21] இஸ்லாத்தின் வானளாவிய வளர்ச்சியின் அஸ்திவாரம்.
முகம்மது நபியின் மத நல்லிணக்க அறிக்கை வெளியானபோது, அதனை மனப்பூர்வமாக ஏற்பதாகச் சொல்லித்தான் யூதர்களும் தம்மை மதினாவின் இஸ்லாமிய அரசுக்கு உட்பட்ட குடிமக்களாக அறிவித்துக்கொண்டார்கள்.
ஆனால் இஸ்லாமிய சரித்திரத்தில் குறிப்பாக முகம்மது வாழ்ந்த காலத்தில் இஸ்லாத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஏராளமான கலகங்களுக்கும், ஒரு சில யுத்தங்களுக்கும் மறைமுகத் தூண்டுதல்கள் அவர்களிடமிருந்தே வந்ததாகச் சரித்திரம் சொல்கிறது.
யுத்தம் என்று வரும்போது, ஒப்பந்தப்படி யூதர்கள் முஸ்லிம்களை ஆதரித்தாகவேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் யூதர்கள் யுத்தத்தில் பங்கெடுக்காமல் "நடுநிலைமை" காப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
முஸ்லிம்களுக்கு முதலில் யூதர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது புரியவில்லை. பிறகு, அவர்கள் முகம்மதை ஒரு இறைத்தூதராக மனப்பூர்வமாக ஏற்கவில்லை; ஒப்புக்குத்தான் அவரது அறிக்கையை ஏற்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்கிற விஷயம் தெரியவந்தபோது, உடனடியாக யூத உறவைக் கத்திரித்துவிட விரும்பினார்கள்.
யூத குலத்திலேயே பிறந்து, யூதர்களின் மரபு மீறல்களை மட்டுமே சுட்டிக்காட்டி கண்டித்த முந்தைய இறைத்தூதரான இயேசுவையே ஏற்காதவர்கள் அவர்கள். முகம்மதை எப்படி மனப்பூர்வமாக ஏற்பார்கள்?
தவிரவும் யூதர்களுக்குத் தம்மைப்பற்றிய உயர்வு மனப்பான்மை எப்போதும் உண்டு. யூத இனத்தைக் காட்டிலும் சிறந்த இனம் வேறொன்று இல்லை
என்பதில் அவர்களுக்கு இரண்டாவது அபிப்பிராயமே கிடையாது.
ஆகவே, ஓர் அரேபியரை இறைத்தூதராகவோ, அரபு மொழியில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த குர்ஆனை ஒரு வேதமாகவோ ஏற்பதில் அவர்களுக்கு நிறையச் சங்கடங்கள் இருந்தன.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமான காரணம், அச்சம். இஸ்லாத்தின் வீச்சு குறித்த அச்சம்.
பெரும்பாலான அரேபிய சமூகமும், ஏராளமான கிறிஸ்துவர்களும் "உமக்கே நாம் ஆட்செய்தோம்" என்று குழுக் குழுவாக இஸ்லாத்தில் இணைந்து கொண்டிருந்ததால் விளைந்த அச்சம்.
ஏற்கெனவே கிறிஸ்துவத்துக்கு மாறிய யூதர்களையே மீட்க இயலாத நிலையில், மிச்சமிருக்கும் யூத சமூகத்தினர் எங்கே இஸ்லாத்தில் இணைந்துவிடுவார்களோ என்கிற கலவரம்.
அப்போது பெரும்பாலும் பிரசாரம் மூலம்தான் இஸ்லாம் பரவிக் கொண்டிருந்தது.
புனிதப்பயணமாக உலகெங்கிலுமிருந்து சவூதி அரேபியாவுக்கு வரும் மக்களிடையே முஸ்லிம்கள் பிரசங்கம் நிகழ்த்துவார்கள். குறைஷியரின் வன்முறைகளுக்கு இடையிலும் பிரசாரப் பேச்சுகள் நிற்காது. பேச்சு என்பது பெரும்பாலும் பேச்சாக இருக்காது.
மாறாக, குர்ஆனிலிருந்து சில சூராக்களை ஓதிக் காட்டுவார்கள். மனிதர்கள் ஆயிரம் எடுத்துச் சொன்னாலும் இறைவனின் நேரடிச் சொற்களின் வலிமைக்கு நிகராகாது என்பதை முகம்மதின் தோழர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆகவே, தமது கருத்துக்களை முன்வைக்காமல், குர்ஆனிலிருந்து முக்கியமான பகுதிகளை ஓதிக்காட்டுவார்கள்.
அதனால் கவரப்பட்டு விவரம் கேட்பவர்களிடம் மட்டுமே இஸ்லாம் குறித்து விளக்கம் அளிப்பார்கள். இந்த இரு கட்டங்களைத் தாண்டுபவர்கள் அவசியம் முகம்மது நபியைச் சந்திக்க விருப்பம் தெரிவிப்பார்கள்.
அவரை ஒருமுறை சந்தித்துவிட்ட யாரும் இஸ்லாத்தில் இணையாதோராக இருந்ததாகச் சரித்திரமில்லை!படித்தவர்கள் அதிகமில்லாத அந்தக் காலத்தில், ஓர் இனக்குழுத்தலைவர் இஸ்லாத்தைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறார் என்றால், அந்த இனக்குழுவே ஏற்றுக்கொண்டுவிடுவதில் பிரச்னை ஏதுமிராது.
அதாவது, தலைவர் ஒப்புக்கொண்ட ஒரு விஷயத்தைத் தம் சமூகத்தின் மக்களுக்குத் தெரிவித்துவிட்டால் போதும். கேள்விகளற்று ஒட்டுமொத்த சமுதாயமும் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடும் வழக்கம்
இருந்திருக்கிறது.
மிகக்குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான அரேபியர்கள் இஸ்லாத்தில் இணைந்ததற்கு இந்த வழக்கம் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது.
இதனாலெல்லாம்தான் யூதர்கள் கலங்கிப்போனார்கள். பரவல், பிரசாரம் போன்ற எதுவுமே யூத மதத்தில் கிடையாது. இதனை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.
இருக்கும் யூதர்களையாவது கட்டிக்காக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்த யூத மதகுருமார்களின் சபை, இந்தக் காரணத்தினால்தான் முகம்மது நபியிடம் ஒப்புக்கொண்டபடி முஸ்லிம்களுடன் நல்லுறவு பேணாமல், விலகி விலகிப் போகத் தொடங்கியது.
கி.பி. 630-ல் மிகப்பெரிய ராணுவபலம் பொருந்திய ஒரு குட்டி ராஜ்ஜியமாக இருந்தது மதினா. அதன் முடிசூடாத சக்ரவர்த்தியாக முகம்மதுவே இருந்தார். பத்தாண்டுகால வெளியேற்றத்துக்குப் பிறகு அந்த ஆண்டுதான் மெக்காவை அடைந்தே தீருவது என்கிற உறுதி கொண்டு படையுடன் புறப்பட்டார்.
எந்த முகம்மதுவையும் அவரது தோழர்களையும் ஒழித்துக்கட்டியே தீருவது என்று கொலைவெறி கொண்டு திரிந்தார்களோ, அந்த குறைஷிகளுக்கு அப்போது முகம்மதுவின் படையினரை எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லை.
காரணம், முகம்மதுவின் பின்னால் அணிவகுத்திருந்த அந்தப் படை, பத்ருப்போரில் பங்குபெற்றதைப் போல முந்நூற்றுப்
பதின்மூன்று பேர் கொண்ட படை அல்ல.
மாறாக, கண்ணுக்கெட்டும் தொலைவு வரை அணிவகுத்திருந்தனர் முஸ்லிம் ராணுவ வீரர்கள். அவர்களது ஒட்டகப்பிரிவு ஒரு சாலையை
அடைத்து நிறைத்திருந்தது. யானைகள் மறுபுறம் அணிவகுத்திருந்தன. வீரர்களின் வாள்களில் நட்சத்திரங்கள் மின்னின. வெற்றியை முன்கூட்டியே தீர்மானித்தவர்களைப் போல் அவர்களின் முகங்களில் அமைதியும் உறுதியும் ததும்பின.முன்னதாக முகம்மது தன் வீரர்களிடம் சொல்லியிருந்தார்.
"இந்த யுத்தம் மனிதர்கள் தம் பகைவர்களுடன் நிகழ்த்தும்
சராசரி யுத்தமல்ல. இறைவனுக்காக நிகழ்த்தப்படும் யுத்தம். நமது தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு இதில் இடமில்லை. மெக்காவில் உள்ள க"அபா இறைவனின் வீடு. அதனுள்ளே செல்லவும் தொழுகை செய்யவும் எல்லாரைப் போலவும் முஸ்லிம்களுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமைக்காகத்தான் இப்படி அணிவகுத்திருக்கிறோம்.
"ஆனால் முகம்மது உள்பட யாருமே அதை எதிர்பார்க்கவில்லை. போரிட அச்சம் கொண்ட குறைஷியரும் அவர்களது அணியிலிருந்த பிற இனக்குழு படையினரும் தமது ஆயுதங்களை வீசிவிட்டு க"அபாவுக்குள்ளே இருந்த ஏராளமான தெய்வச் சிலைகளின் பின்னால் உயிருக்குப் பயந்து பதுங்கிக்கொண்டிருந்தார்கள்.
இந்த யுத்தம் மட்டும் நடக்குமானால் மெக்காவில் ஒரு குறைஷியும் உயிருடன் இருக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
காரணம், அணிவகுத்து வந்திருந்த முஸ்லிம்களின் படைபலம் ஒருபுறம் என்றால், மெக்காவிலேயே பொதுமக்களிடையே பரவியிருந்த முகம்மதுவின் புகழ் இன்னொருபுறம்.
உள்ளூர் மக்களின் செல்வாக்கை இழந்திருந்த குறைஷி ராணுவத்தினர் எப்படியும் தம் மக்களே முகம்மதுவுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆகவே, ஏதாவது செய்து உயிர்பிழைத்தால் போதும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது!
ஒரு துளி ரத்தம் சிந்தாமல் அன்றைக்கு மெக்கா முகம்மது நபியின் வசமானது.
போரில் அடைந்த வெற்றியல்ல; அதற்குப் பிறகு அவர் செய்த ஒரு காரியம்தான் மகத்தானது.
வெற்றிக்களிப்புடன் க"அபாவுக்குள் நுழைந்த முஸ்லிம் ராணுவ வீரர்களுக்கு முகம்மது ஓர் உத்தரவை இட்டிருந்தார். யாரையும் கொல்லாதீர்கள். யாரையும் எதிரி என்று எண்ணாதீர்கள். யாரையும் கைது செய்யவும் வேண்டாம்.
உலக சரித்திரத்தில் இன்றுவரை இதற்கு நிகரானதொரு சம்பவம் எந்த தேசத்திலும், எந்தப் போர்க்களத்திலும் நடந்ததில்லை.
தோல்வியுற்ற மெக்கா ராணுவத்தினர் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. கொல்லப்படவில்லை.
மாறாக, "உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் விடுதலை பெற்றீர்கள். மனிதர்களுக்கு இடையில் இதுகாறும் இருந்துவந்த அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் வெறுப்பையும் காலடியில் இட்டு நசுக்கிவிடுவோம்" என்று சொன்னார் முகம்மது நபி.
இதனை அவர் மன்னராகச் சொல்லவில்லை. ஓர் இறைத்தூதராகச் சொன்னார்!
அந்தக் கருணை பீறிட்ட உள்ளம்தான் இஸ்லாத்தின் வானளாவிய வளர்ச்சியின் அஸ்திவாரம்.
அன்றைய தினம் தொடங்கி இஸ்லாம் "பரப்பப்படவேண்டிய" அவசியமே இன்றித் தானாகப் பரவத் தொடங்கியது. மனிதர்களுக்குள் ஜாதி, மத, இன வித்தியாசம் கூடாது என்பதை அடிப்படையாக வைத்து, இறைவனை மட்டுமே தொழத்தக்கவனாகச் சுட்டிக்காட்டிய இஸ்லாத்தின் எளிமை அரேபியர்களைக் கவர்ந்தது.
அலையலையாக வந்து அவர்கள் இஸ்லாத்தில் இணைந்தார்கள். சவூதி அரேபியா, ஈராக், ஈரான், லிபியா, சிரியா, பாலஸ்தீன் என்று ஒவ்வொரு தேசமாக இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டது.
அதுநாள் வரை "நீங்கள் யார்?" என்று கேட்டால் எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், எந்த கோத்திரத்தினர்கள் என்றெல்லாம் பட்டியலிட்டுக்கொண்டிருந்தவர்கள், அதன்பின் "நாங்கள் முஸ்லிம்கள்" என்கிற ஒரு சொல்லில் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளத் தொடங்கினார்கள்.
குர் ஆனை ஓதவேண்டும் என்கிற விருப்பம் காரணமாகவே அரபியில்
எழுதப்படிக்கக் கற்கத் தொடங்கினார்கள். கல்வி பயிலத் தொடங்கியதனாலேயே தமது கலாசாரச் செழுமை புரிந்தவர்களானார்கள்.
கலாசாரபலம் உணர்ந்ததனாலேயே அதனைக் கட்டிக்காக்க வேண்டிய அவசியத்தைப் புரிந்துகொண்டார்கள்.காட்டரபிகள்!
இனி யார் அப்படிச் சொல்லிவிடமுடியும்? இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அரேபியர்கள் தமது நிலப்பரப்பின் புவியியல், அரசியல் சார்ந்த உண்மைகளையும் உணரத் தொடங்கினார்கள்.
எல்லைகளால் பிரிந்திருந்தாலும் முஸ்லிம்கள் என்கிற அடையாளத்தால் தாங்கள் ஒரே மக்கள்தாம் என்பதையும் உணரத் தொடங்கினார்கள். தங்களுடன் இணைந்து வசிக்கும் யூதர்களும் கிறிஸ்துவர்களும் எந்தெந்த வகையில் தம்மிடமிருந்து மாறுபட்டிருக்கிறார்கள் என்பதையும் விழிப்புணர்வுடன் கவனிக்க ஆரம்பித்தார்கள்.
மெக்கா வெற்றிக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து முகம்மது நபி கி.பி. 632-ல் காலமானார். (சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.) அவரது இறப்புக்குப் பிறகு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் முதல் கலீஃபாவாக அதிகாரபூர்வமாகப் பதவியேற்றவர், அபூபக்கர். நபிகளாரின் முக்கியத் தோழர்களுள் ஒருவர் அவர். இரண்டு ஆண்டுகாலம் (கி.பி.632-லிருந்து 634-வரை) ஆட்சியில் இருந்தார்.
உண்மையில் ஒரு சக்ரவர்த்திக்கு நேரெதிரான துறவு மனப்பான்மை கொண்டவர் அவர். பரம சாது. அதைவிடப் பரம எளிமைவாதி. தானென்ற அகங்காரம் ஒருபோதும் தனக்கு வந்துவிடக்கூடாது என்பதனால், கலீஃபாவான பிறகும் ஒரு வயதான மூதாட்டியின் வீட்டுக்குத் தினசரி சென்று வீட்டுவேலைகளைச் செய்து வைத்துவிட்டு, ஊரிலுள்ள அத்தனை
பேரின் ஆடுகளிலும் பால் கறந்து கொடுத்துவிட்டு வந்தவர்.
ஒரு சமயம் முகம்மது நபியிடம், "நீங்கள் இல்லாவிட்டால் நாங்கள் யாரிடம் செல்வது?" என்று சில எளிய மக்கள் கேட்டார்கள். "அபூபக்கரிடம் செல்லுங்கள்" என்பதுதான் அவரது உடனடி பதிலாக இருந்தது.
அந்தளவுக்கு இஸ்லாத்தில் தோய்ந்தவர் அவர். அவரது காலத்தில்தான் முதல்முதலாக குர்ஆன் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டது.
அபூபக்கரின் காலத்துக்குப் பிறகு கலீஃபாவானவர் உமர். இவரை ஏற்கெனவே நாம் சந்தித்திருக்கிறோம். முஸ்லிமாகியிருக்கிறார்கள் என்கிற காரணத்துக்காகத் தன் தங்கையையும் மாப்பிள்ளையையும் கொலை செய்யும் வெறியுடன் சென்று, இறுதியில் குர்ஆனின் வரிகளில் தன்வசமிழந்து, இஸ்லாத்தைத் தழுவியவர்.
இறுதிக் காலம் வரை முகம்மது நபியின் வலக்கரமாக விளங்கியவர்.
இறக்கும் தறுவாயில், அபூபக்கரே தமக்குப்பின் உமர்தான் கலீஃபாவாக வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றதனால், கி.பி. 634-ல் உமர் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் பெருந்தலைவராகப் பொறுப் பேற்றுக்கொண்டார்.
ராஜாங்க ரீதியில் படையெடுப்புகள் மூலம் சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட விரிவான மதப்பிரசாரங்கள், குர் ஆனை உலகறியச் செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முகம்மது நபியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள், அவரது பொன்மொழிகளைத் திரட்டும் பணியை
மேற்கொள்ளுதல் போன்ற பல காரியங்கள் உமரின் காலத்தில்தான் ஆரம்பமாயின.
ஜெருசலேத்தில் கால்வைத்த முதல் இஸ்லாமியச் சக்ரவர்த்தி உமர்தான். அது கி.பி. 638-ம் ஆண்டு நடந்தது.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 3 பெப்ரவரி, 2005
22] கலீஃபா உமர்
ஜெருசலேமில் முதல் முதலில் இஸ்லாமியர் ஆட்சி வந்தது கி.பி. 638-ல். அது கலீஃபா உமரின் காலம். (இரண்டு உமர்கள் இருக்கிறார்கள். இந்த முதலாவது உமர், முகம்மது நபியுடன் நேரடியாகப் பழகியவர். அவரது தலைமைத் தளபதி போல் இருந்தவர். இரண்டாவது உமர், கி.பி. 717-ல் ஆட்சிக்கு வந்தவர். இவரும் கலீஃபாதான்.
ஆனால் முகம்மது நபியின் நேரடித் தோழர்கள் வரிசையில் வந்தவர் அல்லர். மாறாக, "உமையாக்கள்" என்னும் ஆட்சியாளர்களின் வழிவந்தவர்.)அதுவரை யூதர்களாலும் ரோமானியர்களாலும் கிறிஸ்துவர்களாலும் எகிப்திய பைசாந்தியர்களாலும் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது
ஜெருசலேம். பாலஸ்தீன நிலப்பரப்பின் மூத்தகுடிகளான அரேபியர்களுக்கு, இது தங்கள் மண் என்கிற எண்ணமே கிட்டத்தட்ட மறந்துவிடும் அளவுக்குப் பல நூற்றாண்டுக் காலம் தொடர்ந்தது இது. யூதர்கள், கிறிஸ்துவர்கள் எல்லாம் ஆளப்பிறந்தவர்கள், தாங்கள் அடங்கிவாழ விதிக்கப்பட்டவர்கள் என்று மிகவும் இயல்பாகவே அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு மாற்றுச் சிந்தனையாக தாங்களும் ஆளலாம் என்று எண்ணத் தொடங்கியதே உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான்.
ஏனெனில், இஸ்லாமிய மன்னர்களுள் முதல் முதலாக, ஒரு திட்டவட்டமான செயல்திட்டம் வகுத்துக்கொண்டு தேசத்தின் எல்லைகளை விஸ்தரிப்பது என்று புறப்பட்டவர் உமர்தான்.
கைப்பற்றும் தேசங்களையெல்லாம் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுவந்த உமர், மிகவும் ஜாக்கிரதையாக இஸ்லாத்தை அந்நாட்டு மக்களின்மீது திணிக்காமல் இருக்க தம் தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
பிரசாரங்களைக்கூட அரேபியர்களிடம் மேற்கொள்ளலாமே தவிர யூதர்களிடமோ, கிறிஸ்துவர்களிடமோ வேண்டாம் என்று உமர் ஓர் உத்தரவில் தாமே கைப்பட எழுதித் தந்திருப்பதாக ஐரோப்பாவைச் சேர்ந்த சில இஸ்லாமியச் சரித்திர ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனை முகம்மது நபியின் மத நல்லிணக்க அறிக்கையின் தொடர் நடவடிக்கையாக எடுத்துக்கொள்வது இஸ்லாமியர் வழக்கம். ஆனால் ஒரு தெளிவான ராஜதந்திரியின் புத்திசாலித்தனமான நடவடிக்கை என்றே பெரும்பாலான அரசியல் வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.
உண்மையில், உமருக்கு இஸ்லாத்தைப் "பரப்ப" வேண்டிய அவசியம் அத்தனையன்றும் தீவிரமாக இருப்பதாக அப்போது தோன்றவில்லை. தானாகவே அது பரவிக்கொண்டிருந்தது.
ஆகவே, அமைப்பு ரீதியில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை வலுவாக நிறுவுவதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. அடிமைகளாகவே இருந்து பழகிவிட்ட அரேபியர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை உண்டுபண்ணுவதே அவரது முதல் சிந்தனையாக இருந்திருக்கிறது.
இந்தச் செயல்பாடுகள் ஒழுங்காக நடைபெறும் பட்சத்தில், ஒட்டுமொத்த அரேபிய சமூகமும் இஸ்லாத்தில் இணைவது பெரிய விஷயமாக இருக்காது என்றே அவர் கருதினார். ஏனெனில், "மனப்பூர்வமாக அன்றி, உயிருக்குப்
பயந்தோ, தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவோ இஸ்லாத்தை ஏற்பது இறைவனாலேயே அங்கீகரிக்கப்படாது" என்ற பொருளில் வரும் குர் ஆனின் ஒரு வசனத்தின்மீது அவருக்கு அளப்பரிய நம்பிக்கை உண்டு.
இதன் அடிப்படையில்தான், அவர் தாம் கைப்பற்றும் தேசங்களில் உள்ள பிற இனத்தவர் அனைவரிடமும் "உங்கள் உரிமைகள் அவசியம் பாதுகாக்கப்படும்" என்று முதலில் சொல்லிவிடுவது வழக்கம்.
இன்னும் ஒரு படி மேலே சென்று ஒருமுறை, "இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் பிரதிநிதியாக ஓர் ஆளுநரை நான் உங்களுக்கு நியமிக்கிறேன். அவரது பணி உங்கள் தோலை உரிப்பதோ, உங்கள் சொத்தை அபகரிப்பதோ அல்ல. உங்கள் மார்க்கத்தை நீங்கள் பின்பற்றிச் செல்வதற்கு எந்த இடையூறும் இன்றிப் பாதுகாப்பது மட்டுமே.
இதிலிருந்து எந்த ஆளுநராவது தவறுகிறார் என்றால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். உரிய தண்டனை அவருக்கு நிச்சயம் உண்டு" என்று பேசியிருக்கிறார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகுதான் உமர் எகிப்தின் மீது படையெடுத்தார். எகிப்தை அப்போது ஆண்டுகொண்டிருந்தவர்கள், பைசாந்தியர்கள். (பைசாந்தியர்கள் என்பது இனத்தின் அடையாளப்பெயர். மத ரீதியில் அவர்கள் அனைவரும் கிறிஸ்துவர்களே.)அன்றைய தேதியில் உலகின் மிக வலுவான ராணுவம் கொண்ட தேசங்களுள் ஒன்று எகிப்து. ரோமானிய ராணுவத்துக்கு அடுத்தபடி மிகப்பெரிய ராணுவமாக அது இருந்தது.
பேரரசின் ஆண்டுச் செலவுக்கணக்கில் மூன்றிலொரு பங்கை ராணுவத்துக்குச் செலவழித்துக்கொண்டிருந்தார்கள். (மிகப்பெரிய குதிரைப்படையும், கடலளவு நீண்ட காலாட்படையும், அச்சமூட்டக்கூடிய யானைப்படையும் கொண்டது எகிப்து ராணுவம் என்று எழுதுகிறார் இப்னு அஜ்வி என்கிற ஒரு சரித்திர ஆசிரியர். யுத்தங்களுக்காகவே ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து யானைகளை ஓட்டிவந்து வருடம் முழுவதும் பழக்குவார்களாம்.)
ஆனால், புதியதொரு பேரரசை நிறுவுவது என்கிற மாபெரும் கனவுடனும் தன்னம்பிக்கையுடனும் யுத்தத்தில் பங்குபெற்ற இஸ்லாமிய வீரர்களின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு முன்னால் பைசாந்திய ராணுவத்தால் தாக்குப்பிடிக்க இயலவில்லை. பல இடங்களில் தோல்வியை ஒப்புக்கொண்டு முழந்தாளிட்டார்கள்.
வேறு பல இடங்களில் வாளுக்கு இலக்காகி அவர்களது தலைகள் மண்ணைத் தொட்டன. (யுத்தத்தில் வாகனங்களாகப் பயன்படுத்தப்பட்ட மிருகங்களின்மீது தாக்குதல் தொடுப்பதில்லை என்பதை உமர் ஒரு
கொள்கையாக வைத்திருந்ததாகச் சில ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இதற்குத் தக்க ஆதாரங்களாக மிகப்பழைய அதாவது கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு மிக நெருக்கமான பிரதிகளிலிருந்து எதையும் பெற இயலவில்லை.)
சரித்திரத்தில், மிகக் கடுமையான யுத்தங்கள் என்று வருணிக்கப் படுவனவற்றுள் ஒன்று இது. எத்தனை தினங்கள் நடைபெற்றன என்பது பற்றிய திட்டவட்டமான புள்ளிவிவரங்கள் ஏதும் கிடைக்கவில்லையாயினும், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகே பைசாந்தியர்கள் தோல்வியைத் தழுவியதாகத் தெரிகிறது.
எகிப்துப் பேரரசின் மீதான உமரின் இந்தத் தாக்குதலை முதலில் வைத்துத்தான், வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்பத் தொடங்கினார்கள் என்று மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் ஆரம்பிக்கிறார்கள். ஆனால், யுத்தத்தின் இறுதியில் நடைபெற்ற சம்பவத்தை ஒருகணம் சிந்திக்க இயலுமானால் இந்த வாதத்தின் அடிப்படை நொறுங்கிவிடுவதைப்
பார்க்கலாம்.
அன்றைய எகிப்துப் பேரரசு என்பது இன்றைய எகிப்து நிலப்பரப்பு அளவே உள்ளதல்ல. வடக்கே பாலஸ்தீனைத் தாண்டி சிரியாவுக்கு அப்பாலும் சிறிது பரவியிருந்தது.
வடகிழக்கில் ஜோர்டானின் சில பகுதிகளும் அன்றைய எகிப்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. இன்னும் எளிமையாகப் புரிய வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம்.
ஜெருசலேத்தை மையமாக வைத்து ஒரு வட்டம் போட்டால், அந்த முழு வட்டமும் எகிப்து சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்டதாக இருந்தது.
யுத்தத்தில் வெற்றிகண்ட உமரின் ராணுவம், பெருத்த ஆரவாரத்துடன் ஜெருசலேத்தில் நுழைந்தது. பாலஸ்தீனத்து அரேபியர்கள் அத்தனை பேரும் மகிழ்ச்சிப் பெருக்கில் பிரமாண்டமான வரவேற்பு விழா எடுத்தார்கள். (உமர் பாலஸ்தீனுக்குள் நுழைவதற்கு முன்பே இஸ்லாம் அங்கே நுழைந்துவிட்டது என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்!)
கிறிஸ்துவர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்துவிட்டோம் என்கிற பரவசத்தில், அந்த வெற்றியை இறைவனின் வெற்றியாக முழக்கமிட்டார்கள். பாலஸ்தீனில், யூதர்களின் மேலாதிக்கத்தை கிறிஸ்துவர்கள் அடக்கியிருந்தார்கள்.
இப்போது கிறிஸ்துவர்களின் ஆதிக்கத்துக்கும் ஒரு முடிவு வந்திருக்கிறது என்கிற சந்தோஷம் அவர்களுக்கு. இந்த மகிழ்ச்சியை எதிலிருந்து கொண்டாட ஆரம்பிக்கலாம்?மிகச்சிறந்த வழி, ஜெருசலேம் நகரின் புகழ்பெற்ற, மாபெரும் கிறிஸ்துவ தேவாலயத்தில் உமர், தொழுகை செய்யவேண்டும்.
அதன்மூலம் பாலஸ்தீனில் இஸ்லாம் காலூன்றிவிட்டதை அழுத்தந்திருத்தமாக நிறுவிவிடலாம்.ஒட்டுமொத்த பாலஸ்தீனத்து அரேபியர்களும் இத்திட்டத்தை ஆமோதித்து உமரிடம் தங்கள் விருப்பமாக இதனைத் தெரிவித்தார்கள்.
ஆனால் உமர் உடனடியாக இதை மறுத்துவிட்டார். அவர் சொன்ன காரணம் : "நான் தொழுகை நடத்தினால், முதல்முதலில் தொழுகை நடத்தப்பட்ட இடம் என்று சொல்லி நீங்கள் மசூதி கட்டிவிடுவீர்கள். அது கிறிஸ்துவர்களுக்கு வருத்தம் தரலாம்."
இது கதையல்ல. இஸ்லாமிய சரித்திரத்தின் ஓரங்கமான இச்சம்பவம் அனைத்து யூத, கிறிஸ்துவ வரலாற்று நூல்களிலுமேகூடப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
"முகம்மது நபியே ஒரு கட்டத்தில் யூத மதத்துக்கு மாறிவிடத் தயாராக இருந்தார்" என்று எவ்வித ஆதாரமும் இல்லாத வாதத்தை முன்வைத்த யூத சரித்திர ஆராய்ச்சியாளர் மார்ட்டின் கில்பர்ட் போன்றவர்கள் கூட உமரின் இந்த முடிவையும், இதனைத் தொடர்ந்து கலீஃபாக்களின் ஆட்சியில் யூதர்கள் எத்தனை நிம்மதியுடன் வாழ முடிந்தது என்பதையும் பக்கம் பக்கமாக வருணித்திருக்கிறார்கள்.
உமரின் தோற்றம் குறித்து எழுதியிருக்கும் ஆசிரியர்கள் அத்தனைபேரும் அவரை அபூபக்கரைக் காட்டிலும் எளிமையானவராகவே சித்திரித்திருக்கிறார்கள்.
அவர் புதிய ஆடைகள் அணிந்து ஒருபோதும் பார்த்ததில்லை என்று சொல்லுகிறார்கள். எப்போதும் துண்டு துண்டாக துணிகளைத் தொகுத்து, கையால் தைத்து ஒட்டுப்போட்ட அங்கியையே அவர் அணிந்திருப்பார். அணிந்திருக்கும் ஓர் அங்கி, மாற்று உடையாக ஓர் அங்கி. இதைத்தவிர வேறு உடைகள் அவருக்குக் கிடையாது. அபூபக்கரைப் போலவே, தன் அகங்காரம்
மிகுந்துவிடாமலிருப்பதற்காக, வீடு வீடாகப் போய் காலைவேளையில் பால் கறந்து கொடுப்பது, வயதான பெண்மணிகளின் வீடுகளுக்குப் போய்ப் பாத்திரங்கள் தேய்த்துக் கொடுப்பது, துணிகளைத் துவைத்துக் காயவைத்து, மீண்டும் மாலை வேளையில் சென்று மடித்துத் தந்துவருவது என்பன போன்ற நம்பமுடியாத காரியங்களை கலீஃபா ஆன பிறகும் உமர் தொடர்ந்து செய்துவந்திருக்கிறார்.
தங்களது சக்ரவர்த்தி எப்படியெல்லாம் இருப்பார் என்கிற பெரிய எதிர்பார்ப்புடன் ஜெருசலேமில் உமரின் நகர்வலத்தின்போது பார்க்கக் கூடிய அரேபியர்கள் வியப்பில் பேச்சு மூச்சற்றுப் போய்விட்டார்களாம். மாபெரும் வீரர் என்று வருணிக்கப்படும் உமர், அந்த நகர்வலத்தின்போது ஓர் எளிய சந்நியாசியைப் போலவே காட்சியளித்தார் என்று எழுதுகிறார்கள் பல சரித்திர ஆசிரியர்கள்.
நகர்வலத்தின் இறுதியில் மக்களிடையே உரையாற்றிய உமர், ஒரே ஒரு விஷயத்தை மிகவும் அழுத்தம் கொடுத்துப் பேசினார். "யூதர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் மூவருமே இப்ராஹிமின் (ஆபிரஹாம்) வழித்தோன்றல்கள். சண்டையின்றி ஒற்றுமையாக வாழவேண்டியது அவசியம்.
"இந்தச் சொற்பொழிவு, அதுநாள் வரை ஜெருசலேமை ஆட்சி செய்துவந்த கிறிஸ்துவர்களுக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தைத் தந்தது.
பொதுவாகப் போரில் வெல்லும் மன்னர்கள், தமது மதத்தை அனைவரும் ஏற்றே தீர நிர்ப்பந்தம் செய்வதே அந்நாளைய வழக்கம். ஒரு மாறுதலுக்கு உமர், கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாமல், அவர்களால் விரட்டியடிக்கப்பட்ட ஜெருசலேம் நகரின் யூதர்களையும் திரும்பவந்து அங்கே வாழும்படி அழைப்பு விடுத்தார்.
"நீங்கள் தைரியமாக ஜெருசலேத்துக்குத் திரும்பிவரலாம். யாராலும் உங்களுக்குத் தீங்கு நேராமல் பார்த்துக்கொள்வது என் பொறுப்பு" என்கிற உமரின் உத்தரவாதத்தை நம்பி சுமார் எழுபது யூதக் குடும்பங்கள் அன்று ஜெருசலேம் திரும்பியதாகத் தெரிகிறது.
இதோடு நிறுத்தவில்லை. ஜெருசலேத்திலிருந்து யூதர்களை கிறிஸ்துவர்கள் விரட்டியபிறகு, அங்கிருந்த யூத தேவாலயங்கள் நகரசபையின் கழிவுப்பொருள் சேகரிப்புக் கிடங்குகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அதாவது, கிறிஸ்துவர்கள் தமது யூதவெறுப்பை அப்படியாக வெளிக்காட்டியிருந்தார்கள்.
ஜெருசலேம் கைப்பற்றப்பட்டபிறகு அங்கே உமர் வெளியிட்ட முதல் அரசு உத்தரவு, அந்தக் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டுமென்பதுதான். உத்தரவிட்டதுடன் நின்றுவிடாமல், குப்பை அள்ளும் பணியில் முதல் கரம் கொடுத்ததும் அவரேதான்.
இதுவும் பல யூத சரித்திர நூல்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் சம்பவமே. (ஆனால் கிறிஸ்துவ ஆசிரியர்களின் நூல்களில் இந்தச் சம்பவம் எழுதப்பெறவில்லை.)
ஆனால் இத்தனை பரந்த மனம் படைத்தவராக இருந்த உமர், முஸ்லிம் அல்லாத பிற இனத்தவர் அனைவரையும் இஸ்லாமியப் பேரரசின் எல்லைக்கு உட்பட்ட கடலோரப் பகுதிகளில் இருந்தும், மெக்கா, மதினா ஆகிய நகரங்களிலிருந்தும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி, வேறு இடங்களில் வசிக்க நிர்ப்பந்தித்ததாக ஒட்டுமொத்த யூத, கிறிஸ்துவ சரித்திர ஆசிரியர்களும் தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார்கள். இக்குற்றச்சாட்டுக்கு இஸ்லாமியர் தரப்பு பதில் என்று குறிப்பிடும்விதமாக ஏதும் கிடைக்கவில்லை.
******************************************
Source : http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/21-22-21-22.html21-22.இஸ்லாத்தின் வானளாவிய வளர்ச்சியின் அஸ்திவாரம்.கலீஃபா உமர்.பகுதிகள். 21-22
No comments:
Post a Comment