Sunday, June 20, 2010

எல்லோரும் வாழுதற்கே


எல்லோரும் வாழுதற்கே
இப்னு ஹம்துன்

எல்லோரும் வாழுதற்கே இறையை வேண்டி
       இனிதாக நாளொன்றை தொடங்க வேண்டும்
நல்லோரும் வல்லோராய் நிலத்தில் வாழ
       நியாயத்தைப் பேசுகின்ற நேயம் வேண்டும்
இல்லாமை கல்லாமை இல்லா திருக்க
       உள்ளதையும் பகிர்கின்ற உள்ளம் வேண்டும்.
நில்லாமல் சுற்றுகின்ற பூமி தன்னில்
       நேரத்தை மதிப்பிட்டே வாழ வேண்டும்.

ஆண்டுகளும் ஓடுவதையே அறிந்திருந்தும்
       ஆன்மத்தை அறியாமல் வாழ்ந்திருந்தோம்
நீண்டதல்ல இவ்வாயுள் நினைவில் கொண்டால்
       நல்லதையே செய்கின்ற எண்ணம் வருமே!
தாண்டுகிற தடையாவும் உலகை வெல்ல
       தன்மனத்தை வென்றிடவும் தெரிய வேண்டும்.
வேண்டுகிற யாதொன்றும் தவறா என்றால்
       .விளைவுகளின் அறுவடையில் வைத்திருக்கும்.

ஆதத்தின் சந்ததிகள் அனைவர் மீதும்
       அருளையே பொழிதற்கு இறையை வேண்டி
வேதத்தின் பேர்சொல்லி வேட்டு வைக்கும்
       விளங்காத மனிதரெல்லாம் விலங்கு என்போம்.
பேதத்தால் மனிதரையே பிரித்து வைக்கும்
       புண்மனத்தார் எவரையுமே பேய்கள் என்போம்
நீதத்தை கூறுவைக்கும் இவரைத் துரத்தி
       நலங்காணும் உலகத்தை நனவு செய்வோம்.

(எண்சீர் ஆசிரிய விருத்தம்)

- இப்னு ஹம்துன் (fakhrudeen.h@gmail.com)

'நன்றி: www.keetru.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails