Wednesday, June 30, 2010

நட்புச் சதுரங்கம்!


"நண்பர்களோடு இருக்கையில் உன்னிடம் மறைவாக குறுவாள் இருக்கவேண்டியது அவசியம்" ஒரு ஐரோப்பிய சிந்தனையாளரின் கருத்து இது.

வாழ்க்கையில் நம்மால் விடையளிக்க முடியாத புதிர்கள் ஏராளம். அவற்றில் முக்கியமானது நட்பு. எது உண்மையான நட்பு? எது போலி நட்பு? என்று கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தும் இன்னமும் என்னால் அடையாளம் காண இயலவில்லை. ஓரிரு முறை பழகியிருந்தாலும் எந்த பிரதிபலனும் பாராமல் ஆபத்துக் காலத்தில் உதவிய நண்பர்களையும் கண்டிருக்கிறேன். முகத்துக்கு நேரே உயிருக்கு உயிராக பழகி, முதுகுக்கு பின்னால் குத்திய நண்பர்களையும் கண்டிருக்கிறேன்.

ரத்த பந்த உறவுகள் மீது நாம் கொள்ளும் பாசத்துக்கும், அறிமுகமான பாவத்துக்கு நட்புக்கள் நம் மீது காட்டும் பாசத்துக்குமான வேறுபாடுகளை உணரமுடிகிறது. முந்தையது கட்டாயத்தின் பேரில், மரபுரீதியாக, வேறுவழியில்லாமல் வந்து தொலைப்பது. பிந்தையது எந்த புள்ளியிலும் வரையறுக்க இயலாதது.

என்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் எப்போதும் நிர்வாகத்தை குறை சொல்லிக்கொண்டே இருப்பார். முதலாளியைப் பற்றிய மோசமான விமர்சனங்களே அவர் அலுவலக நண்பர்கள் மத்தியில் பேசும்போது அதிகமாக இடம்பெறும். ஆயினும் வருடா வருடம் சம்பள உயர்வின் போது மட்டும் அவர் எங்கள் எல்லாரையும் விட லீடிங்கில் இருப்பார்.

அந்த ரகசியம் சில ஆண்டுகள் கழித்து நான் நிறுவனத்தை விட்டு வெளியே வந்தபின்னர் தான் தெரிந்தது. எங்களிடையே நிர்வாகத்தையும், முதலாளியையும் குறைசொல்வது போல பேசி.. நாங்கள் தெரியாத்தனமாக ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளை விட்டால் அதை முதலாளியிடம் சொல்லி இரட்டை வேடம் போட்டிருக்கிறார். இன்றும் அவர் என்னிடம் நல்ல நண்பராகத்தான் இருக்கிறார். ஆயினும் எங்கள் நட்பை அவர் தன் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டார் என்ற உறுத்தல் எனக்கு இருக்கிறது.

விளம்பரத்துறைக்கு வந்த என்னுடைய ஆரம்ப நாட்களில் மிகக்குறைந்த சம்பளத்துக்கு அதிகவேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்நிறுவனத்தின் டெல்லி கிளை நிர்வாகி ஒரு முறை சென்னை வந்திருந்தார். ஒத்தவயதினராக இருந்ததால் என்னுடன் மிக சுலபமாக பழகினார். இருவரும் நட்பாக இருந்த காலத்தில் அவருக்கு தனிப்பட்ட முறையில் சில உதவிகளை (ரொம்ப ரொம்ப அல்பமான உதவிகள்) செய்து தந்தேன். அவர் டெல்லி திரும்பியவுடன் அவருடன் இருந்த என்னுடைய நட்பு எப்போதாவது சாட்டிங்கில் "ஹலோ" சொல்லும் அளவிலேயே இருந்தது.

அந்த ஆண்டு சம்பள உயர்வின் போது, சென்னை கிளை நிர்வாகிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி நிர்வாக இயக்குனர் நான் எதிர்பாராத பெரிய அளவிலான சம்பள உயர்வையும், மற்ற சலுகைகளையும் வழங்கினார். நானே எதிர்பாராத ஆச்சரியம் அது. சில ஆண்டுகள் கழித்து ஒரு முறை நிர்வாக இயக்குநரே என்னிடம் தனிப்பட்ட முறையில் "உன் டெல்லி நண்பரின் பலத்த சிபாரிசு" தான் உன் உயர்வுக்கு காரணம் என்றார். நானே எதிர்பாராமல் ஒரு சிறுநட்பால் விளைந்த பலன் அது.

உயிர்கொடுத்த நட்புகளையும், முதுகில் குத்தும் நட்புகளையும் வாழ்வில் ஏராளமாக சந்தித்து வருகிறேன். ஆயினும் எந்த நட்பையுமே வரையறை செய்து என்னால் இன்றுவரை தேர்ந்தெடுக்க இயலவில்லை. Junk mails வருவதைப் போல ஏராளமான நண்பர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். சில நாட்களில் Not Spam என்ற கட்டளை கொடுத்து அவர்களுடன் நெருங்கிய நண்பன் ஆனதும் உண்டு. நெருங்கிய நட்பு என்று நினைத்தவர்களை Report Spam கொடுத்து விலக்கியதும் உண்டு.

ஆயினும் நான் புரிந்துகொண்ட ஒரே உண்மை. நம் மகிழ்ச்சியை கொண்டாட நம் நட்பு வட்டம் முழுவதுமே நம் அருகிலிருக்கும். துயரத்தைப் பகிர ஓரிரு நட்புகளே முன்வருவார்கள். உண்மையான நட்பு எது என்பதை அப்போது மட்டுமே உணரமுடியும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். நண்பர்களிடம் அதி எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் நெருங்கிய நண்பனுக்குள்ளேயே கூட மோசமான எதிரி ஒளிந்துகொண்டிருக்கலாம். சுயநலவாதிகளுக்கு நட்பு முக்கியமல்ல. நட்பின் பொருள் அவர்களுக்கு தெரியாது.

வாழ்க உண்மையான நண்பர்கள்!!!

1 comment:

DrPKandaswamyPhD said...

//எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். நண்பர்களிடம் அதி எச்சரிக்கையாக இருங்கள்.//

ரொம்ப சரியான கணிப்பு. அவர்கள் நண்பர்கள்தானே என்று கவனக்குறைவாக மனதில் உள்ளதைப் பேசிவிட்டால் அது பின்னால் பெரிய வினையாக உருவெடுக்கும.

LinkWithin

Related Posts with Thumbnails