Thursday, June 10, 2010

விவாகரத்தை எளிமையாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 
விவாகரத்தை எளிமையாக்கும் வகையில் இந்து திருமணச் சட்டம் 1955 மற்றும் சிறப்பு திருமணச் சட்டம் 1954 ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கான திருமணச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2010-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் தம்பதிகளிடையே மீண்டும் சேரமுடியாத அளவிற்கு ஏற்பட்டுள்ள பிரிவை விவாகரத்திற்கான காரணமாக கருத வகை செய்யப்பட்டுள்ளது.


கணவன் அல்லது மனைவி கொடுமைப்படுத்துவதாக குற்றம்சாட்டி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகும்போது எதிர் தரப்பு நபர் நீதிமன்றத்தில் ஆஜராகமல் விவகாரத்து வழக்கை நீட்டிக்க செய்யும் நிலையில் சம்பந்தப்பட்ட நபரை பாதுகாக்க இந்த சட்ட திருத்தம் உதவும்.

தற்போது பல்வேறு காரணங்களால் திருமணம் செல்லாது என அறிவித்து விவாகரத்து செய்வதற்கான வசதி இந்து திருமணச் சட்டம் பிரிவு 13-ல் இடம் பெற்றுள்ளது. கொடுமைப்படுத்துதல், தனிமைப்படுத்துதல், வேறு ஒரு மதத்திற்கு மாறுதல், மன வருத்தம் ஏற்படுத்துதல், தொழுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள், பால்வினை நோய்கள் அல்லது தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போகுதல் போன்ற காரணங்களால் விவாகரத்திற்கு அனுமதி அளிக்க இந்த சட்டப் பிரிவு வகை செய்கிறது. இதே போன்ற காரணங்களால் விவாகரத்து அளிக்கும் வகை செய்யும் பிரிவு சிறப்பு திருமணச் சட்டம் 1954-லும் இடம் பெற்றுள்ளது.

எனினும் இந்து திருமணச் சட்டம் பிரிவு 13 பி மற்றும் சிறப்பு திருமணச் சட்டம் பிரிவு 28 ஆகியவை விவாகரத்து கோரும் மனு தாக்கல் செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குள்ளாக வாபஸ் பெறப்படாமல் இருந்தாலோ அல்லது 18 மாதங்களுக்கு பிறகோ பரஸ்பர ஒப்புதலுடன் நீதிமன்றம்  விவாகரத்து அளிக்க வகை செய்கிறது. எனினும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்ய நீதிமன்றத்தை அணுகி சம்பந்தப்பட்ட யாரேனும் ஒருவர் நீதிமன்றத்திற்கு வராமல் இருந்தால் இந்த வழக்கு முடிவுக்கு வராமல் இருக்கும் நிலை உள்ளது. இதனால் விவாகரத்து கோருபவர் கடும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

விவாகரத்து தொடர்பாக இத்தகைய திருத்தம் தேவை என்று சட்ட ஆணையம் தனது 217-வது அறிக்கையிலும் இரண்டு வழக்குகள் உச்சநீதிமன்றமும் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails