Tuesday, June 15, 2010

புத்திசாலி புள்ள...


கடந்த மாத நர்கிஸ் மாத இதழில்(Tuesday, July 28, 2009) வெளியான என்னுடைய இஸ்லாமிய சிறுகதை; நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, என் வாழ்வில் நடந்ததும் கூட)
“சுமையா! இப்படியே கவலைப்பட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தா எப்படி? அத்தா சொன்னா சொன்னது தான்னு உனக்கு தெரியாதா?” ஆதுரத்தோடு, தன் மகளைப் பார்த்து சொன்னார் கதீஜா.

“அம்மா, இந்நேரம், என்னோட பரிச்சை பேப்பரெல்லாம் கொடுத்திருப்பாங்கம்மா. ரசினாவை விட அதிகமா மார்க் வாங்கணும்னு ராவெல்லாம் உட்கார்ந்து படிச்சது உனக்கு தெரியாதாமா?”

“அதான் நான் அப்பவே கிடந்து அடிச்சிக்கிட்டேன். வயசுக்கு வந்திட்டா, உங்கத்தா படிக்க அனுப்ப மாட்டாங்க. அதனால, ரொம்ப படிக்காத; ஏதோ பாசானா போதும்னு. நீ தான் கேக்கல. இப்ப விசனப்பட்டுக்கிட்டு இருந்து என்ன பிரயோசனம்?!”

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சுமையா, தன் படிப்புக்கு இப்படி ஒரு இடைஞ்சல் வரும்னு நினைத்தே பார்க்கவில்லை. தன் வகுப்பு தோழி, ரசினாவோடு, எப்போதும் போட்டி போட்டு படிப்பவளுக்கு அரை பரிச்சையின் மார்க்கைக்கூட பார்க்க முடியாமல் இது என்ன சோதனை என்று எண்ணி வருந்தினாள்.

பரிச்சை லீவில் அவள் வயதுக்கு வந்ததும், அவள் தந்தை, இனி பள்ளி செல்ல வேண்டாம் என்று சொன்ன போது, ஏதோ விளையாட்டுக்குத் தான் சொல்கிறார் என்று நினைத்தாள்.

அவள் தந்தை தீனில் மிகவும் பற்றுள்ளவர். துன்யாவை விட தீனை மிகவும் நேசிப்பவர். பெண்பிள்ளைகள் வயது வரும் வரை படித்தால் போதும்; அதன் பின்னர், துன்யாவுடைய கல்வி, அவர்களுக்குத் தேவையில்லை என்ற எண்ணம் அவர் ரத்தத்தில் ஊறிய ஒன்று. அந்த நினைப்பில் தான், ஏதோ ஏழாவது, எட்டாவது வரை தானே படிக்க வைக்கப் போகிறோம், அதற்குள் ஓரளவுக்குக் கற்றுக் கொள்ளட்டுமே என்று இங்கிலிஷ் மீடியத்தில் சேர்த்து படிக்க வைத்தார்.

“அத்தா! பள்ளிக்கூடம் போறன்த்தா”

“வேண்டாம்! வேண்டாம்! நான் எங்கயும் பர்தா போடாம அனுப்ப மாட்டேன் உன்னைய. அதுமில்லாம, ஸ்கூலுக்குப் போனா லுஹரு களாவாயிரும்! வீட்டுலயே இருந்து அம்மாவுக்கு ஒத்தாசை பண்ணிக்கிட்டு இரு!”

“அத்தா! நான் பர்தா போட்டுக்கிட்டு கேம்பஸுக்குள்ள போய் கழட்டிக்கிறேன்த்தா! எங்க ஸ்கூல் கேர்ள்ஸ் ஸ்கூல் தான! ஜென்ஸ் யாரையும் உள்ளே விட மாட்டாங்கன்னு உங்களுக்கு தெரியாதா அத்தா?! அப்புறம், லன்ச் டைம்ல லுஹரும் தொழுதுக்குவேன்; அதுமில்லாம, நான் தொழுகறத பார்த்தா, இன்னும் நிறைய முஸ்லிம் பிள்ளைங்களும் கூட தொழுவாங்க! ப்ளீஸ் அத்தா!”

“அதெல்லாம் நடக்கற காரியம் இல்ல சுமையா!”

“அத்தா போரடிக்கும்த்தா!”

“போரடிச்சா குர்ஆன் ஓது! வீட்டு வேலைங்க எல்லாம் பழகிக்க! நல்ல மாப்பிள்ளை வந்தா கட்டிக் கொடுத்திருவோம். வேலை பழகினாத்தான் போற பக்கம் நல்ல பேரு வாங்க முடியும்”

அதுக்கும் மேல எதுவுமே பேசல சுமையா. கல்யாணம் என்பதை அவளால நினைத்துக் கூட பார்க்க முடியல. யா அல்லாஹ்! என்னை இப்படி சோதிக்கிறியே? மனசுக்குள்ளயே அழுது கொண்டிருந்தாள்.

அன்றிரவு, அவங்கத்தா கூப்பிட்டாங்க,

“சுமையா! தஃலிம் படிக்கலாம் வா”

தொழுகையின் சிறப்பு என்ற பிரிவில், பர்ளான, சுன்னத்தான மற்றும் நஃபிலான தொழுகையைப் பற்றிய ஒரு ஹதீஸைப் படித்தவர், அதை விளக்கமாக சொல்ல ஆரம்பித்தார்,

“பர்ளு தொழுகையில் ஏற்படும் குறைகள், சுன்னத்தான நஃபிலான தொழுகைகள் மூலம் நிவர்த்தி ஆகிவிடும். தஹஜ்ஜத், இஷ்ராக், லுஹா மற்றும் அவ்வாபீன் ஆகியவை நஃபிலான தொழுகைகள். தஹஜ்ஜத் தொழுதால், இறைவன் ஏழாம் வானிலிருந்து முதலாம் வானத்துக்கு இறங்கி வந்து, நாம் கேட்பதை செவிசாய்க்கிறான். இஷ்ராக் தொழுவதால், நம்முடைய நாட்டங்கள் எல்லாம் நிறைவேறுகிறது. லுஹா தொழுவதால், இரண விஸ்தீரணம் ஏற்படுகிறது. அவ்வாபீன் தொழுவதால், கடல் நுரையளவுக்கு பாவங்கள் இருந்தாலும் மன்னிக்கப்படுகின்றது! இன்ஷா அல்லாஹ், நாம் எல்லாரும் முடிஞ்ச அளவுக்கு நபிலான தொழுகைகளை தொழுக வேண்டும்”

கப்பாரா ஓதி, தன்னுரையை முடித்துக் கொண்டார் தந்தை.

ஒரு வாரம் சென்றது. சுமையா வீட்டில் இருந்தாலும், மனசெல்லாம் வகுப்பறையில் தான். பள்ளிக்கூடம் போகாவிட்டாலும், புத்தகத்தை எல்லாம் தூக்கிப் போட்டுவிடாமல், தினமும் ஆர்வமாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பாள். அதைப் பார்த்தாவது தந்தை மனம் மாற மாட்டாரா என்ற நப்பாசை அவளுக்கு.

தினமும் மகள், இஷ்ராக் தொழுவதை கவனித்த தந்தைக்கு, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பரவாயில்லை, நாம சொன்னதை அப்படியே பிடித்துக் கொண்டாள் என்ற சந்தோஷம். அதை மகளிடம் கேட்கவும் செய்தார்.

“சுமையா! பரவாயில்லையே, தினமும் இஷ்ராக் தொழுதுக்கிறியே!”

“ஆமாம் அத்தா! நீங்க தான சொன்னிங்க இஷ்ராக் தொழுதா நம்ம நாட்டம் நிறைவேறும்னு”

“ஆமாம்மா! அதில சந்தேகமே வேண்டாம். நாம நாடியதைக் கொடுக்க அல்லாஹ் போதுமானவன்”

“அதனால தான் அத்தா! தினமும் நான் இஷ்ராக் தொழுது, மறுபடியும் பள்ளிக் கூடம் போக வேண்டும்னு துவா செய்யுறேன்! அல்லாஹ் என்னோட நாட்டத்தை நிறைவேற்றுவானா அத்தா?!”

“புத்திசாலுப் புள்ள! என்னையே மடக்கிட்டயே? நாளையில இருந்து நீ பள்ளிக்கூடம் போமா!”

சுமையாவுக்கு ஆனந்தத்தில் கண்ணீர் பெருகியது. மகிழ்ச்சியோடு உள்ளே ஓடினாள், சஜ்தாவில் விழுந்து இறைவனுக்கு நன்றி செலுத்த!

-சுமஜ்லா.

http://sumazla.blogspot.com/2009/06/blog-post_6359.htmlபுத்திசாலி புள்ள...

Jazakkallahu hairan

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails