அல் ஜுமுஆ எனும் ஓர் இஸ்லாமிய ஆங்கில மாத இதழ், பெருமளவிலான அமெரிக்க, ஐரோப்பிய முஸ்லிம் வாசகர் வட்டத்தைக் கொண்டது. தரமானதோர் இதழ். அண்மையில் வாசகர் மத்தியில் ஹிஜாப் பற்றியதான ஓர் ஆய்வை இது மேற்கொண்டிருந்தது. அதனையெல்லாம் தொகுத்தும், அதன் அடிப்படையிலும் கட்டுரையெல்லாம் எழுதி வெளியிட்டிருந்தார்கள். அவர்களுடைய ஆய்வுக் கேள்விகளுக்கு பதில் அனுப்பும்போது, அமெரிக்கப் பல்கலை ஒன்றில் இறுதி ஆண்டு பயிலும் சகோதரி ஒருவர் (பெயர் குறிப்பிடப்படவில்லை), அந்த ஆய்வுக்கான தனது பதிலுடன் கடிதம் ஒன்றும் இணைத்து அனுப்பியிருந்திருக்கிறார். அதனைக் கட்டம் கட்டி பிப்ரவரி/மார்ச் 2010 இதழில் வெளியிட்டிருந்தது அல்-ஜுமுஆ.
இணையமும் கூகுளும் விரலசைவில் அளிக்கும் தகவலையெல்லாம் நுனிப்புல் மேய்ந்து அதுதான் ஞானம் எனும் மாயப்போக்கு பரவலாகியுள்ள நிலையில் இத்தகைய, தீர்க்கமான சிந்தனை சிலருக்கே வாய்க்கிறது. உணர முடிந்தால் அதில் நம் அனைவருக்கும் அறிவுரை உள்ளது என்பதாலும் அதன் செய்தி மேற்குலகம் தாண்டியும் முஸ்லிம்களுக்கு பொருந்தும் என்பதாலும் அதன் கருத்தின் மொழியாக்கம் இங்குத் தரப்படுகிறது.
"என்னுடன் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களில் ஒன்றாகச் சேர்ந்து படித்த பெண்கள், எங்கள் ஊரின் முஸ்லிம் சமூகங்களில் நான் சேர்ந்து வளர்ந்த அதே பெண்களின் மாறிப்போன அவர்களது வாழ்க்கை முறையைத்தான் நான் இங்குக் குறிப்பிடுகிறேன். தனிப்பட்ட முறையில் அது என்னைப் புண்படுத்தவில்லைதான். எனினும், ஒரு முஸ்லிமாக அது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது.
Bang-hijab உங்களுக்குத் தெரியும்தானே? (தலையின் பின் பகுதியை மட்டும் மறைக்கும் தலை முக்காடு, முன்பகுதி தலை முடியை முழுக்கக் காண்பிக்கும். இங்குள்ள இமாம் ஒருவர் அதனை பேநஸீர் பூட்டோ ஹிஜாப் என்பார் - அனைவரும் புரிந்து கொள்ள ஏதுவாக.) ஆன்மிக வாழ்விற்கு அது ஒரு தீக்குறியாகவும், அதன் பொருட்டு நம்மேல் விரைவில் நிகழவிருக்கும் கேட்டை அது பிரதிபலிப்பதாகவும் இல்லாமல் இருந்திருந்தால் அது குறித்து எனக்கு எந்த ஒரு கவலையும் ஏற்பட்டிருக்காது. ஐயா, மேம்போக்கான ஆழமற்ற அறிவுதான் அனைவரிடமும் ஆட்சி செலுத்துகிறது. மட்டுமல்லாமல் அது சர்வாதிகாரத் தன்மை பெற்றும், அத்தகைய சிந்தனைப் போக்கு உள்ளவர்கள் கூறுவதுதான் அனைத்துத் தரப்பு அபிப்ராயம் என்பதாகவும் மக்களுக்கு அதுதான் விடுதலை, மகிழ்ச்சி எல்லாம் அளிக்கும் வரப்பிரசாதம் என்பதாகவும் ஆகிவிட்டது. இத்தகையதொரு மேம்போக்கான அறிவுதான், உண்மையேபோல் பொய்வேடமிட்டுக் கொண்டு திரிகிறது என்று நான் கவலையுறுகிறேன்.
இந்தப் பெண்கள்! தாங்கள் புரியும் அனைத்துச் செயல்களிலும் மகிழ்ச்சி காண்கின்றனர். மூளையை மழுங்கடிக்கும் முட்டாள்தனமான செயல்களைக் கவனமாகச் செய்கின்றனர்; பகுத்தறிவு மட்டும் தங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்கின்றனர். வாழ்க்கையையும் செயல்களையும் எப்படிச் செயற்கையாய் அமைத்துக் கொள்கிறார்கள் என்றால் மீண்டும் மீண்டும் Facebook-இல் தங்களைப் பெரிதுபடுத்திக் காட்டிக் கொள்ளவும், ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் அதில் கருத்துகள் பெறவும், தங்களைப் பிறர் விரும்பவும் நேசிக்கவுமாகவே அவர்களின் காரியங்கள் அமைகின்றன.
நான் இதனை cyber-superficiality (ஆழமற்ற இணைய அறிவு) என்பேன். அனைவரும் எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாகவே இருக்க விரும்புகிறார்கள்: அல்லது அத்தகையோருடனேயே இருக்க விரும்புகிறார்கள். அப்படியில்லையா, Facebook-இல் பதிக்க வேண்டும் என்பதற்காகவே விதவிதமாய் உடையணிந்து தங்களைப் படமெடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த மடமையையும் முதிர்ச்சியற்ற மனோநிலையையும் கண்டு எனக்கு ஆயாசமும் வேதனையும்தான் ஏற்படுகின்றன. வெளியில் செல்லும்போது பிறரைக் கவர்ந்திழுக்க மேக்கப் என்பதெல்லாம் போய், இப்பொழுது அது ஒரு பெரிய கலை வடிவமே பெற்றுவிட்டது. உண்மை என்ற ஒன்று தொலைந்து விட்டதாய் எனக்குத் தோன்றுகிறது. நாங்கள் பயின்ற இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களில் நிறையக் கற்றுத் தந்திருக்கிறார்கள்; எங்களுக்கும் ஓரளவு இஸ்லாமிய விபரங்கள் தெரியும்தான். ஆயினும் அவற்றையெல்லாம் அவர்கள் வெறும் தகவலாகத்தான் பார்க்கிறார்களே தவிர, இறைவனிடமிருந்து வந்த பொருத்தமான அறிவுரையாக உணரவேயில்லை என்பது எத்தகைய கைச்சேதம்!
எனக்கு ஒரு நண்பி இருக்கிறாள். மிகவும் விரிவாய், அதிகமாய்ப் படிக்கக்கூடியவள். அல்-கஸ்ஸாலி, ரூமியின் கவிதைகள், இன்னபிற என்றெல்லாம்கூடப் படித்து படித்து மாய்வாள். ஆனால் ஒருமுறையாவது அவள் தான் படித்ததை தன் வாழ்வில் செயல்படுத்துவதைக் காண வேண்டுமே? ஆவலுடன் அதற்காக நான் காத்திருக்கிறேன். வெற்றிக் கோப்பைகளைப்போல் தனது படுக்கை அறையில் புத்தகங்களை அவள் அடுக்கி வைத்திருக்கிறாளே தவிர, அதிலுள்ள ஞானமெல்லாம் அவளது அகந்தைக்கு எரிபொருளாகிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
ஒவ்வொருவரும் தாங்கள் எந்த அமைப்பில், கமிட்டியில் இருக்கிறோம் என்பதையும், என்னென்ன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தோம் என்பதனையும், அல்லது எங்குப் பயணம் சென்றார்கள் செல்லப்போகிறார்கள் என்பதைப் பற்றியுமே தம்பட்டம் அடிப்பவர்களாய் இருக்கிறார்கள்.
வாழ்க்கையின் அர்த்தம் தொலைந்து போனது இருக்கட்டும்; அப்படியொன்று அவர்கள் மனதில் பதியப்பட்டிருந்ததா என்றே எனக்குத் தெரியவில்லை. இந்தக் காலத்திற்கும் இந்த மக்களுக்கும் நான் பொறுத்தமற்றவள் என்றுதான் என்னை நான் உணர்கிறேன்"
சமூகத்தின் மேல் எத்தகைய உள்ளார்ந்த கவலை இருந்திருந்தால் இத்தகைய விரக்தியில் கடிதம் முடிந்திருக்கும்? நம்மில் எத்தனை பேருக்கு அத்தகைய உணர்வு ஏற்பட்டிருக்கிறது? நிறைய மனங்களில் இத்தகைய சிந்தனைகள் விளைந்தால் விடியல்கள் பிரகாசமாகலாம் - இன்ஷா அல்லாஹ்.
-நூருத்தீன்
No comments:
Post a Comment