Saturday, December 11, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே!

by ரபீக்  சுலைமான்.

படம்-1
நன்றி தினமலர் - 10-12-10




படம்-2

படம் - புதுசுரபி 10-12-10
 




படம்-3

படம் - புதுசுரபி 10-12-10


இங்கே படம் 1, படம் 2 மற்றும் படம் 3 கூறும் செய்திகள் என்ன தெரியுமா???

 படம் - 1, நண்பர் ரவி சாரங்கன் சொன்னது போல, இன்று காலை தினமலரில் வந்த நெஞ்சை உலுக்கும் செய்தி......

 படம் - 2, காலையில்(07:45) சென்னை-அஷோக்நகர் வழியாக வந்தபோது, அடுத்த ஆண்டிற்கான, மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பம் வாங்க அதிகாலை 3.00 மணியிலிருந்து வரிசையில் காத்திருந்த பெற்றோர்களின் (மனித) சங்கிலி!

  படம் - 3, இன்று எத்தனையோ வசதிகள் (ONLINE Application, online payment...etc.) வந்த பின்னும் கூட இதுபோல பெற்றோர்களை தெருவில் நிற்க வைத்து, காலை 8:00 மணிக்கு பள்ளி திறக்கும் வரையிலும், இதுபோன்ற பெற்றோர்களின் வாகனங்களை நிறுத்தக் கூட வசதி செய்து தராததால் சாலையின் இருமருங்கிலும் நிறுத்தி, காலையில் இதர பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவியரின் வாகனங்கள், வேலைக்குச் செல்வோர் என அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் சிரமமேற்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காட்சி!

 தூக்கம், வேலை, இதர பணிகள் என அனைத்தினையும் தள்ளி வைத்துவிட்டு, தன் பிள்ளைக்கு நல்ல ஒரு பள்ளிக்கூடத்தில் இடம் கிடைக்க வேண்டும், அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டும் என்பதே கால் கடுக்க அந்த வரிசையில் நிற்கும் பெற்றோர்களின் கனவு. (படம்-2)

 மேட்டுப்பாளையம் - காரமடை ரோடு, காந்திநகரில், "பிருந்தாவன் வித்யாலயா' என்ற சி.பி.எஸ்.இ., பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் 300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில் இருந்த, "ரெக்கார்டு' மர்மமான முறையில் கிழிந்திருந்தது. இதை, நான்காம் வகுப்பு மாணவ, மாணவியரில் ஒருவர்தான் கிழித்திருக்க வேண்டும் என்று, ஆசிரியைகள் சந்தேகமடைந்தனர். விளையாட்டு ஆசிரியர் சதீஷ்குமாரை அழைத்து, குழந்தைகளை விசாரிக்குமாறு கூறியுள்ளனர். இவர், வகுப்பு அறையில் வைத்து குழந்தைகளை விசாரித்துள்ளார். "தாங்கள் யாரும் ரெக்கார்டை கிழிக்கவில்லை' என்று கூறி குழந்தைகள் அழுதன. ஆத்திரமடைந்த ஆசிரியர் சதீஷ்குமார் 17 மாணவர்கள், 7 மாணவியரை விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்று வெயிலில் நிற்க வைத்துள்ளார். இரு கைகளையும் மேல்நோக்கி தூக்கி நிற்குமாறு கூறி, குழந்தைகளின் "பின்பகுதி'யில் பிரம்பு, பி.வி.சி., பைப் கொண்டு ஆத்திரம் தீர வெளுத்துள்ளார். போலீஸ் பாணியில் குற்றவாளிகளை விளாசுவது போல் தாக்கியுள்ளார். குழந்தைகள் துடிதுடித்து கதறி அழுதுள்ளனர். பின்பகுதியில் உள்காயம், ரத்தக்கட்டு ஏற்பட்டு நடக்கக்கூட முடியாதவகையில் குழந்தைகள் தவித்துள்ளனர்.

  மாலையில் குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர், "நடந்த சம்பவத்தை' கேள்விப்பட்டு பதறினர். அடிதாங்க முடியாமல் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் நேற்று காலை பள்ளிக்கு வந்து, கொடூர ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட நான்காம் வகுப்பு மாணவர்கள் கூறுகையில், "பி.டி., மாஸ்டர் அடித்ததால் வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே வகுப்புக்கு சென்றோம்; அங்கு இருக்கையில் அமர முடியாமல் நின்று கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த பள்ளி முதல்வர் அன்புலட்சுமி, "உட்காருகிறீர்களா, இல்லை... மீண்டும் பி.டி.,மாஸ்டரை கூப்பிடட்டுமா?' என, மிரட்டினார். வலிதாங்க முடியாத நிலையிலும் இருக்கையில் அமர்ந்தோம்' என்றனர்.

 பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில்,"நான்காம் வகுப்பு பயிலும் குழந்தைகளை ஈவு, இரக்கம் கொஞ்சமும் இல்லாமல் பள்ளி ஆசிரியர் அடித்திருக்கிறார். வீட்டுக்குச் சென்ற குழந்தைகளில் சிலர் இதை பெற்றோரிடம் கூட சொல்லவில்லை. சீருடையை கழற்றும்போது "பின்புறம்' ஏற்பட்டிருந்த ரத்தக்கட்டை பார்த்த பிறகே விஷயம் தெரிந்து அதிர்ச்சியடைந்தோம். குழந்தைகளை கம்பாலும், பிளாஸ்டிக் பைப்பாலும் தாக்கிய ஆசிரியர், அவ்வாறு செய்ய உத்தரவிட்ட முதல்வர் உள்ளிட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

 இதுகுறித்து பள்ளி நிர்வாகிகளில் ஒருவரான வக்கீல் சம்பத்குமார் கூறுகையில், ""விளையாட்டு ஆசிரியர் இப்படி அடித்த விவரம் எங்களுக்கு தெரியாது. குழந்தைகளை நேரில் பார்த்த பிறகு உடனடியாக அந்த ஆசிரியரை, "டிஸ்மிஸ்' செய்து விட்டோம். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, முதல்வர் அன்புலட்சுமி மூலமாக போலீசில் புகார் செய்ய உள்ளோம்,'' என்றார்.

(தினமலர் செய்தி - 10-12-2010 )

 பெற்றோர்களே!

    * நல்ல பள்ளி என்பதற்கு எது உங்களுடைய அளவுகோல்??
    * பாடப்புத்தகத்தில் உள்ளவற்றை மனனம் செய்யக் கற்றுக்கொடுத்து, அதை மட்டுமே மிகச் சரியாக ஒரு டேப்ரிக்காடர் போல ஒப்புவிப்பதால் தரும் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் கொடுப்பதின் மூலம் முடிந்துவிட்டதா?
    * எந்த சுதந்திரமும் இல்லாத, தன் பக்கத்தில் இருக்கும் சக மாணவ நண்பனிடம் கூட பேச முடியாமல், தான் மட்டுமே, தன் காரியம் மட்டுமே என ஒரு இயந்திர மனிதன் போல உருவாவதற்கு பயிற்சி தரும் கூடம் என்பதா?
    * குழந்தைகளும் ஒரு (சிறிய) மனிதர்களே என்றும் அவர்களுக்கென்று ஒரு உலகம் உள்ளது. அந்த உலகம் அற்புதமானது, கள்ளம் கபடமறியா உள்ளம் கொண்டவர்கள் என்பதறியா கயவர்கள் பயிற்றுவிப்பதாலா?
    * ஒவ்வொரு குழந்தையும் ஒருவிதம், அது அவர்கள் கற்கும் திறன், பேசும் திறன், எழுதும் திறன், புரிந்துகொள்ளும் திறன் என ஏற்ற இறக்கம் இருக்கும் அதற்கு தகுந்தாற்போல் தன்னுடைய போதிக்கும் திறம் வளர்த்துக்கொள்ளா வனவிலங்கு காப்பாளர் உள்ள இடமா?
    * ஒழுக்கம் என்ற பெயரில் பிஞ்சுகளின் நெஞ்சமறியாது கண்மூடித்தனமாய் தாக்கிவிட்டு பின்னர் உங்கள் பிள்ளைகளின் நன்மைக்குத்தானென நாடகமாடும், வன்முறைச் சிந்தனையினை, விரோத மனப்பான்மையினைத் தூண்டிவிடும், தூதர்கள் உள்ள இடமா?

சற்று சிந்தித்துப் பாருங்கள்:

ஒரு சாதாரண புடலங்காய் வளர்ப்பதற்கு கூட சிரமெடுத்து, பந்தலிட்டு, பராமரித்து, நேராக வளர வேண்டும் என்பதற்காக வளர்ச்சிக்கேற்ப கல்(பாரம்)கட்டி சீரான வளர்ச்சிக்கு விழையும் நாம், ஆயிரங்காலத்துப் பயிராகிய நம் குழந்தைகளின் எதிர்காலத்தினை, குணாதிசயங்களை விதைக்க வேண்டிய விளைநிலங்களான பள்ளிகள் எப்படி இருக்கவேண்டும்? கரடுமுரடான நிலத்தினை பதத்தோடு  பண்பட்டதாக மாற்ற பொறுமைகாட்டும் விவசாயி போல, குழந்தைகளின் உளம் அறிந்து, இந்த இளம் வயதில் நல்ல பல போதனைகளை விளையாட்டின் மூலம் வழங்கியும், அவர்களின் திறன் வளர்க்கும் திறம் கொண்ட ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளைக் கண்டறிவதே நம் சிறார்களுக்கு நாம் செய்யும் அளப்பரிய சேவை. கடமையும் கூட!

  சற்று நினைவுகூறுங்கள்!

நம்முடைய மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் அவர்கள், மதிப்ப்பிற்குரிய மயில்சாமி அண்ணாதுரை, தோஹா வங்கியின் முதன்மை செயல் அதிகாரி சீதாராமன். இளம் தொழில்வல்லுனர் சரத்பாபு .................... இன்னும் எத்தனையோ நம்முடைய சமகால சாதனையாளர்கள் நினைவுகூறுவது அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையே.............

மாணவர்களின் மனமறிந்து, மதிப்பளித்து, மகத்தான- இந்த நாட்டிற்கு பெருமை சேர்த்த தலைவர்களை உருவாக்கிய அந்த சிற்பிகளையே!

 அவர்களின் பெற்றோர்கள் எந்தப் பள்ளிக்கூடத்திலும் விடிகாலையில் வரிசையில் நின்று இடம் கேட்டு அனுமதிக்கப்பட்டதாக தகவ்ல் இல்லை!!!

 குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என் அனைவரும் பாதிக்கப்பட்ட, அவர்களின் உரிமை மீறப்பட்ட செய்தியினைப் பதியப்பட்டது (10-12-2010) -உலக மனித உரிமைதினத்தன்று!

1 comment:

ஸாதிகா said...

//ஒரு சாதாரண புடலங்காய் வளர்ப்பதற்கு கூட சிரமெடுத்து, பந்தலிட்டு, பராமரித்து, நேராக வளர வேண்டும் என்பதற்காக வளர்ச்சிக்கேற்ப கல்(பாரம்)கட்டி சீரான வளர்ச்சிக்கு விழையும் நாம், ஆயிரங்காலத்துப் பயிராகிய நம் குழந்தைகளின் எதிர்காலத்தினை, குணாதிசயங்களை விதைக்க வேண்டிய விளைநிலங்களான பள்ளிகள் ........//நல்ல விழிப்புணர்வை கொடுக்கும் வரிகள்.மிக அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

LinkWithin

Related Posts with Thumbnails