Saturday, May 22, 2010

தத்து எடுக்கும் குழந்தை எந்த மதத்தைச் சேர்ந்தது என்று தெரியாத போது, வளர்க்கும் தம்பதியின் நிலை என்ன?

ஐயமும்! தெளிவும்!!

ஐயம்: குழந்தையில்லாத முஸ்லிம் தம்பதியினர், அனாதை இல்லங்களிலிருந்து, குழந்தையை எடுத்து வளர்க்கலாமா? தத்து எடுக்கும் குழந்தை எந்த மதத்தைச் சேர்ந்தது என்று தெரியாத போது, வளர்க்கும் தம்பதியின் நிலை என்ன?
சாதிக், பெரியகுளம்.
தெளிவு: “நானும், அனாதைகளுக்குப் பொறுப் பேற்பவனும் சுவர்க்கத்தில் இவ்வாறு” என்று சொல்லி நபி(ஸல்) அவர்கள் தன்னு டைய ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் (‘V’ வடிவத்தில்) உயர்த்திக் காட்டினார்கள். நூல்கள்:புகாரி,அபூதாவூது,திர்மிதி)
 இந்த நபிமொழியிலிருந்து, அனாதைகளை வளர்க்கலாம் என்றும், அது அண்ணலாரின் அருகாமையைப் பெற்றுத் தரக்கூடிய மிகச் சிறந்த செயல் என்றும் தெரிகின்றது. ஆனால் எடுத்து வளர்த்த காரணத்தால் அவன் மகனாகி விட முடியாது. அதாவது பெற்ற மகனுக்கு கிடைக்கக்கூடிய சொத்துரிமை வளர்ப்புத் தந்தையின் சொத்திலிருந்து இவனுக்குக் கிடைக்காது.
 பெற்ற மகனாக இருந்தால், பெற்றோர் வழி உறவு முறையில் யாரையெல்லாம் மணமுடிப்பது தடுக்கப் பட்டுள்ளதோ அந்தத் தடை, வளர்ப்பு மகனுக்கு இல்லை. இதைப் பின்வரும் திருமறை வசனங்கள் தெளிவாக்கு கின்றன.
 “உங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளை உங்களின் புதல்வர் களாக (அல்லாஹ்) ஆக்கவில்லை. இவை யாவும் உங்கள் வாய்களால் சொல்லும் வார்த்தைகளேயாகும். அல்குர்ஆன் :33:4
“விசுவாசிகளால் வளர்க்கப் பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால் அவர்(களை வளர்த்தவர்)கள், அப்பெண்களை மணந்து கொள்வது யாதொரு குற்றமும் இல்லை என்பதற்காக, ஸைத் (என்ற உமது வளர்ப்பு மகன்) அவளிடமிருந்து தன் தேவையை முடித்துக் கொண்ட போது (அதாவது விவாகரத்துச் செய்த போது) நாம் அவளை உமக்கு மணமுடித்து வைத்தோம்” அல்குர் ஆன் 33:37
 இந்த வசனத்தில் நபி(ஸல்) அவர்களால் வளர்க்கப்பட்ட ஸைத்(ரழி) என்பவர் அவரது மனைவியை விவாகரத்துச் செய்த பின்னர், அந்தப் பெண்ணை நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வே மனைவி ஆக்குகிறான். இதிலிருந்து பெற்ற மகன் மூலம் ஏற்படும் திருமணத் தடைகள் வளர்ப்பு மகன்களுக்கு இல்லை என்று உணரலாம்.
 மேலும், உண்மையில் அவனைப் பெற்ற தந்தை யாரோ, அவரது மகன் என்றே குறிப்பிடவும் வேண்டும். வளர்ப்புத் தந்தையின் மகன் என்று குறிப்பிடவும் கூடாது. இதைப் பின் வரும் ஹதீஸ் விளக்குகின்றது.
“அவர்களை (வளர்ப்புப் பிள்ளைகளை) அவர்களின் பெற்ற தந்தையின் பெயராலேயே குறிப்பிடுங்கள்!” என்ற குர்ஆன் வசனம் (33:5) இறங்கும் வரை, ‘முஹம்மதின் மகன் ஸைது’ என்றே நாங்கள் குறிப்பிட்டு வந்தோம். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி), நூல்: புகாரி
 அடுத்து எல்லா மக்களையும் இஸ்லாத்தின் பால் அழைக்கும் கடமை நமக்கு உண்டு. இந்த அடிப்படையில் நாம் எடுத்து வளர்க்கும் குழந்தையை இஸ்லாத்தின் அடிப்படையிலேயே வளர்க்க வேண்டும்.

Filed under கேள்வி-பதில் (தொகுப்பு) by அந்நஜாத்
http://www.annajaath.com/?p=3395#more-3395

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails