Sunday, September 12, 2010

தாய்லாந்துக்கு வாங்க - Part 2...[#535]

தாய்லாந்துக்கு வாங்க - Part 2...[#535]


ஒரு வழியாக தாய்லாந்து செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டீர்கள்.

சரி.. என்ன என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்?

தாய்லாந்து சுற்றுலா பேக்கேஜ் என்று நாளிதழ் / வார இதழ்களில் விளம்பரம் செய்யும் ஏஜெண்ட்களிடம் சென்று உங்கள் பாஸ்போர்ட், போட்டோ, காசு ஆகியவற்றை கொடுத்தால் போதும். அவர்களே எல்லா ஏற்பாடுகளையும் செய்து உங்களை அப்படியே அழைத்துக் கொண்டு போய் சுற்றிக் காண்பித்துவிட்டு திரும்ப கொண்டு வந்து விட்டு விடுவார்கள்.

இதில் உங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. ஆனால், அவர்கள் சொல்லும் ஹோட்டலில் தான் தங்க வேண்டும். அவர்கள் சொல்லும் தேதியில், நேரத்தில் தான் பயணம் செய்ய வேண்டும். அவர்கள் சொல்லும் இடத்தில் தான் சாப்பிட வேண்டும். அவர்கள் சொல்லும் நேரத்தில் தூங்கி எழுந்திருக்க வேண்டும். இப்படி பல கண்டிஷன்கள். அதனாலென்ன என்று சொல்கிற ஆசாமியா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு இதற்கு மேல் இந்த கட்டுரை(கள்) தேவைப்படாது.

அதெல்லாம் நமக்கு சரிப்படாது என்று சொல்கிறவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.

டிக்கெட்...

எந்த விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். மூன்று மணி நேரத்தில் நேரடியாக பேங்காக் சென்று சேரும் தாய் ஏர்வேஸின் நேரடி விமானமா? அல்லது இலங்கை வழியாகச் செல்லும் Srilankan Airways-ஆ? மலேஷியா வழியாகச் செல்லும் ஏர் ஆசியாவா? என முடிவு செய்து கொள்ளுங்கள். ஏர் ஆசியா போன்ற low cost airlines-களுக்கு டிராவல் ஏஜண்ட்டுகள் டிக்கெட் விற்பனை செய்ய மாட்டார்கள். நீங்களாகவே இணைய தளத்தில் வாங்கிக் கொள்ளலாம். மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே டிக்கெட் எடுத்தால் விலை குறைவாகக் கிடைக்கும். ஆனால் தேதி மாற்ற இயலாததாகவோ, அப்படி மாற்றினால் அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியதாகவோ இருக்கும்.

ஒன்றுக்கு இரண்டு மூன்றாக டிராவல் ஏஜண்ட்களிடம் எந்த டிக்கெட் குறைவு என்று பார்த்து எடுத்துக் கொள்ளவும். தாய் ஏர்லைன்ஸிலேயே கூட Promotional Fare என்று இருக்கும். விசாரித்து எடுத்தால் நியாயமான அளவிற்கு காசு மிச்சப்படுத்தலாம்.

***

அடுத்து விசா...

இந்திய பாஸ்போர்ட்களைப் பொறுத்த வரை தாய்லாந்து ஏர்போர்ட்டிலேயே On Arrival முறையில் விசா எடுத்துக் கொள்ளலாம். இரண்டு வார அனுமதி கிடைக்கும். சாதாரணமாக 1,000 தாய் பாட் (சுமார் 1,400 ரூபாய்). தற்போது வருடக் கடைசி வரை இலவசமாக்கி இருக்கிறார்கள். கையோடு இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் எடுத்து வரவும். விசா இல்வச காலத்திற்கு பிறகு வந்தீர்களேயானால், கையோடு தாய்லாந்து கரன்சியான பாட் (Baht) எடுத்து வர வேண்டும். இமிகிரேஷன் அருகிலேயே கரன்சி எக்சேஞ்ச், ஏ.டி.எம். மெஷின்கள் இருக்கும்.

பொதுவாக On Arrival Visa பகுதியில் கூட்டம் மிகுதியாக இருக்கும். குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திலிருந்து சமயங்களில் இரண்டு மணி நேரம் கூட ஆகலாம்.

எனவே, சென்னையில் தாய் விசாவில் டூரிஸ்ட் விசாவை எடுத்துச் செல்லுதல் நேரத்தை மிச்சப்படுத்தும்.

தேனாம்பேட்டை, செனடாப் ரோடு - முதல் தெருவில் இருக்கும் VFS அலுவலகத்தில் தான் தாய்லாந்து விசா எடுக்க வேண்டும். இது எல்.ஆர்.சாமி பில்டிங் அருகில் இருக்கிறது. செனடாப் ரோடு முதல் தெருவில் முதல் கட்டிடம்.

ஆஸ்திரேலியா, கனடா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல இங்கே விசா எடுக்க வேண்டும். எனவே எப்போதும் ஓரளவிற்கு கூட்டம் இருக்கும்.

தாய்லாந்து விசாவிற்கு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை, பிறகு மதிய 1 முதல் 3 வரை விண்ணப்பம் பெற்றுக் கொள்கிறார்கள். டூரிஸ்ட் விசா இரண்டு மாதங்களுக்கு தங்க அனுமதி. இதுவும் இப்போது இலவசமாக தருகிறார்கள். ஆனால் VFS கம்பெனி சர்வீஸ் சார்ஜாக ரூ. 294/- வசூலிக்கிறார்கள். (இதைத் தான் சாமி வரம் தந்தாலும் பூசாரி தடுக்குறாரு கதை போல!)

விண்ணப்ப படிவத்தை இங்கே இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

(VFS கம்பெனியின் இணைய தளம் --> http://www.vfs-thailand.co.in/index.html)

டூரிஸ்ட் விசா எடுக்கத் தேவையான ஆவணங்கள் :

  • பாஸ்போர்ட்
  • பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்க நகல்
  • இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
  • முழுதும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம்
  • சென்னை-பேங்காக்-சென்னை Return Air Ticket
இதைத் தவிர, உங்களிடம் கிரெடிட் கார்டு(கள்) இருந்தால் அதனையும் நகல் எடுத்து கொடுக்கவும். இல்லையென்றால் உங்கள் பேங்க் ஸ்டேட்மெண்ட் தேவை.

இரண்டுமே இல்லையா?

500 யு.எஸ். டாலர் பணம் வாங்கி அதை பாஸ்போர்ட்டில் endorse செய்ய வேண்டும்.

ஜெமினி மேம்பாலம் கீழே சபையர் தியேட்டர் அருகில் செல்லும் சாலை (கதீட்ரல் தானே?) சற்று தூரம் நடந்தால் இடது பக்கம் ஒன்றும், வலது பக்கம் ஒன்றுமாக Foreign Exchange (Forex) போர்டுகள் தென்படுகின்றன. உள்ளே உங்கள் பாஸ்போர்ட்டுடன் சென்று குறைந்தபட்சம் 500 டாலர் வாங்கி அதை மறக்காமல் பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் endorse செய்து வர வேண்டும். பர்மாபஜாரில் வாங்குவதை விட இங்கே டாலர் விலை கொள்ளை! ஆனால் கிரெடிட் கார்டு, ஸ்டேட்மெண்ட் இல்லாதவர்களுக்கு இதான் வழி!

இவற்றோடு விசாவிற்கு கொடுத்தால் இரண்டு நாள் கழித்து காலை 11 மணி முதல் மதியம் 3 மணிக்குள் சென்று பாஸ்போர்ட்டை விசாவுடம் பெற்றுக் கொள்ளலாம்.

என்ன விசா வாங்கியாச்சா? டிக்கெட் தான் ஏற்கனவே எடுத்தாச்சு. வேறென்ன வேண்டும்?

அடுத்த பகுதியில் பார்க்கலாம்...

(இதன் முந்தைய பகுதி : 1)

நன்றி :http://mayavarathaan.blogspot.com/2010/08/part-2535.htmlதாய்லாந்துக்கு வாங்க - Part 2...[#535]

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails