முஸ்லிம் கணவர் தமது மனைவியுடன்
இஸ்லாமியப் பார்வையில் திருமணமும் மனைவியும்
இஸ்லாமியப் பார்வையில் திருமணம் என்பது ஆன்மாவிற்கு நிம்மதியையும், உள்ளத்திற்கு உற்சாகத்தையும், மனதிற்கு மகிழ்ச்சியையும், இதயத்திற்கு உறுதிப் பாட்டையும் ஏற்படுத்தக் கூடிய ஓர் உறவாகும். ஓர் ஆணும், பெண்ணும் அன்பு, நேசம், கருணை, ஒற்றுமை, புரிந்துணர்வு, உதவி, நலவை நாடுதல், விட்டுக் கொடுத்தல் போன்ற நற்பண்புகளுடன் இணைந்து வாழ வழி அமைப்பதாகும். இதன்மூலம் கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியான இல்லறத்தை ஏற்படுத்திக் கொள்ள சக்தி பெறுகிறார்கள். இப்படிப்பட்ட இல்லறத்தில் பிறக்கும் குழந்தைகள்தான் நிறைவு பெற்ற, பாதுகாக்கப்பட்ட இஸ்லாமியத் தலைமுறையாக உருவாகிறார்கள்.ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அமைந்த இந்த இயற்கையான, நிரந்தரமான தொடர்பை மிகத் துல்லியமாக வர்ணிக்கிறது அல்குர்ஆன். அந்த வர்ணிப்பில் மன நிம்மதி, பாதுகாப்பு மற்றும் ஆறுதலின் அழைப்புகள் பரவி நிற்கின்றன. கருணை, அன்பு மற்றும் புரிந்துணர்வின் நறுமணம் அங்கே கமழ்கிறது.
நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்க ளுக்கு இவற்றில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அர்ரூம் 30:21)
திருமணம் என்பது ஆன்மாவை ஆன்மா வுடன் இணைக்கும் உறுதிமிக்க ஒரு பந்தமாகும். இதில் பாசத்துடன் கூடிய கருணை மற்றும் தூய்மையான அன்பு செழிப்புற்று விளங்குகின்றன. நேசமும் இதமும் மிக்க இந்த இல்லறத்தில் ஆண், பெண் இருவரும் மன நிம்மதி, மன மகிழ்ச்சி, மற்றும் பாதுகாப்பு எனும் அருட்கொடைகளை முழுமையாகப் பெறுகிறார்கள். இதற்காகத்தான் அல்லாஹ் இரு ஆன்மாக்களுக்குமிடையே திருமணப் பந்தத்தை ஏற்படுத்துகிறான்.
நல்ல பெண் இந்த உலக வாழ்வின் சிறந்த இன்பம் என்றும் ஓர் ஆணுக்கு அல்லாஹ் வழங்கும் மகத்தான அருட்கொடை அந்தப் பெண்ணே என்றும் இஸ்லாம் கூறுகிறது. ஏனென்றால், ஒரு கணவன் தன் வாழ்வில் துன்பங்களையும் சோதனைகளையும் சிரமங்களையும் சந்தித்த நிலையில் இல்லம் திரும்பும் போது, தன் மனைவியிடம்தான் நிம்மதியையும் மனஆறுதலையும் இன்பத்தையும் அடைகிறான். இந்த இன்பத்திற்கு இணையாக உலகில் வேறெந்த இன்பமும் இருக்க முடியாது.
இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியது எவ்வளவு உண்மையாக உள்ளது!
”உலகம் அனைத்தும் இன்பமே. அதன் இன்பத்தில் மிகச் சிறந்தது நல்ல பெண். ” (ஸஹீஹ் முஸ்லிம்)
இப்படித்தான், திருமணம் அதன் உயர்ந்த, பிரகாசமிக்க தரத்தில் அமைய வேண்டும் என இஸ்லாம் கருதுகிறது. அவ்வாறே, பெண்ணையும் அவளது பெண்மையின் மிக உயர்ந்த தரத்தில் வைத்து இஸ்லாம் பார்க்கிறது.
முஸ்லிம் தேடும் மனைவி
பெண்ணைக் குறித்தும் திருமணத்தைக் குறித்தும் இஸ்லாம் போதிக்கும் உயர்வான கண்ணோட்டத்தின்படி செயல்பட விரும்பும் ஒரு முஸ்லிமை, வெறும் வெளி அலங்காரங்களை மட்டுமே கொண்ட இந்தக் கால இளம் பெண்கள் எவரும் கவர்ந்திட முடியாது. மாறாக, முழுமையான மார்க்கப்பற்றுள்ள பெண்கள்தான் அந்த முஸ்லிமை ஈர்க்க முடியும். ஆகவே, தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் தம் மண வாழ்வை நிம்மதியானதாகவும், மகிழ்ச்சி கரமானதாகவும் ஆக்கக்கூடிய இஸ்லாமிய நற்பண்புகள் மிக்க பெண்ணையே அவர் தேர்ந்தெடுப்பார் அதில் நிதானத்தையும் கடைப்பிடிப்பார். கொள்கையற்று வீணான இளைஞர்களைப் போன்று வெறும் அழகையும், அலங்காரத்தையும், கவர்ச்சியையும் மட்டுமே அவர் நோக்கமாகக் கொள்ளமாட்டார். அதற்கெல்லாம் மேலாக உறுதிமிக்க மார்க்கப்பற்று, சிறந்த அறிவு, அழகிய பண்பாடுகளை உடைய பெண்ணைத்தான் முஸ்லிம் தேடுவார். மேலும், இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை கருத்தில் கொள்வார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். அவளது செல்வத்துக்காக, அவளது குடும்பப் பாரம்பரியத்துக்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கத்திற்காக. நீ மார்க்கமுடையவளையே தேடிப் பெற்றுக் கொள்! உன் இருகரங்களும் மண்ணாகட்டும்!” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
(வாழ்த்துகிற பொழுது ‘உன் இருகரங்கள் மண்ணாகட்டும், உன் நெற்றி மண்ணாகட்டும்’ என்றெல்லாம் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அதற்கு அதிகமதிகம் அல்லாஹ்விற்குச் சிரம் பணி(ந்து ஸஜ்தா செய்)யட்டும் என்பது பொருளாகும்.)
மார்க்கத்தைப் பேணக்கூடிய பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு உபதேசித்தது, அழகான பெண்ணைத் தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற கருத்தில் அல்ல. ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் திருமணத்துக்கு முன் பெண்ணைப் பார்த்துக் கொள்வதும் விரும்பத்தக்கதே என்று கூறியிருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் தமது மனதுக்கு மகிழ்ச்சியளிக்காத, கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்காத பெண்ணை மணந்து சிரமத்தில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே திருமணத்திற்கு முன் பெண்ணைப் பார்த்துக்கொள்ளவும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
முகீரா இப்னு ஷுஅபா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் காலத்தில், நான் ஒரு பெண்ணை மணம் முடிக்கப் பேசினேன். நபி (ஸல்) அவர்கள் ‘அந்தப் பெண்ணைப் பார்த்தீரா?’ என்று கேட்டார்கள். நான் ‘இல்லை’ என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”அவளைப் பார்த்துக் கொள்! அது உங்களிடையே நேசத்தை ஏற்படுத்துவதற்கு மிக ஏற்றமாக இருக்கும்” என்று கூறினார்கள். (ஸுனனுன் நஸாம்)
அன்சாரிப் பெண்ணை மணந்து கொள்ள இருந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள், அவரிடம் ‘அப்பெண்ணைப் பார்த்தாயா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘அப்பெண்ணைப் பார்த்துக் கொள்!’ என அவருக்கு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். (ஸுனனுன் நஸாம்)
ஒரு நல்ல பெண்ணிடம், விரும்பத்தகுந்த ஆன்மிகப் பண்புகளை ஓர் ஆண் எதிர்பார்ப்பது போன்றே அவள் அழகானவளாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இயற்கையான ஒன்றுதான். இதை நபி (ஸல்) அவர்கள் பல ஹதீஸ்களில் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த இரண்டில் ஒன்று இருப்பதால் மற்றொன்று தேவையில்லை என்றாக முடியாது.
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்குக் கூறினார்கள்: ”மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளை விட்டும் சென்றுவிட்டால் அவரைப் பாதுகாத்துக் கொள்வாள்.” (முஸ்தத்ரகுல் ஹாகிம்)
(இந்த இடத்தில், மனைவி தனது கற்பைப் பாதுகாப்பதையே கணவரைப் பாதுகாப்பதென்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.)
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ‘பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?’ என கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கணவர் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். அவர் ஏவினால் கட்டுப்படுவாள். அவரது பொருளிலும் அவளது ஆன்மாவிலும் அவர் வெறுக்கும் காரியங்களிலும் அவருக்கு மாறு செய்ய மாட்டாள்’ என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது)
கணவருக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் நற்பாக்கியத்தையும் வழங்க ஆற்றல் பெற்ற மனைவியின் தனித்தன்மையைப் பற்றி நபியவர்களின் உயர்ந்த கண்ணோட்டமாகும் இது. இத்தகைய பெண்ணே இல்லறத்தில் திருப்தி, அமைதி, மன மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை வழங்கவும் ஆற்றல் பெற்றவள். அது மட்டுமின்றி பல தலைமுறைகளுக்குச் சிறந்த பயிற்சியாளராகவும் வீரர்களை உருவாக்குபவராகவும் மேதைகளை உற்பத்தி செய்பவராகவும் விளங்குவாள்.
உடல், உணர்வு, ஆன்மா, அறிவின் தேட்டங்களுக்கு ஏற்ப உறுதிமிக்க, சமநிலை பெற்ற அடிப்படையின் மீதே திருமணம் என்ற மாளிகை நிர்மாணிக்கப்பட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் ஆசைப்பட்டார்கள். அப்போதுதான் திருமண உறவு பலமாக அமைந்து வெறுப்புணர்வும் மனக்கசப்பும் அதை அசைத்து விட முடியாமல் இருக்கும். ஆகவே, எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தையே பின்பற்றும் உண்மை முஸ்லிம் தீயகுணமுள்ள அழகிய பெண்ணின் வலையில் சிக்கிவிட மாட்டார். மாறாக, அவளை விட்டும் தாமும் விலகி மக்களையும் எச்சரிப்பார்.
No comments:
Post a Comment