் உணர்கின்றோம். அதன் மென்மையையும், வன்மையையும் கையால் தொட்டு உணர்கிறோம். இது புலன்களின் தனித்தனி பணி!
பிறவியிலேயே கண்பார்வையற்ற ஒருவன்; ஒரு பொருளின் நிறத்தையோ, உருவத்தையோ அறிய முடியாது. உதாரணமாக “கொக்கு வெண்மையான பறவை” என்று சொன்னால், அவனால் கொக்கையும், வெண்மையையும் உணர முடியாது. அது போல், காது கேட்கும் சக்தியற்ற ஒருவனிடம் ஒரு பொருளைக் காட்டி, அதை ஓசைப்படுத்தினால், அவன் அப்பொருளிலிருந்து வரும் ஓசை இன்னதென்று உணர மாட்டான். மூக்கு பழுதுபட்டு முகர்ந்தறியும் சக்தியற்ற ஒருவன், பொருளின் மனத்தை முகர முடியாது. அது போல் நாவின் நரம்புகள் பழுதுவிட்டு, நாவு மரத்துப் போன ஒருவன், இனிப்பு, கசப்பு போன்ற சுவைகளை உணர முடியாது.
ஆனால், ஒரு கருத்து சரியா? தவறா? என்பதைப் புலன்களால் மட்டும் முடிவெடுக்க இயலாது, ஐந்து புலன்களுக்கும் அப்பாற்பட்ட சிந்தனா சக்தியினால் மட்டுமே அதை முடிவு செய்ய முடியும். “உலகம் தட்டையானது என்று ஒருவன் சொன்னதாக” நம்பகமான ஒரு நபர் மூலம் செய்தி வரும்பொது, ” அந்த ஒருவன் இப்படிச் சொல்லி இருப்பான்” என்ற செய்தியை - தகவலை நம்புகிறோம் அந்த ஒருவன் சொன்ன கருத்து சரியா என்பதை ஆராய்கிறோம், பின்னர் அந்தக் கருத்து தவறு என்ற முடிவுக்கு வருகிறோம். (இங்கே தகவல் நம்பப்படுகிறது! அது நமக்குச் சொல்கின்ற கருத்து மறுக்கப்படுகிறது)
சிலவற்றை அறிவதற்குரிய ஒரே வழி அந்தந்தப் புலன்கள் மட்டுமே! வேறு வழியே இல்லை! நாவால் ஓசையைக் கேட்கவோ கையால் மணம் முகரவோ, கண்ணால் சுவை அறியவோ இயலாது அல்லது சிந்தனை செய்தும் முடிவெடுக்க முடியாது.
நமது காலத்திற்கு முன் நடந்தவற்றை அறிவதற்குரிய ஒரே வழி செவிப் புலன் தான், உதாரணத்திற்கு மன்னர் “அவ்ரங்கசேப்” என்பவர் ஷாஜஹான் சிறையில் அடைத்தார்” இது ஒரு செய்தி. இதை நம்புவதா? மறுப்பதா? என்ற பிரச்சனை வரும்போது என்ன செய்வது?
ஷாஜஹான் சிறையில் அடைக்கப்பட்டதைத் தற்போது நாம் கண்ணால் காண இயலுமா? அல்லது மூக்கால் முகர்ந்து “ஆமாம்! ஷாஜஹான் சிறையில் இருந்தார்” என்று அறிய முடியுமா? கையால் தடவிப் பார்த்தோ, நாவால் சுவைத்தோ இந்தச் செய்தியை அறிய முடியாது. அல்லது சிந்தனையை எல்லாம் செலுத்தி, உள்ளுணர்வால் இதை ஊகித்தும் உணர முடியாது. செவி வழியாகக் கேட்டுக் கேட்டுத்தான் நாம் இந்த தகவலை அறிந்து வைத்திருக்கிறோம். நாம் நேரடியாகப் பார்க்க இயலாத, முகர இயலாத சுவைக்கவும் முடியாத ஒன்றை, சிந்தனைக்கும் எட்டாத ஒன்றை நாம் அறிவது எப்படி? தகவல்களாக செவி வழியாகத்தான் அறியமுடியும்.
ஆக சிந்தனையைச் செலுத்தி முடிவெடுக்க இயன்ற இடங்களில் அதைப் பயன்படுத்துகிறோம். (சிந்தனை சக்தி இருப்பதால்) கேட்டு நம்ப வேண்டிய கடந்த கால நிகழ்ச்சிகளை அந்த அடிப்படைகளை நம்புகிறோம். அதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்பதால் அந்த செவிவழிச் செய்தி பலரால் ஒரே விதமாகச் சொல்லப்படும் போது, “அது உண்மைதான்” என்ற நமது நம்பிக்கை மேலும் அதிகமாகின்றது. ஆனால் கருத்துக்களைப் பொறுத்தவரை உலகமெல்லாம் சேர்ந்து கொண்டு வேறுவிதமாகச் சொன்னாலும் நாம் ஏற்க மாட்டோம்.
“கொக்கு கறுப்பு” எனறு உலகமே சேர்ந்து சொன்னாலும் “அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்” என்ற தகவலை மட்டுமே நாம் நம்புவோம். அந்தத் தகவல் நமக்குக் கூறுகின்ற கருத்து சரியானதல்ல என்ற முடிவுக்கு நாம் வருவோம். இவ்வாறே குர்ஆன் என்பது 14 நூற்றாண்டுகளுக்கு முன் இறங்கிய ஒன்று. அதை நாம் செவிப்புலன் மூலமாகத் தவிர வேறு எந்த விதத்திலும் அறிய முடியாது. “இதுதான் குர்ஆன்” என்ற தகவலை முழு உலகமும் சேர்ந்து சொல்லும் போது அதில் நம்பிக்கை மேலும் அதிகமாகின்றது.
ஆனால் அவர்களது சொந்த அபிப்பிராயங்கள், கருத்துக்கள், அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்டால், நாம் ஆராய்கிறோம் மறுக்கிறோம். முரண்படாதிருந்தால் ஏற்கிறோம்.
உதாரணமாக “ஒன்று முதல் ஆயிரம் வரை எண்களைக் கூட்டும் முறை இது என்று என் ஆசிரியர் சொன்னார்” என ஒருவர் நம்மிடம் சொல்கிறார். அவரது நேர்மையில் நம்பிக்கை வைத்து, “அவர் ஆசிரியர் அவருக்குக் கணித முறையைச் சொல்லிக் கொடுத்திருப்பார்” என்று நம்புகிறோம். நம்மிடம் இவ்வாறு சொன்ன அதே நபர் “ஏழும் மூன்றும் பதினொன்று” என்று சொன்னால், (அவர் எவ்வளவு நாணயமானவராக இருந்தாலும்) நாம் ஏற்க மாட்டோம்” உங்கள் ஆசிரியரால் சொல்லித் தரப்பட்ட கணித முறைக்கே உங்கள் கணக்கு முரண்படுகிறதே” என்று அவரிடம் நாம் சொல்வோம். இங்கே அவரது நாணயத்தில் நம்பிக்கை வைத்து அவர் சொன்ன தகவலை நம்பிய நாம், அவர் கூறிய கருத்தை ஏற்க மறுக்கிறோம். தகவல்களை நம்புவதற்கு நேர்மை, போதுமானதாக உள்ளது. கருத்துக்களை நம்புவதற்கு நேர்மை உதவுவதில்லை.
நமக்கு சிந்தனா சக்தி இருப்பதால், சிந்தித்து விளங்கக்கூடியவைகளை, சிந்தனையின் மூலமாக மட்டும் நம்புகிறோம். சிந்தனையால் விளங்க முடியாதவைகளை, அவற்றிற்குரிய புலன்களின் துணையால் அறிந்து நம்புகிறோம்.
தகவல்களை முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக நாங்கள் நம்புவதால், கருத்துக்களிலும் அவ்வாறே நம்புவோம். இரண்டுக்கும், செவிப்புலன் மட்டுமே எங்களுக்குப் போதும் என்று சிலர் கூறுகின்றனர். கருத்துக்களில் சிந்தனையைச் செலுத்த மாட்டோம் என்று கூறுவோர், “ஏழும், மூன்றும் ஒன்பது” என்று எவராவது சொன்னால் அதையும் நம்பட்டும்! “பூமி தட்டையானது” என்று கடந்த காலத்தில் சொல்லப்பட்டதையும் நம்பட்டும்! “பூமி மாட்டுக் கொம்பின் மீது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்ற பாட்டிகளின் கதையையும் நம்பட்டும்! “சந்திரனைப் பாம்பு விழுங்குவதால் கிரஹணம் ஏற்படுகின்றது” என்பதையும் நம்பட்டும்! ஏனெனில் அவர்களுக்குத்தான், செவியில் விழுந்து விட்டாலே பொதுமே! உடனே நம்பிவிட வேண்டுமே!
நம்மைப் பொருத்தவரை சிந்தனையைச் செலுத்தி விளங்க முடிகின்றவைகளை சிந்தனையால் விளங்குவோம். சிந்தனையால் முடிவெடுக்க இயலாத கடந்த கால நிகழ்ச்சிகளை செவிப்புலனின் துணை கொண்டு நம்புவோம்; அதைத் தவிர வேறு வழியில்லை என்பதால். எதை, எப்பொது பயன்படுத்த வேண்டுமோ அதை அப்போது பயன்படுத்துகிறோம். எல்லாவற்றுக்கும் என் செவி மட்டுமே போதும் என்போர், இப்படிப்பட்ட அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, சிந்தனையை மழுங்கச் செய்து கொள்ளட்டும்.
“இதுதான் குர்ஆன்” “இவை தான் ஹதீஸ்கள்” என்ற தகவல்கள் வெறும் செவிப்புலனால் மட்டுமே அறிந்து கொள்ள முடிகின்ற ஒன்று மற்ற புலன்களால் இதை உணர முடியாது. சிந்தனையாலும் ஊகித்து உணர முடியாது.
எனவே முன்னோர்கள் சொன்ன தகவல்களை அடிப்படையை வைத்து, அவர்கள் எதைக் குர்ஆன் என்று நம்மிடம் ஒருமித்து அறிமுகப்படுத்தினார்களோ, அதை நாமும் நம்புகிறோம். வெறும் நம்பிக்கையோடு நின்று விடாமல் நம்மால் இயன்ற அளவுக்கு முயற்சியும் செய்கிறோம்.
முன்னோர்கள் எதைக் குர்ஆன் என்று நம்மிடம் காலம் காலமாகச் சொன்னார்களோ, அதில் முரண்பாடுகள் எதுவுமில்லாமலிருப்பதை நாம் காணுகிறோம். விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டு பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்ட இன்றைய காலத்திலும் கூட அதில் எந்த ஒரு தவறையும் காண முடியவில்லை என்பதையும் நிதர்சனமாகக் காண்கிறோம். முன்னோர்கள் எதைக் குர்ஆன் என்று சொன்னார்களோ, அதில் “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதில் உங்களுக்கு சந்தேகமிருந்தால் இது போன்ற ஒன்றை இதிலுள்ள ஒரு அத்தியாயம் போன்றதையாவது இயற்றிக் காட்டுங்கள்!” என்று சவால் விடப்பட்டிருப்பதையும் காண்கிறோம். இன்று வரை எவராலும் அவ்வாறு செய்து காட்டி, குர்ஆனின் சவாலை ஏற்கமுடியவில்லை என்பதையும் பார்க்கின்றோம். இவற்றை எல்லாம் காரணமாக வைத்து இது தான் குர்ஆன்” நிச்சயமாக இது மனிதர்களால் இயற்றப்பட்டது அல்ல” என்ற திடமான முடிவு நமக்கு ஏற்பட்டு விடுகின்றது.
“குர்ஆன்” என்று சொல்லி வேறு எதையாவது நம்மிடம், நமது முன்னோர்கள் தந்திருந்தால் அதன் அமைப்பே, அதன் போலித்தன்மையை நமக்குத் தெளிவாக்கி இருக்கும்.
முன்னோர்கள் “இதுதான் குர்ஆன்” என்று நம்மிடம் எதை அறிமுகம் செய்தார்களோ அதை அவர்களின் கூற்றை நம்பி ஏற்றுக் கொண்டதோடு நின்று விடாமல், சிந்தித்துப் பார்க்க முடிகின்ற விதத்தில் சிந்தித்துப் பார்த்தும் உறுதி செய்து கொள்கிறோம்.
அது போல், முன்னோர்கள் “ஹதீஸ்கள்” என்று நம்மிடம் எதை அறிமுகம் செய்தார்களோ, அவற்றையும் செவி வழியாகவே நாம் கேள்வியுற்றோம். ஆனால் “ஹதீஸ்கள்” என்று சொல்லப்படும் அத்தனையையும் கண்ணை மூடிக்கொண்டு நாம் ஏற்பதில்லை ஹதீஸ்கள் என்று அறிவிக்கக் கூடியவர்களில் ஒருவர், அல்லது பலர், நம்பகமானவர்களில்லை, பொய் சொல்லக் கூடியவர், நினைவாற்றல் இல்லாதவர்” என்றெல்லாம் முன்னோர்களில் சிலர் அவர்களைச் சந்தேகித்திருக்கும் போது, நாமும் சந்தேகிக்கிறோம். அதே நேரத்தில் நம்பகமான அறிவிப்பாளர் என்பதில் எவரும் ஐயம் தெரிவிக்காமல், ஹதீஸ்கள் என்று சொல்லப்படுபவைகளை நாமும் உறுதியாக நம்புகிறோம்.
நாம் எவரையும் பின்பற்றக் கூடாது என்று சொல்வது கருத்துக்கள் பற்றியதே! தகவல்கள் பற்றியது அல்ல.
“காந்தி சுடப்பட்டார்” என்ற செய்தியை நம்முடைய பெற்றோர் வாயிலாகக் கேட்டு நம்புவது தக்லீத் ஆகாது. தகவல்களை அப்படித்தான் நம்ப வேண்டும். அதே பெற்றோர், சந்திரனைப் பாம்பு விழுங்குகிறது என்று ஒரு கருத்தைச் சொல்லும் போது, நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதே தக்லீத் எனப்படும். அதுதான் கூடாது. அல்லாஹ் இந்த வேறுபாடுகளை உணர்ந்து உண்மையை விளங்கிக் கொள்ள அருள்செய்வானாக!
http://www.readislam.net./
No comments:
Post a Comment