Saturday, June 5, 2010

குடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும்

 மனித இனம் நிலைபெற வேண்டுமென்பது திருமண அமைப்பின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும். இனப்பெருக்கத்தின் மூலமே மனித இனம் நிலைக்க முடியும். இஸ்லாம் இனப்பெருக்கத்தை விரும்பி உற்சாகப்படுத்துகின்றது. ஆயினும், ஏற்புடைய நியாயமான காரணங்களுக்காகக் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு அனுமதி வழங்குகின்றது.
குடும்பக் கட்டுப்பாட்டை அனுமதிக்கின்ற நியானமான காரணங்கள்:

1. தாயின் உயிருக்கோ அல்லது உடல் நலனுக்கோ ஆபத்து ஏற்படும் என அனுபவத்தின் வாயிலாகவோ அல்லது நம்பத்தகுந்த ஒரு மருத்துவர் மூலமோ அறிந்தால், குடும்பக்கட்டுபாட்டிற்கு அனுமதியுண்டு. இக்கருத்துக்கு ஆதாரங்களாகக் கீழ்வரும் திருவசனங்களை அறிஞர்கள் குறிப்பிடுவர் அவையாவன:

”உங்களை நீங்கள் அழிவுக்கு உட்படுத்த வேண்டாம்’ (2:195)

‘மேலும் உங்களை நீங்கள் கொலை செய்து கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது அதிகம் அன்பு கொண்டவனாய் இருக்கிறான்.’ (4:29)

2. லௌகீக ரீதியில் அமைந்த சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டிவரும். அது பின்னர் மார்க்க விவகாரங்களையும் பாதிக்கும். தனது குழந்தைகளுக்காக வேண்டி ஹராத்தையோ அல்லது பாவத்தையோ செய்ய வேண்யேற்படுமென்று ஒருவர் அஞ்சும் நிலையிலும் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு அனுமதியுண்டு.

‘அல்லாஹ் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்த விரும்புவதில்லை.’ (5:6)

3. தனது குழந்தைகளின் உடல்நலம் பாதிப்புறுமென்றோ அல்லது அவர்களை முறையாக வளர்ப்பதில் பிரச்சினைகள் தோன்றுமென்றோ அஞ்சுவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பினும் குறித்த செயற்பாட்டிற்கு அனுமதியுண்டு. உஸாமா (ரலி) அறிவிகின்றார்: ‘ஒருமுறை ஒருவர் ரஸுல் (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! நான் எனது மனைவியிடத்தில் அஸ்ல் செய்கின்றேன்’ என்றார். ‘அதற்கு நபிகளார் ‘ஏன் அப்படிச் செய்கின்றீர்?’ என்று வினவ அதற்கு அம்மனிதர் ‘நான் எனது குழந்தையையிட்டு அல்லது குழந்தைகளையிட்டு அஞ்சுகின்றேன்’ என்றார். அதற்கு நபிகளார் ‘அது (அஸ்ல்) தீங்கிழைப்பதாக இருப்பின் பாரசீகத்தையும், ரோமாபுரியையும் பாதித்திருக்கும்’ (அதாவது இத்தகைய தனிமனிதர்களின் நிலைகள் முழுச் சமூகத்தையும் பாதிக்காது. அவ்வாறு இருப்பின் அன்றைய வல்லரசுகளாகத் திகழ்ந்த ரோம, பாரசீகத்தைப் பாதித்திருக்கும் என்பதாகும்.) என்றார்கள்.’

4. பால்குடிக் குழந்தையின் நிலையைக் கருத்திற்கொண்டு, தாய் கருத்தரிப்பதனால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கருதுவதும் குடும்பக் கட்டுப்பாட்டை நியாயப்படுத்துகின்ற ஒரு காரணமாகும்.

பால் குடிக் குழந்தை இருக்கும் நிலையில் தன் மனைவியுடன் (கருத்தரிக்கும் நோக்கோடு) உடலுறவு கொள்வதனை நபியவர்கள் இரகசியக் கொலை என வர்ணித்துள்ளனர். (ஆயினும், இதனை ஷரீஅத் ஹராம் என முற்றாகத் தடை செய்யவில்லை என்பதனைக் கவனத்திற்கொள்க.)

மேலே குறிப்பிட்ட நியாயமான காரணங்களுக்காகக் குடும்பக் கட்டுப்பாடு செய்வதனை இஸ்லாம் அனுமதித்திருப்பினும், கருச்சிதைவை அது அனுமதிப்பதில்லை. அக்கருவானது ஹராமான முறையில் தரித்திருப்பினும் சரியே, ஒரு கருவை அதற்கு ரூஹ் ஊதப்பட்டதன் பின்னர் சிதைப்பது ஹராமான மாபெரும் குற்றமாகும்.

ஆயினும், குறித்த கருவானது சிதைக்கப்படாது தொடர்ந்து தாயின் வயிற்றில் இருப்பது அவளின் உயிருக்கு ஆபத்தையேற்படுத்தும் என்பது உறுதியாகத் தெரியவரின் இரு தீங்குகளில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டியிருப்பின், அவற்றில் குறைந்ததைத் தெரிவு செய்தல் வேண்டும் எனும் சட்டவிதியின் அடிப்படையில் கருவைச் சிதைப்பதைத் தவிர வேறு வழியே இல்லாத போது அதற்கு அனுமதியுண்டு. ஏனெனில், கருவிலிருக்கும் சிசுவுக்காக வாழுகின்ற தாயை இழக்க முடியாது. அது அறிவுடைமையும் ஆகாது. மேலும், சிசுவானது உருக்குலைந்ததாக இருந்து, பிறந்து வாழும் பாக்கியத்தைப் பெறினும், பெரும் அவஸ்தையுடனேயே வாழும் நிலைக்கு உட்படும் என்பது விஞ்ஞான பூர்வமான உறுதியாகக் கண்டறிய முடியும் நிலையிலும் கருவைச் சிதைக்க ஷரீஅத்தில் இடமுண்டு.
நன்றி :Source : http://ipcblogger.net/mjabir/?p=325குடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails