Tuesday, June 22, 2010

புதுக்கோட்டையில் அலிகார் முஸ்லீம் பல்கலைகழக கிளை- வக்பு வாரியம் திட்டம்

 
சென்னை:உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் கிளையை தமிழகத்தில் தொடங்க தமிழக வக்பு வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 250 ஏக்கர் நிலம் பார்க்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் கிளையை தொடங்க மத்திய அரசின் அனுமதியைக் கோரியுள்ளோம். மேலும் பூந்தமல்லியில், சிறுபான்மை இன மாணவர்களுக்காக இதழியல் கல்லூரி ஒன்றையும் தொடங்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் தனது கிளையைத் தொடங்க மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, பீகார், கேரளா ஆகிய மாநிலங்களில் தோதான இடத்தைப் பார்த்து வந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ள அப்துல் ரஹ்மான் தனது முயற்சியால் தமிழகத்திற்கு அந்தக் கிளையைக் கொண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து அவர்கூறுகையில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் தனது துணை மையத்தை அமைக்க பல்வேறு மாநிலங்களை அணுகியது. அதில் ஒரு மாநிலம் விருப்பம் இல்லை என்று கூறி விட்டது. இந்த நிலையில் நான்தான் தமிழகத்தில் அமைக்கலாம் என பரிந்துரைத்தேன். இதற்கு பல்கலைக்கழகமும் சம்மதித்தது. தற்போது மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், வக்பு வாரியத்திற்குச் சொந்தமாக தமிழகத்தில் நிறைய இடம் உள்ளது. இந்த இடங்களை கல்வி நிலையங்களுக்காக பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம். மேலும், இதன் மூலம் இந்த இடங்களை ஆக்கிரமிப்பிலிருந்தும் காப்பாற்ற முடியும்.

சென்னை பூந்தமல்லியில் அமையவுள்ள இதழியல் கல்லூரி, மீடியா மையமாக செயல்படும். இது 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும். இங்கு டிஜிட்டல் நூலகம், மாநாட்டு மண்டபம் ஆகியவற்றை அமைத்துத் தர ஒரு பிரபல முஸ்லீம் கல்வி நிறுவனம் முன்வந்துள்ளது.

இதுதவிர இஸ்லாமிய பெண்கள் பல்கலைக்கழகம் ஒன்றையும், மருத்துவக் கல்லூரி ஒன்றையும் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இந்த இஸ்லாமிய பெண்கள் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அரபு நாடுகளிடமிருந்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளோம். காரைக்குடியில் இந்த பல்கலைக்கழகம் அமையும்.அத்தனை திட்டங்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்றார் ரஹ்மான்.
source:thatstamil

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails