Sunday, June 13, 2010

எது என் ஊர்

அன்புடன் புகாரி
------------------
கருவாய்ப் பிறப்பு தந்து
உருவாய் வளர்த்தெடுத்த
தாயின் கர்ப்பப்பையோ எனது ஊர்

பிறந்த பொழுது முதல் இறந்து புதைந்தும்கூட
மீண்டும் புக முடியா ஓர் ஊர்
எப்படி என் ஊராகும்

பிறந்ததும் விழுந்தேனே
பிரிதொரு வாசமுள்ள பெரும்பை
அதுவோ என் ஊர்

எனில்
அவ்வூரெனக்குச் சந்தோசச்
சங்கதியாகவல்லவா இருக்க வேண்டும்
காண்பதற்கே அழுதேனே
என்னிரு கண்ணிறுக்கிக் கதறி
எப்படி அது என் ஊராகும்

தாலாட்டிய மடி
பாலூட்டிய முலை
தவழ்ந்த தரை
சுற்றிய வெளி
பணிசெய்த இருக்கை
படுத்துறங்கிய மெத்தை
நட்பு நெஞ்சங்கள்
வெப்ப இதழ்கள்
பரிதவித்த பருவம்
பண்படுத்திய பெண்மை
விழிதட்டும் கனவு
உயிர்நிறைக்கும் நினைவு

எது
எது
எது என் ஊர்?

திட்டுத் திட்டாய் அங்கெங்கும்
துளித் துளியாய் இங்கெங்கும்
பரவிக் கிடந்திருக்கிறேன்
உருண்டு புரண்டு நான் வாழ்ந்து வந்திருக்கிறேன்

ஒவ்வோர் துகளையும்
என் சொந்தமென்றே கொண்ட
இவை யாவும்தான் என் ஊரெனில்
என் ஊரென்று தனியே ஏதுமில்லை
என்பதல்லவா நிஜம்

என் ஊரை என்னைத் தவிர வேறு
யாரறிவார் என்று கர்வம் கொள்ளச் செய்யும்
அந்த என் ஊர் எது

நீண்டு விரிந்து படர்ந்து கிடந்தாலும்
என்னைப் பெற்றவளும் அறியா
என் பிரத்தியேக ரகசியங்களின்
பள்ளத்தாக்குகள் அடர்ந்த அந்த ஊர் எது

எத்தனை முறை கை நழுவிப் போனாலும்
ஓடி ஓடிவந்து என்னிடமே ஒட்டிக்கொண்டுவிடும்
அந்த ஊர்தான் எது

எது என் ஊரென்று
அறிந்துகொண்ட ஆனந்தத்தில்
நிரம்பி வழிகிறது என் ஊர் இன்று!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails