Saturday, June 19, 2010

தாம்பத்திய உறவு குறித்த ஐயங்கள்!

ஐயம்:
அஸ்ஸலாமு அலைக்கும்

ஆசிரியர் அறிய,

திருமணம் மற்றும் உடல் உறவு சம்மந்தமான இஸ்லாமிய அடிப்படையிலான பூரண விளக்கங்களை எதிர்பார்க்கிறேன். ஏனெனில் உடல் உறவு சம்மந்தமான நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறேன். அதனால் உங்களின் பதிலைக் கூடிய விரைவில் எதிர்பார்க்கிறேன்.

என்னைத் தப்பாக நினைக்க வேண்டாம். எனக்கு விரைவில் கல்யாணம் ஏற்பாடாகி இருக்கிறது. சில சந்தேகங்கள். அவற்றை நிவர்த்தி செய்து கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். அதனால்தான் தொடர்பு கொண்டேன். தவறாக நினைக்க வேண்டாம். இது பலருக்கு உள்ள சந்தேகம். ஆனால் கேட்க வெட்கத்தில் இருக்கிறார்கள்.

எனது சந்தேகங்கள்:

1.உடல் உறவின் போது தடுக்கப்பட்டவை/ஆகுமாக்கப்பட்டவை பற்றிய விளக்கம்
2.மாத விடாய் காலத்தில் உடல் உறவு தடுக்கப்பட்டது. ஆனால் அந்த காலத்தில் மனைவியுடன் ஒன்றாக உறங்குவது - அணைத்து முத்தமிடுவது கூடுமா?
3.பெண்களின் பின் துவாரத்தால் புணர்ச்சியில் ஈடுபடுவது கூடுமா?
4.பெண்கள் மார்பில் பால் குடிக்கலாமா?
5.இஸ்லாம் அனுமதித்த குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் ஏதும் உண்டா?
6.உடல் உறவுக்கு முன்னர் ஏதும் துஆ இருக்கிறதா?

தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். கூடிய விரைவில் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். எனது கேள்விகளை இங்கே பிரசுரிக்க முடியவில்லை என்றால் பதிலை எனது ஈமெயிலுக்கு எதிர்பார்க்கிறேன். இந்த மாதம் திருமணம் ஏற்பாடாகி இருப்பதால் உங்கள் பதிலை விரைவாக எதிர்பார்க்கிறேன்.

வஸ்ஸலாம் - (மின்மடல் மூலம் ஒரு வாசகர்)
தெளிவு:
வ அலைக்குமுஸ்ஸலாம்.

ஆண், பெண் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் மிக முக்கியமான நிகழ்வாகும். திருமணத்தின் நோக்கம் சந்ததிகளைப் பெறுவது என்பதாக அல்குர்ஆன் 004:001 வசனம் குறிப்பிடுகிறது. இஸ்லாம் இல்லறத்தை அனுமதித்து, துறவறத்தைத் தடை செய்துள்ளது.

''இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா)

தகாத வழியில் சென்று விடாமல் கற்பைக் காத்துக் கொள்ளும் கேடயம் என்பது திருமணத்தின் மற்றொரு நோக்கமாகும். திருமணம் இப்படித்தான் நடத்த வேண்டும் என சில ஒழுங்குகளை இஸ்லாம் வகுத்துள்ளது.
இஸ்லாமியத் திருமணத்தில் இல்லாதவை: இஸ்லாத்தில் கட்டாயத் திருமணம் இல்லை!

இஸ்லாத்தில் வரதட்சணைத் திருமணம் இல்லை!

''திருமணம் செய்வது எனது வழிமுறையாகும் அதை யார் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல'' என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (முஸ்லிம்)

இஸ்லாத்தில் ஆடம்பரத் திருமணம் இல்லை!

இன்று திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடத்துப்படுகிறது. பிறர் மெச்சுவதற்காகவும், செல்வங்களை ஊருக்குக் காண்பிப்பதற்காகவும் திருமணம் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

''குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரக்கத் நிறைந்ததாகும்'' என்பது நபிமொழி (அஹ்மத்)

ஆடம்பரமில்லாத திருமணத்தையே இஸ்லாம் விரும்புகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இனி கேட்கப்பட்ட ஐயங்களுக்கான விளக்கங்களைப் பார்ப்போம்.
(1-அ & 3) தாம்பத்திய உறவில் தடுக்கப்பட்டவை:
மாதவிலக்குக் காலத்தில் மனைவியுடன் உடல் உறவு கொள்ளக்கூடாது (பார்க்க - அல்குர்ஆன், 002:222)

நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ''மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது, கணவன் அவளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ''தாம்பத்திய உறவைத் தவிர மற்றவை அனைத்தும் (அனுமதிக்கப்பட்டுள்ளன)'' என்று பதிலளித்தார்கள். (தாரிமீ)

மனைவியின் மலப்பாதையில் உறவு கொள்ளக்கூடாது. மலப்பாதையில் உறவு கொள்வது ஓரினப் புணர்ச்சிக்கு ஒப்பானதால் அதைக் கண்டிப்பாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இவை இரண்டைத் தவிர இல்லறத்தில் ஈடுபடும் முறை பற்றி வேறு எந்தத் தடையும் இல்லை!
(1-ஆ) தாம்பத்திய உறவில் ஆகுமாக்கப் பட்டவை:
உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாவர். எனவே, நீங்கள் விரும்பியவாறு உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள். உங்கள் ஆத்மாக்களுக்காக (நற்செயல்களின் பலனை) அனுப்புவதில் முந்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன், 002:223)

இல்லறத்தில் ஈடுபடும் தம்பதியருக்கு (1-அ)வில் தடுக்கப்பட்டவை தவிர்த்து முழுச் சுதந்திரத்தை இறைமறை வழங்குகிறது. இல்லறம் என்பது நல்ல சந்ததிகளுக்கான விளைநிலம் என்பதை மனதில் கொண்டால் போதுமானது.

(2) மாதவிலக்குக் காலத்தில் மனைவியை அணைத்துக் கொள்ள, முத்தமிட அனுமதி உள்ளது; உடலுறவு மட்டும்தான் விலக்கப் பட்டுள்ளது.

''எங்களில் ஒருவருக்கு மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும்போது கீழாடைக் கட்டிக் கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் (ஆடை கட்டிக் கொண்ட) பின்னர் அணைத்துக்கொள்வார்கள்'' அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா(ரலி) அன்னை மைமூனா (ரலி) நூல்கள், புகாரி, முஸ்லிம்

(4) மனைவியின் மார்பைச் சுவைப்பது குறித்துத் தடையேதும் இருப்பதாகத் தெரியவில்லை; என்றாலும் பச்சிளம் குழந்தைக்குப் பாலுட்டும் தாயாக இருப்பின் அந்தப் பாலை உங்கள் மனைவியிடம் அல்லாஹ் ஊற வைப்பது உங்களின் குழந்தைக்காக என்பதை உணர்ந்து கொள்ளவும்.
(5) குடும்பக் கட்டுப்பாடு:
தற்காலிகக் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுவதை இஸ்லாம் அனுதித்துள்ளது. நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மனைவியின் கருப்பை வலுவிழந்த நிலையில் இருந்து குழந்தை பேற்றைப் பெற்றால் அதனால் ஆபத்து ஏற்படும் என்றிருந்தால் நிரந்தரமாகக் குழந்தைப் பிறப்பைத் தடை செய்து கொள்ளலாம். ''எந்த ஓர் ஆன்மாவும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திக்கப்படமாட்டாது'' (அல்குர்ஆன், 002:233. 023:062)

(6) உடலுறவுக்கு முன் செய்யும் பிரார்த்தனை:

'உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விழையும்போது ''பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மாரஸக்தனா'' என்று பிரார்த்தித்து, அதன் பின் அந்தத் தம்பதியருக்கு குழந்தை விதிக்கப்பட்டால் அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மதீ, அஹ்மத், இப்னுமாஜா)

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் (குழந்தைச்) செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!
பொதுவான அறிவுரைகள்:
ஒரு மூஃமினான ஆண் மூஃமினான தன் மனைவியை வெறுத்துவிட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால் அவன் விரும்பக்கூடிய வேறொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம். நபிமொழி (முஸ்லிம், அஹ்மத்)

நல்ல குணம் கொண்டவர்களே ஈமானில் முழுமை பெற்றவர்கள். உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே! நபிமொழி (அஹ்மத், திர்மிதீ)

பெண்களை நல்ல முறையில் நடத்துங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளவர்கள். அதைத் தவிர அவர்களிடம் உங்களுக்கு வேறு எந்த உரிமையும் இல்லை! நபிமொழி (திர்மதீ, இப்னுமாஜா)

பெண்கள் வளைந்த எலும்பு போன்றவர்கள். அதனை நிமிர்த்த முயன்றால் உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டுவிட்டால் அவளிடம் இன்பம் பெறுவாய். நபிமொழி (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

ஒரு பெண் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள். நபிமொழி (திர்மதீ, இப்னுமாஜா)

ஒரு பெண் தனது கணவனின் வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள்; அவைகளைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவாள். நபிமொழி (புகாரி, முஸ்லிம்)

''உங்களில் ஒருவர் தன் மனைவியுடன் தாம்பத்திய உறவில் கூடிவிட்டு மறுமுறையும் கூட விரும்பினால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும்'' நபிமொழி (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

''நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் உண்ணவோ உறங்கவோ விரும்பினால் தொழுகைக்குச் செய்வது போல் உளூ செய்து கொள்வார்கள்'' (புகாரி, முஸ்லிம்)
பொதுவாகத் தடை செய்யப்பட்டவை:
கணவன் மனைவி தாம்பத்தியம் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் உறவாகும். இருவரும் ஒருவருக்கொருவர் அந்தரங்கங்களை அறிந்து கொண்டு பின்னர் அதை வெளியில் பரப்பித் திரிவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுப் பின்னர் மனைவியின் (தாம்பத்திய அந்தரங்க) இரகசியத்தை (பிறரிடம்) பரப்புகின்ற மனிதனே அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானாவன். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்).

இனிய இல்லறம் காணவிருக்கும் உங்களுக்கு எங்களது உளங்கனிந்த நபிவழி வாழ்த்துக்கள்!

நபி (ஸல்) அவர்கள் திருமணத்தில் வாழ்த்தும்போது ''பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கய்ர்'' என்று கூறுவார்கள். (திர்மிதீ, அபூதாவூத்)

பொருள்: ''அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக! நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக''

மண வாழ்வில் இணையும் கணவன், மனைவி இருவருக்கும் இஸ்லாம் அழகிய உபதேசங்களை வழங்கியுள்ளது. அதில் சிலவற்றை இங்குத் தந்திருக்கிறோம். கணவன், மனைவி ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, பிறரின் மனம் நோகாமல் நடந்து கொண்டால் இல்லறம் இனிதாகும். 

(இறைவன் மிக்க அறிந்தவன்)

Source : http://www.satyamargam.com/860தாம்பத்திய உறவு குறித்த ஐயங்கள்!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails