Monday, June 7, 2010

அல் அக்ஸா மசூதியின் பின்னணி

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 84

இந்தச் சரித்திரத்தின், மிக ஆரம்ப அத்தியாயங்களில் தொட்டுக்காட்டிய, ஒரு மிக முக்கியமான பிரச்னையின் வாசலில், இப்போது நிற்கின்றோம். உள்ளே சென்று, விரிவாக அலசி ஆராயவேண்டிய விஷயம் அது. அல் அக்ஸா மசூதி. அதனை மீட்பதற்காக பாலஸ்தீனியர்கள் தொடங்கிய 'அல் அக்ஸா இண்டிஃபதா'வைப் பார்ப்பதற்கு முன்னால், அம்மசூதியின் பின்னணியைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் ஆணிவேர், இந்த இடத்தில்தான் இருக்கிறது. சற்று நெருங்கிப் பாருங்கள். பற்றி எரியும் இந்த நெருப்பின் வெப்பம்தான், பாலஸ்தீனை ஆயிரமாண்டுகளாக வாட்டிக்கொண்டிருக்கிறது.

[படம்: மஸ்ஜித் அல் அக்ஸா] ஜெருசலேம் நகரில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் இது. ஒட்டுமொத்த பாலஸ்தீனிலேயே, இதனைக்காட்டிலும் பெரிய பள்ளிவாசல் வேறு ஏதும் கிடையாது. ஒரே சமயத்தில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கே அமர்ந்து தொழ முடியும். முகம்மது நபியின் பாதம் பட்ட பூமி இதுவென்பது, முஸ்லிம்களின் நம்பிக்கை. அவரது விண்ணேற்றத்துடன் தொடர்புடைய நிலம் இது.

இந்த அல் அக்ஸா பள்ளிவாசலுக்குச் சற்றுத்தள்ளி, இன்னொரு பள்ளிவாசல் இருக்கிறது. அதன் பெயர் மஸ்ஜித் ஏ உமர். கலீஃபா உமர் கட்டிய பள்ளிவாசல் இது.

இந்த அல் அக்ஸா மற்றும் மஸ்ஜித் ஏ உமர் ஆகிய இரு பள்ளிவாசல்களையும் இணைத்த வளாகத்தை, முஸ்லிம்கள் 'பைத்துல் முகத்தஸ்' என்று அழைப்பார்கள்.

இந்த இடத்தை முன்வைத்துத்தான், யூதர்களுக்கும் அரேபியர்களுக்குமான பிரச்னை ஆரம்பித்தது.

அல் அக்ஸா பள்ளிவாசல் இருக்கும் இடத்தில்தான், யூதர்களின் புராதனமான புனிதத்தலமான சாலமன் தேவாலயம் இருந்தது என்பது இஸ்ரேலியர்களின் வாதம். அதற்கு ஆதாரமாக அவர்கள் சுட்டிக்காட்டுவது, அந்தப் பள்ளிவாசலின் ஒருபக்கச் சுற்றுச் சுவராக இன்னமும் மிச்சமிருக்கும் அந்த உடைந்த சுவர். (Wailing wall எனப்படும் அழுகைச் சுவர். சாலமன் ஆலயம் இருந்ததன் அடையாளம், இந்தச் சுவர்தான் என்பது யூதர்களின் கருத்து. இந்தச் சுவரில் முகத்தைப் புதைத்து அழுதபடியே யூதர்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம்.). யூதர்களின் வாதம் என்னவெனில், அல் அக்ஸா பள்ளிவாசலுக்கும் முகம்மது நபி விண்ணேறிய சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அல் அக்ஸாவுக்குச் சற்றுத் தொலைவில் உள்ள Dome of the Rock எனப்படும், மஸ்ஜித் ஏ உமர் பள்ளிவாசல் இருந்த இடத்திலிருந்துதான் முகம்மது விண்ணேற்றம் செய்தார் என்பது.

[படம்: Dome of the Rock] தங்களுடைய இக்கருத்தை அழுத்தம் திருத்தமாக உலக மக்கள் மத்தியில் பதியச் செய்வதற்காக, Dome of the Rock ஐயே-அல் அக்ஸா என்று குறிப்பிடுவது யூதர்களின் வழக்கம். அல் அக்ஸா மசூதியை இடித்துவிட்டுத் தங்கள் தேவாலயத்தை மீண்டும் அங்கே எழுப்புவதற்குத் தொல்பொருள் துறையின் உதவியை அவர்கள் நாடினார்கள்.

உண்மையில் அல் அக்ஸா வேறு, Dome of the Rock வேறு. இரண்டும் பைத்துல் முகத்தஸ் என்கிற ஒரே வளாகத்தில் இருக்கும், இரு வேறு மசூதிகள்.

அயோத்தி மாதிரியேதான். யூத தேவாலயங்கள் - சாலமன் ஆலயமே ஆனாலும் சரி; எப்படியானாலும் மசூதிகளின் காலத்துக்கு முற்பட்டவைதான். ஏனெனில், இஸ்லாத்தின் தோற்றமே காலத்தால் மிகவும் பிற்பட்டது. ஆனால், மசூதி இருக்கும் ஓரிடத்தில்தான் தங்களது புராதன ஆலயம் இருந்தது என்று நிறுவுவதற்கு, அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள்தான் பல விபரீதங்களை உள்ளடக்கியதாக இருந்தது. ஆதாரங்களில் தெளிவில்லாதது அவற்றுள் முதலானது. அணுகுமுறையில் முரட்டுத்தனம் மிகுந்திருந்தது அடுத்தது. பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னையை, ராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்க நினைத்தது மூன்றாவது.

புராண, சரித்திர காலங்கள் தொடங்கி மிகச் சமீபத்தில் 1967-ம் ஆண்டு வரை இந்த மசூதி வளாகம், முஸ்லிம்களின் வசம்தான் இருந்திருக்கிறது. பாலஸ்தீன் யூதர்களை மொத்தமாக விரட்டியடிக்கும் தமது அரசியல் நோக்கத்துக்கு வலு சேர்ப்பதற்காகவே, இஸ்ரேலிய அரசு அல் அக்ஸா மசூதி விஷயத்தைக் கையில் எடுத்து, அங்கேதான் சாலமன் தேவாலயம் இருந்தது என்று தொடர்ந்து பிரசாரம் செய்து, மக்களின் மத உணர்வுகளைத் தூண்டிவிட ஆரம்பித்தது.

பிரச்னையைத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் வசம் அளித்துவிட்டு, 'நீங்கள் எங்கே வேண்டுமானாலும் தோண்டிப் பாருங்கள்' என்று அனுமதியும் அளித்தது.

ஒரு மசூதி இருக்கிறது. மக்கள் அங்கே தினசரி தொழுதுகொண்டிருக்கிறார்கள். உள்ளூர் மக்கள் தவிர உலகெங்கிலுமிருந்து ஜெருசலேத்துக்கு யாத்திரை வரும் முஸ்லிம்கள் அத்தனை பேரும் அந்த மசூதிக்கு வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். (முஸ்லிம் உலகின் மூன்றாவது மிக முக்கியமான வழிபாட்டுத்தலம் அது.) இறைத்தூதருடன் தொடர்புடைய ஒரு நினைவுத் தலம் அது. அப்படிப்பட்ட இடத்தில் தோண்டிப் பார்க்க அனுமதி அளிப்பது என்றால், என்ன அர்த்தம்?

1967-ம் ஆண்டு யுத்தத்தின்போது ஜெருசலேம் நகரை முழுமையாக யூதர்கள் கைப்பற்றியபிறகுதான், இதெல்லாம் ஆரம்பமானது. யுத்தத்தில் வெற்றி கண்ட மறுநாளே, இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. முதலில் பள்ளிவாசலின் மேற்குப் பகுதியில் பதினான்கு மீட்டர் நீள, ஆழத்துக்குத் தோண்டினார்கள். அடுத்த ஒன்றரை ஆண்டு கால இடைவெளியில், அந்த இடத்தில் சுமார் எண்பது மீட்டர் நீளத்துக்குத் தோண்டி ஓர் அகழி போல் ஆக்கிவிட்டார்கள். பள்ளிவாசலின் மேற்குப் பகுதி வழியே, யாருமே உள்ளே போகமுடியாதவாறு ஆகிவிட்டது.

யுத்தத்தில் அரேபியர்கள் தோற்றிருந்ததால், ஜெருசலேம் நகரில் இருந்த முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அப்புறப்படுத்தப்பட்டிருந்தார்கள். ஆகவே, அல் அக்ஸாவில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தாமதமாகத்தான் தெரியவந்தது. உள்ளம் பதைத்தாலும் ஒன்றும் செய்யமுடியாத நிலையில், அவர்கள் இருந்தார்கள்.

1970-ம் ஆண்டு இந்த அகழ்வாய்வுப் பணியின் இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பமாயின. இம்முறை பள்ளிவாசலின் தென்மேற்கு மூலையிலிருந்து தோண்ட ஆரம்பித்தார்கள். அங்கிருந்து மேற்குத் திசை வாசல் வரை தோண்டிக்கொண்டே போனார்கள். இப்படி அகழ்வாய்ந்தபோது, மிகப் புராதனமான சில கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. (அடக்கஸ்தலம் என்பார்கள்.) அவை, முகம்மது நபியின் தோழர்களாக விளங்கிய சிலரின் கல்லறைகள் என்பது, முஸ்லிம்களின் நம்பிக்கை. இதற்கு ஆதாரமாக முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்படுவது இதுதான்:

யூதர்களின் அகழ்வாராய்ச்சியில் தட்டுப்பட்ட ஒரு குறிப்பிட்ட கல்லறையில், அது முகம்மது நபியின் தோழர்களுள் ஒருவரான உபாதா இப்னு அல் ஸாமித் என்பவருடையது என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் இருந்திருக்கிறது! இதே போல இன்னொரு கல்லறையில், ஷத்தாத் இப்னு அவ்ஸ் என்கிற வேறொரு நபித்தோழரின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதும், கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கல்லறைகளைக் கண்டுபிடித்ததோடு, யூதர்கள் நிறுத்தவில்லை. அதையும் உடைத்துப் பார்த்ததில் உள்ளே உடல்களையும் கண்டிருக்கிறார்கள். ஆனால், விஷயம் பெரிதாகிவிடக்கூடாது என்று, அதைச் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள். தோண்டப்பட்ட அந்த இடங்களில் யாரும் வந்து பார்த்துவிடாமலிருக்க, அந்தப் பகுதியைச் சுற்றிலும், மேலும் பதின்மூன்று மீட்டர் சுற்றளவுக்கு மிகப்பெரிய அகழியைத் தோண்டிவிட்டார்கள்.

இந்தச் சம்பவமெல்லாம், எழுபதுகளின் தொடக்கத்தில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. துல்லியமான ஆதாரங்கள் ஏதும், அப்போது வெளியாகவில்லை. ஆனால், பள்ளிவாசலின் நுழைவாயிலுக்கு அருகே தோண்ட ஆரம்பித்து, சுமார் பத்து மீட்டர் ஆழத்துக்கு மிகப்பெரிய பள்ளம் உருவானபோது, விஷயம் வெளியே வந்துவிட்டது. இது நடந்தது 1976-ம் ஆண்டில்.

அந்த இடத்தின் அடிவாரம் வரை யூதர்கள் தோண்டிக்கொண்டே போக, எப்படியும் மசூதி இடிந்து விழத்தான் போகிறது என்று செய்தி பரவிவிட்டது. துடித்து எழுந்தார்கள், முஸ்லிம்கள். உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கி, பைத்துல் முகத்தஸ் வளாகமே வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமானது; அங்கே யூத ஆராய்ச்சியாளர்கள் தோண்டுவது சட்டவிரோதம் என்று ஆதாரங்களைக் காட்டி, படாதபாடுபட்டு ஆய்வை நிறுத்தினார்கள்.

நீதிமன்றத்தில் ஆண்டுக்கணக்கில் வழக்கு இழுத்தடித்தது. வழக்கு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, 1981-ம் ஆண்டு யூதர்கள் மீண்டும் பள்ளிவாசலைத் தோண்டத் தொடங்கினார்கள். இம்முறை அவர்களுக்கு, ஒரு சுரங்கப்பாதை அங்கே இருந்தது தெரியவந்தது.

கி.பி. 636-ம் ஆண்டு கலீஃபா உமர் காலத்தில் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசலில், எதற்காக ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இப்போது இல்லை. ஒரு சாரார் கருத்துப்படி, உமர் இந்தப் பள்ளிவாசலைக் கட்டிய காலத்தில் சுரங்கம் எதையும் அமைக்கவில்லை. மாறாக, கி.பி 690 - 691 ஆண்டுக் காலகட்டத்தில், அப்துல் மாலிக் இப்னு ஹிஷாம் என்பவர் அல் அக்ஸா மசூதியை விரிவுபடுத்தி, மேலும் அழகூட்டி, செப்பனிட்டபோதுதான் பள்ளிவாசலின் மேற்குப் பகுதியில், இந்தச் சுரங்கப்பாதையை அமைத்தார் என்று சொல்கிறார்கள்.

கி.பி. 1099-ம் ஆண்டு ஜெருசலேம் நகரைக் கிறிஸ்துவர்கள் கைப்பற்றியபோது பள்ளிவாசலையும் கைப்பற்றி, சுரங்கத்தை அடைத்துவிட்டார்கள். பின்னால் சார்லஸ் வார்ன் என்கிற ஒரு பிரிட்டிஷ் அகழ்வாய்வாளர், இந்த மூடிய சுரங்கத்தைக் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. (இது நடந்தது கி.பி.1880-ம் ஆண்டு.) பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் மண்மூடிக் கிடந்த இந்தச் சுரங்கம்தான், 81-ம் ஆண்டு யூதர்களின் அகழ்வாய்வின்போது அகப்பட்டது.

செய்தி, மீடியாவுக்குப் போய்விட்டபோது, யூதர்கள் தரப்பில் 'இந்தச் சுரங்கப்பாதை சாலமன் ஆலயத்தின் ஒரு பகுதி. ஆலயக் கட்டுமானத்திலேயே சுரங்கமும் இருந்தது' என்று சொல்லப்பட்டது.

ஆனால், சாலமன் தேவாலயம் குறித்த வரலாற்றுத் தகவல்களைத் தரும் எந்த ஒரு ஆவணமும் கோயில் எழுப்பப்பட்டபோது, சுரங்கம் இருந்தது பற்றிய குறிப்பு எதையும் தரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், யூதர்களின் அகழ்வாய்வின் விளைவாக, அல் அக்ஸா மசூதி இருந்த வளாகம் மிகப்பெரிய அகழி போலானதுதான் மிச்சமே தவிர, தேவாலயம் ஏதும் அங்கு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

இது மிகவும் இயல்பானது. சாலமன் ஆலயம் கட்டப்பட்டு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், நவீன காலத்தில் ஆதாரம் தேடி, இருக்கிற மசூதியை இடித்துப் பார்ப்பது என்பது வீண் வேலை. இது யூதர்களுக்குத் தெரியாததில்லை. ஆனால், அந்த ஓர் உடைந்த சுவர் மீது, அவர்களுக்கு உள்ள நம்பிக்கைதான் இக்காரியத்தை எவ்வித மன உறுத்தலும் இல்லாமல் அவர்களைச் செய்யவைத்தது. தவிரவும், அல் அக்ஸா மசூதியை முன்வைத்து முஸ்லிம்கள் ஜெருசலேம் நகரைச் சொந்தம் கொண்டாடிவிடக்கூடாது என்கிற எண்ணமும் இதற்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று.

இப்படித் தோண்டித்தோண்டி மண் எடுத்ததின் விளைவாக, இன்றைக்கு அல் அக்ஸா பள்ளிவாசலின் அடித்தளம் மிக அபாயகரமான நிலையில் காணக்கிடைக்கிறது. பள்ளிவாசலின் அஸ்திவாரங்கள் வெளியே தெரிகின்றன. மண் வாசனையே இல்லாமல் வெறும் கற்களின் மீது நிற்கிறது கட்டடம். ஒரு சிறு நில நடுக்கம் ஏற்பட்டால் கூட, மசூதி இடிந்து விழுந்துவிடும் அபாயம்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 11 செப்டம்பர், 2005
Source : http://nilamellam.blogspot.com/2005/09/84.htmlஅல் அக்ஸா மசூதியின் பின்னணி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails